Published : 05 Apr 2017 10:20 AM
Last Updated : 05 Apr 2017 10:20 AM

உள்ளாட்சி: கேரளத்தின் முதல்வர், அமைச்சர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள்?

தமிழகத்தின் முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் எல்லாம் இன்றைய தினம் எங்கு இருப்பார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். சரி, கேரளத்தின் முதலமைச்சர், அமைச்சர்கள் இவர்கள் எல்லாம் இன்றைய தினம் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியுமா?

கிராமப் பஞ்சாயத்தில். ஆம், முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடக்கும் கிராம சபை மற்றும் வார்டு சபைக் கூட்டங்களில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது கேரள மாநில அரசு.

எதற்காக இந்த ஏற்பாடு?

இன்றைய இந்தியாவில் சாதாரணக் குடிமகன் எதிர்பார்ப்பது என்ன? அரசு திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக தங்களுக்கு வந்து சேரவேண்டும். இது தானே! இது என்ன பேராசையா? ஆனால், தமிழகத்தில் விவசாயத் திட்டங்களுக்காகவும், நீர்நிலைகளை மேம்படுத்தவும் ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் பணம் என்ன ஆனது என்பதை கடந்த பல அத்தியாயங்களில் பார்த்தீர்கள்.

ஆனால், கேரளத்தில் அதுபோன்ற மக்கள் திட்டங்களுக்காக பணம் எங்கிருந்து வருகிறது? யார் வழியாக வருகிறது? அது என்ன திட்டங்களாக உருவாக்கப்படுகிறது? திட்டங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன? யார் உருவாக்குகிறார்கள்? நிதி எப்படி செலவு செய்யப்படுகிறது? இவை ஒவ்வொன்றையும் கிராம மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறது கேரள அரசு.

இதுபோன்ற கூட்டங்களில் ஏற்கெனவே கலந்துகொண்ட அனுபவம் பெற்ற வர் திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் பிரிவின் பேராசிரியர் பழனிதுரை. அவரிடம் இதுகுறித்துப் பேசினோம். “சாமானிய மக்களுக்கு தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எந்தத் துறையில் இருந்து எப்போது? யார் மூலம் வந்து சேருகிறது என்பதுதான் இன்றைய மையக் கேள்வி. இப்படி ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் நடப்பதே நமது நாட்டின் மிக முக்கியமான பிரச்சினை. இதைத் தடுத்து நிறுத்த வாய்ப்புகள் இருக்கின்றனவா எனில் இருக்கிறது. உண்மையில், ஒரு பைசாகூட இழப்பில்லாமல் மக்களின் வரிப் பணம் மக்களுக்குச் சென்று அடையுமாறு செய்ய முடியும்.

ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில்தான் அதிகார வர்க்கம் கவனமாக இருக்கிறது. ஆகவேதான் மக்கள் பணம் மக்களுக்காக செயல்படும்போது, பணம் வருகின்ற வழியைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ரகசியம் காக்கிறார்கள். ஆனால், கேரளத்தில் நிலைமை இப்படி இல்லை. அங்கு கிராமப் பஞ்சாயத்துகள் மூலம் இதனை சாத்திய மாக்கியிருக்கிறது கேரள அரசு.

இதற்கு பஞ்சாயத்தை வலுப்படுத்தி, மக்களைத் தயார்படுத்தி பஞ்சாயத்தில் செயல்பட வைக்க மாநில அரசுக்கு துணிவு இருக்க வேண்டும். பஞ்சாயத்து அரசாங்கம் பற்றி முழு விவரம் தெரிந்துவிட்டால் மக்கள் பணத்தில் ஒரு பைசாகூட யாரும் தொடமுடியாது. இதற்கு முதல் தேவை மக்களிடம் பஞ்சாயத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அடுத் ததாக கிராமத்தைப் புனரமைக்க வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டம் மக்களின் பங்களிப்போடு தயாரிக்க முற்பட வேண்டும்.

நமது 14-வது நிதிக்குழு அதைத்தான் பரிந்துரைத்தது. அப்படி திட்டம் தயாரிக் கும்போது மத்திய மாநில அரசுத் திட்டங் களைப் பஞ்சாயத்துத் திட்டத்தில் சேர்த்து, அந்தத் திட்டச் செலவுக்கான நிதிகளையும் பஞ்சாயத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதை அந்த கிராம மக்களிடம் கூறி, ‘‘உங்கள் பணம் உங்கள் கையில் வந்திருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று பொறுப் பையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

இதன் மூலம் மக்களின் கவனம் முழுவதையும் பஞ்சாயத்துப் பக்கம் திரும்பச் செய்யலாம். இப்படித்தான் கேரளாவில் திட்ட மிடுதலுக்கான மக்கள் இயக்கத்தை உரு வாக்கி இருக்கிறார்கள். இதனால்தான் அந்த மாநிலம் பஞ்சாயத்து நிர்வாகத்தில் நாட்டுக்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது.

