Last Updated : 19 Apr, 2018 01:56 PM

 

Published : 19 Apr 2018 01:56 PM
Last Updated : 19 Apr 2018 01:56 PM

ஆண்களுக்காக: 1- பின்தொடர்தல் எனும் பெருங்குற்றம்

என் அக்காள் மகனுக்கு வயது 19. கல்லூரியில் படிக்கிறான். ஒல்லியான தேகம், ஓரளவு உயரம். மனுசுக்குள் தன்னை தனுஷ் என்றே நினைத்து வைத்திருக்கிறான். சினிமாவில் தனுஷ் என்ன ட்ரெண்ட் பின்பற்றுகிறாரோ அதே ஸ்டைலுக்கு அவனும் மாறிவிடுவான்.

அதனாலேயே வீட்டில் ஏதாவது விசேஷம் வந்துவிட்டால் போதும் அவனைப்பார்த்து யாராவது ஒருவராவது சொல்லிவிடுவார்கள் 'வர்றான் பாரு தனுஷ்' என்று.

சமீபத்தில் அக்கா வீட்டில் 4 நாட்கள் தொடர்ந்து தங்கும் சூழல் ஏற்பட்டது. அப்போதுதான் எனக்கு அவனப் பத்தியும் அவன்சோட்டு பசங்களப் பத்தியும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

8 மணி கல்லூரிக்கு 7.20-க்கு எழுந்திருக்கிறான். குளித்து கிளம்புவதற்கே 20 நிமிடங்கள். அப்புறம் மேக்கப், அப்புறம் அம்மா கையில் உணவு கிட்டத்தட்ட கல்லூரி தொடங்கி அரை மணி நேரமாயிருக்கும். அவன் என்னவோ அப்போதுதான் பைக்கை மிதித்தான். என்னடா இது புது பைக்கா என்றால்? யெஸ் சித்தி என்று பறக்கிறான்.

கல்லூரி முடிவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்துவிட்டான். என்னப்பா என்றால்.. கடைசி கிளாஸ் போர். ராவுவாங்க. அதான் வந்துவிட்டேன் என்றான் சற்றும் அலட்டிக் கொள்ளாமல்.

நான் அங்கிருந்த 4 நாட்களில் இரண்டு நாட்கள் இப்படித்தான் லேட்டா போய் சீக்கிரமா வந்தான். ஒரு நாள் கேட்டேவிட்டேன். ஏனப்பா இவ்வளவு ஸ்டைல் பண்ற இஷ்டத்துக்கு வர்ற போறே, வீட்டுக்கு ஒரு உதவியும் இல்ல. வீட்ல இருக்க நேரத்துலயும் செல்ஃபோன் நோண்டிக்கிட்டே இருக்க. புத்தகத்தை தொட்ட மாதிரியே தெரியலையே!

ஆனா, தினமும் இரவு 8 மணிக்கு கோச்சிங் சென்டருக்கு மட்டும் தவறாம போய்ட்டு வரேன்னு சொல்றாங்க. அதுவும் அந்தப் பொண்ணு திவ்யாவைப் பார்க்க என்றேன்.

அம்மாவை ஒரு லுக் விட்டுவிட்டு. ஆமாம் சித்தி. ஐ லைக் திவ்யா என்றான் ஒரு காஃபி கிடைக்குமா என்பதைப் போல்.

எத்தனை வருஷமா என்றேன். அது நாலஞ்சு வருஷமா என்றான். அந்தப் பொண்ணு உன் கிட்ட பேசுமா என்று கேட்டால் திரும்பிகூட பார்க்காது என்றான்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்புறம் ஏன் போற என்றேன்.. சற்றே கோபமாக.

 

 

"சித்தி... என்ன மாதிரி பசங்களையெல்லாம் பார்த்தவுடனே பிடிக்காது பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்" என்றான். (இது தனுஷ் படத்தில் வரும் வசனம்)

என்ன செய்து வைத்திருக்கிறது இந்த சினிமா?

