Published : 06 Aug 2016 10:06 AM
Last Updated : 06 Aug 2016 10:06 AM

சிலை சிலையாம் காரணமாம் - 23: செப்பேடுகளின் நிலை!

ராஜராஜன் சிலை தஞ்சை பெரிய கோயிலில் இருந்ததுதான் என நாகஸ்வாமி நிச்சயம் உறுதிப் படுத்துவார் என்று தமிழகக் குழுவினர் ஆவலோடு எதிர் பார்த்திருந்த நிலையில், ‘இது ராஜராஜன் சிலை இல்லை’என்று ஆணித்தரமாகச் சொல்லிவிட்டார் நாகஸ்வாமி. அமைச்சர் தங்கம் தென்னரசு நாகஸ்வாமியிடம் தனியாகப் பேசிப் பார்த்தபோதும், ‘அது ராஜ ராஜன் சிலை’ என்று உறுதிப் படுத்த மறுத்துவிட்டார். அதற்கு மேல் எதுவும் பேசமுடி யாமல் போனதால், வெறும் கையுடன் வீடு திரும்பியது தமிழகக் குழு.

‘இந்த முரண்பாடு ஏற்பட்டது ஏன்?’ என நாகஸ்வாமியிடம் கேட்ட தற்கு, ‘‘டெல்லி மியூசியத்துக்கு நான் நூல் எழுதியபோது, சாராபாய் மியூசியத்தில் இருப்பது ராஜராஜன் சிலைதான் என ஒரு ஊகத்தின் அடிப்படையில்தான் எழுதிக்கொடுத்தேன். ஆனால், சிலையை நேரில் பார்த்த பிறகு மாற்றுக் கருத்து வந்துவிட்டது. மியூசியத்தில் இருப்பது சோழர் காலத்துச் செப்புச் சிலைதான். ஆனால், அது ராஜராஜன் சிலை என்பதற்கு உரிய ஆதாரம் இல்லை. அந்தக் காலத்தில் சண்டிகேஸ்வரர் சிலைகளைக் கூட இதே தோற்றத்தில் செய் திருக்கிறார்கள். அப்படி இருக் கும்போது, அது ராஜராஜன் சிலை என்பதை எப்படி உறுதிப் படுத்த முடியும்? அந்தச் சிலை தஞ்சையில் இருந்தது என்பதற் கான அடையாளமோ, அது அங்கிருந்து காணாமல்போனது குறித்து புகார் செய்யப்பட்டதற் கான ஆதாரமோ இல் லாதபோது, எந்த அடிப் படையில் அது ராஜராஜன் சிலைதான் என நாம் உரிமை கொண்டாட முடி யும்?’’ என்றார்.

அது ராஜராஜன் சிலையே இல்லை என்று ஒரு வாதத்துக்காக வைத் துக்கொண்டாலும் இருப துக்கும் மேற்பட்ட சோழர் காலத்துச் செப்புத் திருமேனிகள் குஜராத்துக்கு அதுவும் ஒரு தனியார் மியூசியத்தின் கைக்குப் போனது எப்படி என்பது குறித்து விசாரிக்கக்கூட இங்குள்ள யாரும் இதுவரை மெனக்கெட்டதாகத் தெரியவில்லை.

கோயில் சிலைகள் மாத்திர மல்லாமல் பழங்காலத்து தேர் சிற்பங்கள், பழமையான செப்பேடுகள் உள்ளிட்டவைகளும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் மன்னர்கள் தங்களது முக்கியமான அரசாணைகளை செப்பேடுகளில்தான் வெளி யிட்டார்கள்.

எதற்காக அந்த ஆணைகள் வெளியிடப்பட்ட னவோ, அது தொடர்பான அம்சங்கள் மட்டுமல்லாது, ஆணை வெளியிடப்பட்டபோது இருந்த அரசு அதிகாரிகள், ஆட்சி முறை உள்ளிட்ட தகவல்களும் அந்தச் செப்பேடுகளில் விவரிக் கப்படும். ‘கல்லிலும் செம்பிலும் வெட்டினான்’ எனச் சோழர் காலத்து கல்வெட்டுக்கள் பல வற்றில் வரிகள் வருகின்றன. ஆனால், கல்வெட்டுகள் மட்டும் தான் நம்மிடம் உள்ளன. பெரு வாரியான செப்பேடுகள் எங்கே போயின என்றே தெரிய வில்லை.