அங்கு பஞ்சாயத்துகளுக்கு ஆண்டு தோறும் வருகின்ற பணம் எவ்வளவு என்று பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும் தெரியும்; மக்களுக்கும் தெரியும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் இரண்டில் இருந்து மூன்று கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதால் மக்களின் கவனம் பஞ்சாயத்துகளின்மேல் விழுகிறது. இந்தத் திட்டத்தைத்தான் தற்போது மேலும் மெருகேற்றி அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல புதிய மக்கள் இயக்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

பாஜக பொறுப்பேற்ற பின்பு திட்டக் குழு கலைக்கப்பட்டுவிட்ட நிலையில் மிக முக்கியமான நிகழ்வு இது. இன்றைக்கு இந்தியாவில் திட்டமிடுதல் பணி ஒழிக்கப்பட்டுவிட்டது. எல்லா மாநிலங்களிலும் திட்டமிடுகின்ற பணி நிறுத்தப்பட்டுவிட்டது. திட்டமிடும் குழு மட்டும் வெறுமனே இயங்கி வருகிறது. இதன் விளைவாக 13-வது ஐந்தாண்டுத் திட்டம் என்று வரப்போவது இல்லை. இதுபோன்ற சூழலில் நாட்டில் கேரள மாநிலத்தில் மட்டுமே 13-வது ஐந்தாண்டுக்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தேசிய சாதனை இது. இதன்படி மாநிலங்கள், மாவட்ட அளவில் மட்டுமின்றி, கிராமப் பஞ்சாயத் துகளிலும் புதிய திட்டங்கள் தயார் செய்யப் பட்டு வருகின்றன. இதற்கான ஆயத்த வேலைகள்தான் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த 13-வது ஐந்தாண்டுத் திட்டத்தை பஞ்சாயத்துகளில் இறுதி வடிவம் கொடுத்து தயார் செய்வதை உறுதிப்படுத்த கேரள அமைச்சர்கள் கிராம சபைக்குச் செல்ல பணிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 2-ம் தேதியே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. மாநிலத்தின் முதல்வர் தொடங்கி அனைத்து அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிராமப் பஞ்சாயத்துகளின் கிராம சபை மற்றும் வார்டு சபை கூட்டங்களில் கலந்துகொண்டு திட்டங்களை மக்களுடன் இணைந்து தயார் செய்துவருகிறார்கள். இந்தப் பணிகள் வரும் 9-ம் தேதி வரை நடக்கிறது. அப்படி திட்டம் தயாரிக்கின்ற பணி நடக்கும்போது மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையும் பஞ்சாயத்துத் திட்டங்களில் இணைத்து, மக்கள் பங்கேற்புடன் செயல்படுத்திட வழிவகை செய்ய முழு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் இதற்கு முன்பும் முதல்வர் முதல் அனைத்து அமைச்சர்கள் வரை கிராம சபையில் கலந்துகொள்ளும் வழக்கம் இருந்ததுதான். ஆனால், இந்த முறை அமைச்சரவை முடிவாகவே இது எடுக்கப்பட்டு அமைச்சர்கள் கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்துகளுக்கு நிதி ஒதுக்கீடு கோடி களில் செய்யப்படுவதால் அங்கு நடைபெறும் திட்டங்கள் ஆக்கபூர்வமாகவும், தொழில் நுட்பரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தாகவும் அமைந்திட வேண்டும்; தவிர, மேற்கண்ட திட்டங்களில் மக்கள் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது கேரள அரசு.

இதுபோன்ற செயல்பாடுகள்தான் மக்களை பஞ்சாயத்து செயல்பாடுகளில் பங்கேற்கத் தூண்டும். நமது கிராமத்துக்கு வரவேண்டிய பணம் வந்ததா? வந்த பணம் எங்கே செலவழிக்கப்பட்டது? எப்படி செலவு செய்யப்பட்டது? யாருக்கு செலவு செய்யப் பட்டது? எப்போது செலவு செய்யப்பட்டது என்பதை அறிந்துகொள்ள அனைவருக்கும் ஆவல் வரும். அதைத் தெரிந்துகொள்ள பஞ்சாயத்துக்கு, கிராம சபைக்கு மக்கள் வருவார்கள். கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு கேள்வி கேட்பார்கள். பஞ்சாயத்துத் தலைவர் மட்டுமல்ல, அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவருமே அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

இந்த செயல்பாடுகளே அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை மேம் படுத்தும். இடைவெளியைக் குறைக்கும். மக்களுக்கு அரசின் மேல் சந்தேகங்கள் நீங்கும். நம்பிக்கை கூடும். பிம்ப அரசியல் உடைபடும். எளிய அரசியல் உருவாகும். நமது பக்கத்து மாநிலமான கேரளத்தில் இது சாத்தியப்படும்போது தமிழகத்தில் மட்டும் ஏன் முடியாது? மக்கள் நினைத்தால் மாற்றம் வரும்” என்கிறார் பழனிதுரை.

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x