Published : 01 Oct 2014 10:32 AM
Last Updated : 01 Oct 2014 10:32 AM

இணையதளம் மூலம் ஒரு இணையற்ற சேவை: 9 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு ரத்ததானம்

அக்டோபர் 1-ம் தேதி தேசிய ரத்த தான நாள். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷெரீப் என்ற இளைஞர் 2005-ல் தொடங்கிய >friends2support.org என்ற இணையதளத்தில் இந்தியா முழுமைக்கும் இதுவரை ஒன்றரை லட்சம் பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். எதற்காகத் தெரியுமா? ரத்த தானம் செய்வதற்காக.

இந்த இணையதளத்தில் இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்கள், மாவட்டங்கள், தாலுகா தலைமையகங்கள், முக்கிய நகரங்கள் அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு நகரத்திலும் உள்ள குருதிக் கொடையாளர்கள் பற்றிய விவரங்கள், ரத்த குரூப் வாரியாக அலைபேசி எண்ணுடன் இந்த இணையத்தில் இருக்கின்றன. இதன்மூலம், இந்தியாவில் எந்த மூலையில் இருப்பவர்களும் எந்த வகை குருதி கொடையாளர்களையும் (பிளட் டோனர்) இடைத்தரகர்கள் இல்லாமல் உடனடியாக தொடர்புகொண்டு ரத்த தானம் பெற முடியும்.

1.5 லட்சம் கொடையாளர்கள்

ஷெரீப் தனது நண்பர்கள் 200 பேரை வைத்து தொடங்கிய இந்த இணையதளத்தில் இப்போது சுமார் ஒன்றரை லட்சம் டோனர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசினார் இந்த இணையதளத்தின் தமிழகத்துக்கான ஒருங்கிணைப் பாளர் ராமநாதபுரம் சதீஷ்குமார். ‘‘ஒரு சமயத்தில், ஹைதராபாத்தில் தேவையான நேரத்துக்கு தேவையான பிரிவு ரத்தம் கிடைக்காமல் நிறைய உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இந்த அவலத்தைப் பார்த்துவிட்டுத்தான் இந்த இணையதளத்தைத் தொடங்கினார் ஷெரீப். பிறகு சமூக வலைதளங்கள் மூலமாக அதை பிரபலப்படுத்தினார். அதைப் பார்த்துவிட்டு நிறைய நண்பர்கள் இதில் இணைந்தார்கள்.

எங்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள ரத்த தான அமைப்புகள் பெரும் உதவி செய்தார்கள். எங்கள் இணையதளம் மூலம் இதுவரை சுமார் 2 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதில் பதிவு செய்திருப்பவர்கள் ஒருமுறை ரத்தம் கொடுத்துவிட்டால் அதிலிருந்து 90 நாட்களுக்கு அவர்கள் பெயர் அதுவாகவே நீக்கப்பட்டுவிடும். அதேபோல், 90-வது நாள் அந்த நபருக்கு, ‘நாளை முதல் நீங்கள் ரத்த தானம் செய்யலாம்’ என குறுந்தகவல் போய் விடும்; இணையதளத்திலும் மீண்டும் அவர்கள் பெயர் வந்துவிடும்.

புதிய அப்ளிகேஷன்

பதிவு செய்துள்ள டோனர்கள் ரத்த தானம் கொடுக்க தயங்கினாலோ அல்லது வேறு ஏதாவது காரணம் சொல்லி ரத்த தானம் செய்வதைத் தட்டிக் கழித்தாலோ, இணையதளத்தில் ‘ரிப்போர்ட்’ என்ற பகுதியில் அந்த விபரத்தைப் பதிவு செய்யவும் இதில் வழி இருக்கிறது. இப்படிப் பதிவாகும் டோனர்களின் பெயர்கள் உடனடியாக லிஸ்ட்டில் இருந்து அகற்றப்படும்.

ஆண்ட்ராய்டு, ஐ போன் மற்றும் விண்டோஸ் போன்களிலும் இந்த வசதியை பெறும் வகையில் கடந்த ஆண்டு புதிய இலவச அப்ளிகேஷன் ஒன்றையும் அறிமுகப்படுத்தினோம்.

கேரள மாநிலத்துக்கான ஒருங்கிணைப்பாளர் ஜெயந்த் ஜஸ்டின்தான் இந்த அப்ளிகேஷனை உருவாக்கினார். கடந்த ஆண்டு ராமநாதபுரத்தில் இதை அறிமுகப் படுத்தினோம். ரத்த தான சேவையை ஊக்கப்படுத்துவதோடு மட்டுமில் லாமல் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறோம்.

சேவைக்காக சர்வதேச விருது

எங்களுடைய இந்த இணைய தள சேவைக்காக லிம்கா விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. வறுமை ஒழிப்பு, பட்டினி ஒழிப்பு உள்ளிட்ட சமூக சேவைகளை செய்யும் அமைப்புகளுக்கு ஆஸ்திரியாவில் உள்ள ‘வேல்டு யூத் சம்மிட்' (World Youth Summit) அமைப்பு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு அந்த விருது எங்களுக்குக் கிடைத்தது. இப்போது இந்த விருதுக்கான அமைப்புகளைத் தேர்வு செய்வதற்கு இந்தியாவுக்கான அம்பாசிடராக ஷெரீப்பை அங்கீகரித்திருக்கிறது அந்த அமைப்பு’’ பெருமிதத்துடன் சொன்னார் சதீஷ்குமார்.

வலைதள முகவரி>http://friends2support.org/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x