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில்தான் ஹீரோக்கள் தெய்வங்களாகக் கொண்டாடப்படுகின்றனர். அந்த அபிமானத்தாலேயே சினிமாவில் கொஞ்சம் வளர்ந்தவுடன் அவர்கள் அப்படியே அரசியலுக்குப் பாய்ந்து விடுகின்றனர்.

ஹீரோக்களைப் பார்த்தே வளரும் நம் இளைஞர்களில் பலர் அவர்களைப் 'போலச் செய்'கிறார்கள். ஒருவகையில் இதுவும் ஓர் உளவியல் சிக்கல்தான். தன்னிலை உணராமல் பிம்பத்தை அப்படியே தன்னுள் வாங்கிக்கொண்டுத் திரிகிறது இளைய சமுதாயம். ஒட்டுமொத்தமாக அப்படிக் கூறிவிட முடியாது என்றாலும். 10-க்கு 7 கல்லூரி இளைஞர்கள் தங்களை காதல் மன்னர்களாக முன்னிலைப்படுத்தவே விரும்புகின்றனர். இல்லாவிட்டால் இரண்டாம் ஆண்டு கல்லூரி படிக்கும் மாணவன், ஒரு பெண்ணை அவள் விருப்பமில்லாமல் பின் தொடர்வது அநாகரிகம், அத்துமீறல், சட்டப்படி குற்றம் என்பதெல்லாம் தெரியாமலேயே பின் தொடர்ந்து கொண்டிருப்பானா?

 

 

சமீபத்தில் ஒரு சினிமா பார்க்க நேர்ந்தது. அப்படத்தின் பெயர் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்'. பார்க்கும் பெண்களிடம் எல்லாம் ஐ லவ் யூ சொல்லி சுற்றித் திரியும் ஹீரோ அதே பெண்கள் கல்யாணம் எனப் பேச்செடுத்தால் உடனே அவர்களை விட்டுவிலகுகிறான். கடைசியில் நல்ல பையனாகிவிடுகிறான் அந்த ஹீரோ. தான் ஏமாற்றிய பெண்களுக்கே திருமணப் பத்திரிகை கொடுத்து கட்டாயம் வந்துவிடுங்கள் என்கிறான். ஆனால், அவனால் ஏமாற்றப்பட்ட பெண்கள் எல்லோரும் அந்த இளைஞரின் பெயரை தங்கள் மகனுக்கு சூட்டியிருப்பதாகக் காட்டப்படுகிறது. அத்தனை கோழைகளாகவும் முட்டாள்களாகவும் பெண்கள் இருக்க வேண்டும் என்றா இச்சமூகம் விரும்புகிறது?!

என்ன கற்றுக்கொடுக்க நினைக்கிறது சினிமா?

1. எத்தனைப் பெண்களிடம் வேண்டுமானாலும் ஐ லவ் யூ சொல்லலாம்.

2. அவளைத் தொட்டுப் பேசுவது. இச்சையுடன் கட்டிப்பிடிப்பது தவறல்ல.

3. கல்யாணம் என்ற பேச்சுவந்தால் அவளைக் கழற்றிவிட்டுவிடலாம்.

4. கடைசியில் உத்தமனாக திருமணம் செய்து கொள்ளலாம்.

5. முதல் காதல் புனிதமானது என்ற போலி கட்டமைப்புக்குள் பாதிக்கப்பட்ட பெண் மட்டும் சிக்கிக் கொண்டு பிள்ளைக்குக்கூட அந்த முதல் காதலனின் பெயரைச் சூட்ட வேண்டும்.

ஜாலியான படம் என்று சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் இத்தகைய படங்கள் எவ்வளவு அபத்தமான கருத்துகளை இளைஞர்களுக்குள் கடத்துகிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டிலிருந்து தொடங்குங்கள்..

ஒரு விளம்பரம் பார்த்தேன். வெளியே சென்றால் ஒரு ஆண் மகனை எதிர்கொள்ள அந்தச் சிறுமி தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்வது அவசியம் என்பதுபோல் அது சித்தரிக்கப்பட்டிருந்தது. ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்ள தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் சமூகம். ஒரு ஆண்/சிறுவன் தன் சக மனுஷியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஏன் சொல்லித் தருவதில்லை. ஒரு பெண்ணிடம் அவள் கண்ணைப் பார்த்து பேசு என்று ஏன் கற்றுத்தருவதேயில்லை. அவள் உடையைப் பார்க்காதே, விமர்சிக்காதே அவளை அவளாகவே மட்டும் பார். அவளை உனக்கு சரிநிகராகக் கருது என சொல்லிக்கொடுக்க மறுப்பபது ஏன்?

