Last Updated : 29 Jun, 2015 10:25 AM

 

Published : 29 Jun 2015 10:25 AM
Last Updated : 29 Jun 2015 10:25 AM

மகள்கள் மூலம் உலகைக் காண்கிறேன் - பனைமரம் ஏறி படிக்கவைக்கும் பார்வையற்ற ‘வைராக்கியக்காரர்’

பனை மரம் ஏறி, அதில் வரும் வருவாயைக் கொண்டு தனது இரு மகள்களையும் படிக்க வைத்து வருகிறார் பிறவியிலேயே பார்வையை இழந்த முருகாண்டி (53).

ராமநாதபுரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உச்சிப்புளி அருகே உள்ளது கடலோர கிராமமான வெள்ளரி ஓடை. கிராமத்தைச் சுற்றி பனைமரக் காடுகள் சூழ்ந்திருக்க, ஒதுக்குப்புறமாக தனி குடிசையில் மனைவி கலாவதி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார் முருகாண்டி.

அவரை சந்திக்கச் சென்றபோது, பனை ஓலைகளை விறுவிறுவென இயந்திரம்போல சீவிக் கொண்டிருந்தவர், அதை நிறுத்திவிட்டு, ‘‘இப்போ பதநீர், நுங்கு சீசன். சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்” என ஆரம்பித்தார்.

‘‘பிறவியிலேயே பார்வை கிடையாது. அப்பாவும், சிறுவயதிலேயே எங்களை விட்டுப் பிரிந்து இலங்கையில் போய் நிரந்தரமாக தங்கிவிட்டார். அம்மாதான் பாய், கூடை முடைந்து கஷ்டப்பட்டு என்னை வளர்த்துச்சு.

ஊரைச் சுத்தி பனங்காடுகளா இருந்தால, சின்ன வயசுலயே எனக்கு பனை மரம் ஏற, பாய் முடைய, நுங்கு சீவ, வேலி அடைக்க, ஓலை கிழிக்க அம்மா பழக்கினாங்க. 10 வயதில் இருந்து அம்மாவுடன் வேலைக்கும் போக ஆரம்பிச்சேன்.

அம்மாவுக்கு வயசானதால என்னை கவனிக்க முடியாம, கல்யாணம் பண்ணி வச்சாங்க. இப்ப, மூத்த மகள் சிம்புரா சாலினி 12-ம் வகுப்பும், இளைய மகள் லாவண்யா 10-வதும் படிக்குதுங்க.

என் மனைவியால சரியா நடக்க முடியாது. அதுக்கு மருத்துவச் செலவு, குடும்பச் செலவு, அத்துடன் எதுக்கு ரெண்டு புள்ளைகளையும் படிக்க வைக்குற? பேசாம, அவங்களையும் வேலைக்கு அனுப்பிடுன்னு ஊர்க்காரங்க சொல்றாங்க.

பார்வையில்லன்னு நான்தான் படிக்காம போயிட் டேன். ஆனால், நம்ம புள்ளைகள படிக்க வெச்சு பெரிய ஆளாக்கிடணுங்கிற வைராக்கியமா இருக்கேன்.

பனை மரம் கற்பக விருட்சம். அதோட வேரில் இருந்து உச்சி வரைக்கும் அனைத்தையும் பயன் படுத்தலாம். அதனால் எனக்கு வேலைவாய்ப்பு குறைஞ்சுடாது.

உடம்புல தெம்பு இருக்குற வரை ரெண்டு புள்ளைகளையும் படிக்க வைக்க எவ்வளவு வேணும் னாலும் கஷ்டப்படுவேன். இதுங்க படிச்சுதுனாத்தான், பின்னாடி அதுங்க புள்ளைகளையும் நல்லா படிக்க வைக்குங்க.

என் ரெண்டு மகள்களும்தான் என் ரெண்டு கண்கள். அவங்க மூலமாத்தான் இந்த உலகத்த பாக்குறேன்.’’ நம்பிக்கையோடு சொல்கிறார் முருகாண்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x