முதலாம் ராஜராஜன் தனது 21-வது ஆட்சி ஆண்டில், (கி.பி. 1005) நாகை அருகே அமைந்த சூடாமணி புத்த விகாரைக்கு ஆனைமங்கலம் என்ற ஊரை தானமாக எழுதிக் கொடுத்தான். இந்தோனேசியா அருகே கடார தேசத்தை ஆண்ட சூடாமணி வர்மனின் குமாரர் மாற விஜயதுங்க வர்மன்தான் அந்த புத்த விகாரையை அமைத்தவர் என்பதால், அவரது பெயருக்கு ஆனைமங்கலத்தை செப்புப் பட்டயம் எழுதிக் கொடுக்கிறான் ராஜராஜன்.

ஆனைமங்கலம் செப்பேடு

ராஜராஜன் செப்புப் பட்டயத் தில் அளித்த அந்த அரசாணையை கி.பி. 1090-ல் முதலாம் குலோத்துங்கன் மீண்டும் உறுதிப் படுத்தி இன்னொரு ஆணை வெளியிடுகிறான். ராஜராஜன் வெளியிட்ட செப்புப் பட்டயம் ‘ஆனைமங்கலம் பெரிய செப் பேடு’ என்றும் குலோத்துங்கன் வெளியிட்டது ‘ஆனைமங்கலம் சிறிய செப்பேடு’ எனவும் சொல்லப்படுகிறது. பெரிய செப்பேடு 21 ஏடுகளைக் கொண்டது. இதில் முதல் ஐந்து ஏடுகள் வடமொழியில் 111 வரிகள் கொண்டது. எஞ்சிய ஏடுகள் தமிழில் 332 வரிகள் கொண்டது. சிறிய செப்பேடு 3 ஏடுகளில் 52 வரிகளைக் கொண்டது.

16-ம் நூற்றாண்டின் பிற் பகுதியில் டச்சுக்காரர்கள் இந்தியாவை தங்களது ஆதிக் கத்தில் வைத்திருந்தபோது நாகப்பட்டினத்தை தங்களது வணிக நகரமாக வைத்திருந் தார்கள். அந்த சமயத்தில் இவ்விரண்டு செப்பேடுகளும் நாகையில் இருந்து நெதர் லாந்துக்குக் கடத்தப்பட்டது. தற்போது இவ்விரு செப்பேடு களும் தெற்கு ஹாலந்தில் உள்ள லைடன் பல்கலைக் கழக மியூசியத்தில் வைக்கப் பட்டுள்ளன.

இந்தச் செப்பேடுகளில் வெறும் அரசாணைகள் மட்டுமின்றி வேறு சில வரலாற்றுப் பதிவு களும் உள்ளன. சோழர்கள் அண்டை நாடுகளுடனும் சுமூக உறவை வைத்திருந்து தங்களது வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்தினார்கள் என் பதற்குச் சான்று இந்த செப்பேடுகள். ராஜராஜன் காலத் தில்தான் தமிழ் மொழி யானது அழகுபெற்று எளிய நடைக்கு வந்தது. இதற் கான ஆதாரங்களும் இந்தச் செப்பேடுகளில் உள்ளன.

தெளிவான விவரம்

இதேபோல்தான் வேள்விக் குடி செப்பேடும். கி.பி. 770-ல் பராந்தகன் நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனால் வெளியிடப்பட்டது இந்தச் செப்பேடு. களப்பிரர்களிடம் இருந்து தமிழகத்தை பாண்டி யர்கள் எப்படி மீட்டெடுத்தார்கள் என்பதை தெளிவாக விவரிக்கிறது இந்தச் செப்பேடு. இது மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் பாண்டிய மன்னர்களின் பரம்பரை வரலாறேகூட நமக்குத் தெரியாமல் போயிருக்கலாம். பத்து ஏடுகளைக் கொண்ட இந்தச் செப்பேடானது தற்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளது.

செப்பேடுகள் மாத்திரமல்ல; நாகப்பட்டினம் புத்த விகாரையில் இருந்த புத்தர் சிலை ஜப்பான் வரைக்கும் போனதும் இப்படித் தான்.

- சிலைகள் பேசும்…

முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 22: தஞ்சை ராஜராஜன், லோகமாதேவி சிலைகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x