Published : 16 Jul 2015 10:25 AM
Last Updated : 16 Jul 2015 10:25 AM

ரூ.5.35 லட்சம் கோடி மதிப்பீட்டிலான கங்கா குமரி நீர்வழிச் சாலைத் திட்டம் விரைவில் நிறைவேற்ற பரிசீலனை

15 கோடி ஏக்கருக்கு பாசனம்.. 60 கோடி பேருக்கு குடிநீர்

கங்கா - குமரி தேசிய நவீன நீர்வழிச் சாலைத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ரூ.5.35 லட்சம் கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்தை செயல்படுத்தினால் ஆண்டுதோறும் 15 கோடி ஏக்கர் விவசாய நிலங் களுக்கு தண்ணீரும், 60 கோடி மக்களுக்கு குடிநீரும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தேசிய அளவில் நதிகளை இணைக்க பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனவே, அவ்வாறு நதிகளை இணைக்காமலேயே தேசிய நீர்வழிச் சாலைச் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

2003-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நதிநீர் இணைப்பு தொடர்பாக உயர்நிலை நிபுணர் குழு உருவாக்கப்பட்டது. சுரேஷ் பிரபு எம்.பி. தலைமையில் 13 உறுப்பினர்களைக் கொண்ட அக் குழுவில் மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் ஏ.சி.காமராஜும் இடம்பெற்றார். இப்போதும் அதில் உறுப்பினராக தொடரும் காமராஜ், கங்கா - குமரி தேசிய நவீன நீர்வழிச் சாலை திட்டம் குறித்து ‘தி இந்து’விடம் கூறியதாவது:

‘‘தேசிய நவீன நீர்வழிச் சாலைக் கான மாதிரி திட்டத்தை 12 ஆண்டு களுக்கு முன்பே மத்திய அரசுக்கு கொடுத்தோம். பரிசீலனைக்காக வந்த மொத்தம் 21 திட்டங்களை ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு செய்து, எங்களது யோசனையை தேர்வு செய்தனர்.

அனைத்து மாநிலங்களிலும் ஓடும் நதிகளை இணைப்பதற்கு பதிலாக அவற்றின் அருகே புதிதாக கால்வாய்களை வெட்டி அதில் தண்ணீரைச் செலுத்தி நீர்வழிச் சாலையாக பயன்படுத்தலாம் என்பதுதான் எங்களது யோசனை. வெள்ளம் வரும்போது ஆறுகளில் பாயும் உபரிநீர் மட்டுமே இந்த கால்வாய்களுக்குத் திருப்பப்படும் என்பதால் அனைத்து மாநிலங் களும் இதை ஏற்றுக்கொண்டன. ஆனால், திட்டம் செயலாக்கம் பெறுவதற் குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிடப்பில் போய்விட்டது.

இந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு ஜூலையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி எங்களை டெல்லிக்கு அழைத்துப் பேசினார். ‘நீர்வழிச் சாலைத் திட்டங்களின் 2-ம்கட்டமாக தேசிய அளவில் 110 ஆறுகளை நீர்வழிச் சாலைகளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த உள் ளோம். 3-ம்கட்டமாக, நீங்கள் தெரிவித்திருக்கும் கங்கா - குமரி தேசிய நவீன நீர்வழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளோம்’ என்றார். இந்த திட்டத்துக்கான மாதிரி வடிவத்தை தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம்.

கங்கை முதல் குமரி வரை 15 ஆயிரம் கி.மீ.க்கு நீர்வழிச் சாலை அமையும். இதில் இருந்து ஆண்டுதோறும் 15 கோடி ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீ ரும், 60 கோடி மக்களுக்கு குடி நீரும், 20 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். இத் திட்டத்தை முழுமையாக செயல் படுத்த ரூ.5.35 லட்சம் கோடி (2003 நிலவரப்படி) செலவாகும். திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்’’ என்றார்.

15,000 டிஎம்சி தேக்கலாம்

120 மீட்டர் அகலம், 10 மீட்டர் ஆழம் கொண்டது கங்கா - குமரி தேசிய நீர்வழிச் சாலை. இது வடக்கு, தெற்கு, மத்தி என 3 பிரிவுகளாக நீர்ப்பிணைப்பை ஏற்படுத்தும் இருவழிப் போக்குவரத்து திட்டம். வடக்கு நீர்வழிப் பாதை 4,500 கி.மீ. நீளம் கொண்டது. இது கங்கை, பிரம்மபுத்திரா நதிகளின் அனைத்து கிளை நதிகளையும் ஒன்றிணைக்கும்.

மத்திய நீர்வழிப் பாதை (5,750 கி.மீ. நீளம்), தெற்கு கங்கை, மகாநதி, நர்மதை, தபதி நதிகளின் அனைத்து கிளை நதிகளையும் இணைக்கும். தெற்கு நீர்வழிப் பாதை (4,650 கி.மீ. நீளம்) கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, மற்றும் கேரளாவில் மேற்கு நோக்கிப் பாயும் அனைத்து நதிகளையும் இணைக்கும். இந்த 3 பாதைகளிலும் ஆண்டுக்கு சுமார் 15,000 டிஎம்சி வெள்ள நீரை தேக்க முடியும். இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும்.

இத்திட்டத்தை நிறைவேற்றி முடிக்க 10 ஆண்டுகள் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x