Published : 25 Apr 2017 05:23 PM
Last Updated : 25 Apr 2017 05:23 PM

அறம் பழகு 1: யோகேஸ்வரி- சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்குச் செல்ல காசில்லாமல் காத்திருக்கும் அரசுப்பள்ளி மாணவி!

| படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான அரசுப் பள்ளி மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் புதிய தொடர் இது. |

2015 ஆம் ஆண்டு. யோகேஸ்வரி பெரம்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அப்போது 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்திய குத்துச்சண்டைக் கூட்டமைப்பு அந்த அரசுப் பள்ளிக்கு இலவசமாகப் பயிற்சி அளித்து வந்தது. ஆர்வத்தின் காரணமாகப் பயிற்சியில் கலந்துகொண்டார் யோகேஸ்வரி.

திறமையும், ஆர்வமும் அவரைத் தொடர் வெற்றிகளை நோக்கித் தள்ளின. பயிற்சி எடுக்க ஆரம்பித்து, ஒரு வருடத்திலேயே 1 மாநில விருது, 7 தேசிய விருதுகள், 1 டைட்டில் பெல்ட் வாங்கினார் யோகேஸ்வரி.

மாநில அளவில் கீழ்ப்பாக்கத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் தங்கம், 2016-ல் தேசிய அளவில் மகாராஷ்டிராவில் நடந்த போட்டியில் வெண்கலம், பெங்களூருவில் நடந்த போட்டியில் வெள்ளி, கேரளாவில் இரண்டு தங்கங்கள், ஒரு டைட்டில் பெல்ட், டெல்லியில் ஒரு தங்கம் என ஒரே வருடத்தில் பதக்கங்களைக் குவித்திருக்கிறார் யோகேஸ்வரி.

அதே யோகேஸ்வரி இன்று, சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகொள்ள நேபாளம் செல்ல பணமில்லாமல் காத்திருக்கிறார்.

வீட்டில் தன் தாயுடன் குத்துச்சண்டை வீராங்கனை யோகேஸ்வரி

பெரம்பூர், திருவிக நகர், 19-ம் தெரு, 496-ம் எண்ணில் அமைந்திருக்கிறது அந்த வீடு. வீடு என்றால் ஓலைக்குடிசை. அதிலேதான் தங்கியிருக்கிறது யோகேஸ்வரியின் குடும்பம்.

அப்பா குடிக்கு அடிமையாய்க் கிடக்க, அம்மாவுக்கு பெரம்பூர் வீனஸ் 'அம்மா' உணவகத்தில் வேலை. தனக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி, மகளையும் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கிறார்.

தேசியப் போட்டிகளில் கலந்துகொள்ள போதிய நிதியில்லாமல் மிகுந்த சிரமப்பட்டார் யோகேஸ்வரி. அப்போது அவரின் அம்மா தன் நகையை அடகு வைத்துப் பணம் புரட்டிக் கொடுத்தார்.

திறமையுடன் விளையாடி தேசிய அளவில் பதக்கங்கள் பெற்ற யோகேஸ்வரி, தற்போது நேபாளத்தின் காத்மண்டுவில் நடைபெறும் சர்வதேச அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகளுக்குத் தேர்வாகியுள்ளார். ஜூன் 15 முதல் 18 வரையிலான 3 நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு ரூ.32,500 தேவைப்படுகிறது.

அதற்கான பணத்தைப் புரட்ட முடியாததால், தற்போது சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்ள இயலாமல் தவித்து வருகிறார் யோகேஸ்வரி.

நல்லுள்ளங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குத்துச்சண்டை வீராங்கனை யோகேஸ்வரிக்கு முடிந்தவர்கள் உதவலாமே!

யோகேஸ்வரியின் தாயாரின் தொடர்பு எண்: 9003045167.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x