Published : 03 Jun 2014 10:00 AM
Last Updated : 03 Jun 2014 10:00 AM

கர்னாடக இசையில் கலக்கும் பொறியாளர் யாஸ்மின் பேகம்- கச்சேரி வருமானத்தை இசைக் கலைஞர்களுக்காக அர்ப்பணிக்கிறார்

இந்துக் கடவுள்களைப் பற்றி பேசுவதை இஸ்லாத்தில் அவ்வளவாய் அங்கீகரிக்க மாட்டார்கள். ஆனால், இந்துக் கடவுள்களைப் போற்றிப் பாடும் கர்னாடக சங்கீதத்தில் முஸ்லிம் பெண் யாஸ்மின் பேகம் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரை இப்போது மீள முடியாத ஒரு சோகம் சூழ்ந்திருக்கிறது. அதைச் சொல்வதற்கு முன்பாக யாஸ்மினை பற்றி சில வரிகள்..

மயிலாடுதுறையைச் சேர்ந்த கமால் பாஷா - அனிஷா பேகம் தம்பதியின் ஒரே மகள் யாஸ்மின் பேகம். இப்போது எம்.இ., படிக் கிறார். கமால் பாஷாவுக்கு சிறுவயதிலேயே கர்னாடக இசையின் மீது நாட்டம் அதிகம். இந்த ஆர்வத்தில் 40 வயதில் ஹார்மோனியம் வாசிக்கப் பழகினார். அப்போது யாஸ்மின் பேகம் 7 வயது குழந்தை. தனது மகளை இசை மேதையாக உருவாக்க நினைத்த பாஷா, அப்போதிருந்தே அவரையும் தயார்படுத்தினார். அப்புறம் நடந்தவைகளை யாஸ்மின் பேகமே நமக்குச் சொல்லட்டும்.

‘என்னை கர்னாடக சங்கீதத்தில் இசை மேதையாக உருவாக்க வேண்டும் என்பதுதான் அப்பாவின் கனவு. ஆனால், எங்கள் மதத்தைச் சேர்ந்த சிலர், நம்ம புள்ள எப்படி கர்னாடக சங்கீதம் படிக்கிறது? என்று முணுமுணுத்தார்கள்.

ஆனால், அப்பா அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. ‘இசையை இசையாக மட்டும் பாருங்கள். இதற்குள்ளே மதத்தை திணிக்காதீர்கள். அனைவருக்கும் பொதுவான இறைவனைப் பற்றித்தான் எம் பொண்ணு பாடுகிறாள். கர்னாடக சங்கீதம் படிப்பதால் அவள் இந்துவாக மாறிட்டதா அர்த்தம் இல்லை' என்று சொல்லி எதிர்ப்புகளை சமாளித்தார்.

நாகஸ்வர வித்வான் சண்முகம் பிள்ளை தான் எனக்கு குரு. அவரிடம் சங்கீதம் படித்து முறைப்படி மேடை கச்சேரிகள் பண்ண ஆரம்பித்தேன். எனது அத்தனை கச்சேரிகளுக்கும் அப்பாதான் ஹார்மோனியம் வாசிப்பார். இதுவரைக்கும் 100 கச்சேரிகள் வரைக்கும் பண்ணியிருக்கிறேன். கச்சேரியில் கிடைக்கும் வருமானத்தை தனியாக ஒரு வங்கிக் கணக்கில் சேமித்தோம். நலிவடைந்த இசைக் கலைஞர்களுக்கும் புதிதாக இசையை படிக்க வரும் ஏழைகளுக்கும் உதவுவதற்காகவே நாங்கள் அதைச் சேமித்தோம்.

ஆனால், நாங்கள் ஒன்று நினைக்க இறைவன் வேறுமாதிரியாக தீர்மானித்துவிட்டான். இந்த வருடம் பிப்ரவரி 2-ம் தேதி, காட்டுமன்னார் கோயில் அருகிலுள்ள முட்டம் கிராமத்துக்கு நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக நான், அப்பா, அம்மா மூவரும் கிளம்பினோம். அந்த ஊர் பெருமாள் கோயிலில் அன்றுதான் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. அப்பாவின் நண்பர் அங்கு இருப்பதாக தகவல் வந்ததால் கோயிலுக்கே சென்றோம்.

நண்பரைப் பார்த்துவிட்டு கோயிலில் அமர்ந்திருந்தபோது, ‘பெருமாளைப் பற்றி ஒரு பாட்டுப் பாடுமா'ன்னு அப்பா சொன்னார். ஹிந்தோளம் ராகத்தில் ‘ஸ்ரீகிருஷ்ண சைத்தன்யா' என்ற பாடலைப் பாடினேன். லயித்துக் கேட்டுக் கொண்டிருந்த அப்பா, முக்கால்வாசி பாடல் பாடிய நிலையில் திடீரென மயங்கி எனது மடியில் சரிந்துவிட்டார். எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தோம். அப்பாவைக் காப்பாற்ற முடியவில்லை. இன்னமும் அந்த நிகழ்வை என்னால் மறக்க முடியவில்லை. அப்பா இல்லாமல் கச்சேரிக்கும் போகமுடியவில்லை.

நண்பர்கள், ஆசான்கள் வற்புறுத்தலுக்குப் பிறகு ஜூலை மாதம் கச்சேரிக்கு செல்ல ஒப்புக் கொண்டிருக்கிறேன். நான் எப்படி வரவேண்டும் என்று அப்பா கற்பனை பண்ணி வைத்திருந்தாரோ அந்த நிலையை அடைவதுதான் எனது லட்சியம். கச்சேரிக்குப் போய் சம்பாதித்த பணம் அப்படியே வங்கியில் இருக்கிறது. அப்பாவின் விருப்பப்படியே, இசை சம்பந்தப்பட்ட இயலாத மனிதர்களுக்கு அந்தத் தொகையையும் இனிமேல் கிடைக்கும் வருமானத்தையும் செலவு செய்வேன்'' நம்பிக்கை துளிர்க்கச் சொன்னார் யாஸ்மின் பேகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x