Last Updated : 26 May, 2015 10:31 AM

 

Published : 26 May 2015 10:31 AM
Last Updated : 26 May 2015 10:31 AM

மதுபானக் கடை இல்லாத அதிசயம்: மழைநீர் சேகரிப்பில் முன்மாதிரி கிராமம் - 20 ஆண்டுகளாக சாதித்து வரும் ஊராட்சித் தலைவி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மைக்கேல்பட்டினம் ஊராட்சியில் மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து, டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளார் அக்கிராமத்தின் ஊராட்சித் தலைவி சேசு மேரி. இவர் தனது கிராமத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக பல்வேறு சமூகநலத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறார்.

1996-ம் ஆண்டு ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சேசுமேரி, பியுசி வரை படித்துள்ளார். கிராம வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க அன்று தொடங்கிய சேசுமேரியின் பணி இன்று வரை தொடர்கிறது.

பொதுநலப் பணிகளில் தனது தந்தை காட்டிய ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட சேசுமேரி, 1984-ல் முதியோர் கல்வித் திட்டத்தில் வகுப்புகளை நடத்தி பலருக்கு கல்வி அளித்ததால் நன்கு அறிமுக மானார்.

பின்னர், ஊராட்சித் தலைவரான வுடன் முதற்கட்டமாக தனது கிராமத்தின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் நோக்கில் கள மிறங்கினார். மக்கள் பங்களிப்புடன் வீடுகளிலிருந்து பிவிசி பைப் மூலம் மழைநீரை சேகரித்து, சுத்தப் படுத்தி கிராம ஊரணியில் தேக்கி னார். இதனால், இப்பகுதியில் ஓரளவு மழை பெய்தாலும் ஊரணி யில் மழைநீர் தேங்கி குறைந்த பட்சம் 2,000 குடம் நீர் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

இவரது முயற்சியால் கிராமத்தில் 100 சதவீத மழைநீர் சேகரிப்புத் திட்டம்,100 சதவீத தனி நபர் கழிப்பறை வசதி, சிறுசேமிப்பு, தெரு சுத்தம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

தவிர, காட்டாமணக்கு வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், மக்கும் - மக்கா குப்பை தயாரித்தல், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்றவற்றையும் செம்மையாக நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இந்தப் பணிகளுக்கிடையே மைக்கேல்பட்டினத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றிய சேசுமேரியின் பணி குறிப்பிடத்தக்கது. ஊராட்சி யில் உள்ள அனைத்து மகளிரையும் திரட்டி கிராமக் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றி ஊராட்சியில் இயங்கி வந்த மதுபானக் கடைகளை அப்புறப்படுத்தியுள்ளார்.

சுகாதாரமான குடிநீர் வழங்குவது குறித்து கிராமாலயா சார்பில் அண்மையில் நடைபெற்ற 3 நாள் கருத்தரங்கில் பங்கேற்க திருச் சிக்கு வந்திருந்த சேசுமேரி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

எங்கள் கிராம மக்கள் குடிநீருக் காக அருகில் உள்ள ஊராட்சிகளுக் குச் சென்றுவரும் நிலையை மாற்ற முடிவெடுத்து, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை கிராம மக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றினேன். இந்தத் திட்டம் எங்கள் ஊராட்சியை உலக வங்கி மூலம் உலகுக்கு அடையாளம் காட்டியது.

இதேபோன்று முழு சுகாதாரத் திட்டத்தின்கீழ் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிவறை அமைத்துக் கொடுத்துள்ளேன். டாஸ்மாக் கடைகளை அப்புறப் படுத்தியதில் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப்புற பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. நான் வாங்கிய விருதுகளுக்கும், அமெ ரிக்கா வரை எங்கள் கிராமம் அறி முகம் ஆனதற்கும் எங்கள் ஊராட்சி மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்” என்றார் தன்னடக்கத்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x