Published : 23 May 2017 01:18 PM
Last Updated : 23 May 2017 01:18 PM

அதிகரிக்கும் கோடையின் தாக்கம்: பள்ளிகள் விடுமுறை நீட்டிக்கப்படுமா?

கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் விடுமுறை நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள், பெற்றோர் உள்ளனர். கோடை வெப்பத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதைத் தள்ளி வைக்க வேண்டுமென்ற கோரிக்கை பல்வேறு தரப்புகளில் இருந்தும் வலுத்து வருகிறது. ஆனால், பள்ளிக் கல்வித்துறையில் இது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்போது விடுமுறையை நீட்டித்தால், சனிக்கிழமைகளில் பள்ளிகளை வைத்து பள்ளி வேலை நாட்கள் பூர்த்தி செய்யப்படும். வார்தா புயல், வெள்ளம் போன்ற எதிர்பாராத இயற்கை இடர்கள் ஏற்பட்டால் விடுமுறை விட வேண்டும். அது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமே அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் தற்போது நீட்டிப்பு தேவையில்லை என்று மற்றொரு தரப்பில் வாதிடப்படுகிறது.

பள்ளி விடுமுறை நாட்களை நீட்டிப்பது அவசியமா, இல்லையா என்று பல்வேறு தரப்பினரிடம் கேட்டோம்.

தேவநேயன், குழந்தைகள் உரிமைகள் செயற்பாட்டாளர்:

முதலில் இதுதொடர்பாக முடிவெடுப்பது யார் என்ற கேள்வி என்னுள் எழுகிறது. அந்த முடிவு குழந்தைகளின் நலனை மையப்படுத்தித்தான் இருக்கிறதா என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. கோடை, தண்ணீர்ப் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களுக்காக விடுமுறை நீட்டிப்பு வேண்டும் என்கிறார்கள். ஆனால் வீட்டில் குழந்தைகள் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக, விடுமுறையாக உணர்கிறீர்களா? நான் விளிம்பு நிலை மாணவர்களைப் பற்றியே பேசுகிறேன்.

அவர்களுக்குப் பள்ளிதான் பாதுகாப்பு; புகலிடம். ஒரு வேளை சோற்றுக்காக பள்ளி வரும் மாணவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அதனால் நீட்டிப்பு வேண்டுமா, இல்லையா என்று யோசிப்பதைவிட பள்ளிகளின் தரமான கட்டமைப்பு, சிறந்த கல்வி உள்ளிட்ட தீர்வுகள் எட்டப்பட வேண்டும். பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அவர்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

ஜான் பிரபு, மெட்ரிக் பள்ளிகள் கூட்டமைப்பின் துணைத் தலைவர்:

பள்ளிகளுக்கான விடுமுறை நீட்டிப்பு கட்டாயம் வேண்டும். வெயிலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே தவிரக் குறைந்தபாடில்லை. ஆரம்பக் கல்வி கற்கும் சின்னக் குழந்தைகள் நிச்சயம் வெயிலைத் தாங்கமாட்டார்கள்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மழைப் பொழிவு குறைவாகத்தான் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மழையே இல்லை. இதனால் நீர்ப் பற்றாக்குறையும் அதிகமாகிவிட்டது. அதனால் இப்போது விடுமுறையை நீட்டித்து பின்னாட்களில் பள்ளியை வைத்துக்கொள்வதில் தவறில்லை.

சித்ரா, அரசுப் பள்ளி ஆசிரியை:

விடுமுறை நீட்டிப்பு தேவையில்லை. கிராமத்து மாணவர்களைப் பொறுத்தவரையில் பள்ளி விடுமுறை நாள்தான் அவர்களுக்கான வேலை நாள். பள்ளி செல்வது ஜாலியான நாள். இதோ இன்றுகூட என்னுடைய மாணவர்கள் வெள்ளரி பறிக்கச் செல்வதாகச் சொன்னார்கள்.

வெயிலால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது கிராமத்துக் குழந்தைகளுக்குப் பொருந்தாது. அவர்கள் வெயிலில்தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள், பொழுதைக் கழிக்கிறார்கள். இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். எங்கள் மாணவர்கள் பள்ளி வந்தால்தான் நிழலில், பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

இப்போது விடுமுறையை நீட்டித்தால், சனிக்கிழமைகளில் மீண்டும் பள்ளிகளை வைப்பீர்களே! அதற்குப் பதிலாக விடுமுறை நீட்டிப்பே தேவையில்லை என்பது என்னுடைய கருத்து.

பிரகதீஷ், மாணவர்:

விடுமுறை என்பது எங்களுக்கு அவசியமான ஒன்று. ஆண்டு முழுவதும் படித்துவிட்டு அந்த ஒரு மாதம்தான் ஓய்வெடுக்கிறோம். பிடித்த கலைகளைக் கற்கிறோம். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறோம். அப்போது கிடைக்கும் புத்துணர்ச்சிதான் எங்களை அடுத்த ஆண்டு முழுக்கச் செயல்பட வைக்கிறது.

இப்போது கடும் வெயிலில் பள்ளிகள் திறக்கப்பட்டால், பள்ளிக்குச் சென்று வருவதே பெரிய வேலையாகத்தான் இருக்கும். அங்கே படிக்க முடியாது.

ரேங்கிங் நீக்கம், பிளஸ் 1-க்கு பொதுத் தேர்வு, சீருடைகள் மாற்றம், யோகா வகுப்பு, மூத்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட வல்லுநர் குழு பரிந்துரைகள், கேள்வி முறையில் மாற்றம் என அதிரடி மாற்றங்களைச் செயல்படுத்தி வரும் பள்ளிக் கல்வித்துறை விடுமுறை நீட்டிப்பு விஷயத்தில் என்ன செய்யப் போகிறது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x