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில்கூட மகனின் செயல்கள் அனைத்தும் தெரிந்திருந்தும் ஹீரோவின் அப்பா அவனைக் கண்டிப்பதாக ஒரு காட்சிகூட இல்லை. மாறாக பெண்ணின் பெற்றோர் புகார் சொல்லியவுடன் வீட்டை காலி செய்வதாக மட்டுமே காட்டப்படுகிறது.

ரெமோ படமும் இப்படித்தான். திருமணம் நிச்சயமான பெண்ணை விரட்டி விரட்டிக் காதலிப்பதையே முழு நேர வேலையாகச் செய்வார் சிவகார்த்திகேயன். இப்படி தமிழ்சினிமாவில் பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

 

 

மணமகளாய் உன்னை பார்த்த பின்னும் உன்னை சிறையெடுக்க மனம் துடிக்குதடிஎன (காதல்மன்னன்) பாடல் வரிகளிலும் பின் தொடர்தலையும், விரட்டிக் காதலிப்பதையும் விட்டுவைக்கவில்லை.

மாற்றம் என்பது குடும்பங்களில் இருந்தே உருவாகும், உருவாக்க வேண்டும்.

சென்னையில் சிறுமி ஹாசினி பாலியல் பலாத்கார வழக்கில் தஷ்வந்தின் தந்தை தனது மகனின் தவறு தெரிந்தும்கூட அவரை காப்பற்றி ஜாமீனில் விடுவித்ததுதான் தஷ்வந்த் தனது தாயைக் கொல்லவும் வழிவகுத்தது. குற்றங்களை வீட்டிலேயே கிள்ளி எறிய வேண்டும். தஷ்வந்த செய்த தவற்றை மறைக்க முயலாமல் அவரை நீதிக்கு உட்படுத்தியிருந்தால் இன்னொரு உயிராவது பிழைத்திருக்கும்.

நீங்கள் ஸ்டாக்கரா?

பெண்களைப் பின்தொடர்பவர் யார் யார்? என்றொரு பட்டியலே இருக்கிறது.

ஒரு பெண்ணின் வீட்டுவாசல், பணியிடம், வீடிருக்கும் பகுதியில் நிற்பவர். அதன் மூலம் தான் பாவமான, மென்மையான நபர் என்ற போலி பிம்பத்தைக் கட்டமைக்க முயல்பவர்கள்.

ஒரு பெண்ணுக்கு அவள் விருப்பத்தை மீறி போன் செய்பவர்கள், குறுந்தகவல்கள் அனுப்புபவர்கள், கடிதம் எழுதுபவர்கள்.

பூக்கள், இனிப்புகள் என பரிசுகளை அனுப்புதல்.

 

பெண்ணின் வீட்டுக்குள் அவள் அனுமதியின்றி நுழைதல்.

ஒரு பெண் பற்றிய தகவல்களை அவருக்குத் தெரியாமல் சேகரிப்பவர்.

ஒரு பெண்ணின் போனை டேப் செய்தல்.

தன்னிடம் பேசாவிட்டால், தன்னுடன் பழகாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுபவர்.

பெண்ணைப் பற்றி அவதூறு பரப்புதல்

இதுதவிர இணையம் வழியாக பின் தொடர்தல். இது சைபர் ஸ்டாக்கிங் எனப்படுகிறது.

இதில் ஏதேனும் ஒன்றைச் செய்பவர்களாக நீங்கள் இருந்தால். நீங்கள் தான் ஸ்டாக்கர். உங்கள் வீட்டுப் பையன்கள் போக்கில் இவை தெரிந்தால் அவர் தான் ஸ்டாக்கர்.

 

கற்றுக்கொடுத்தல்
  • ஒரு பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் சமூகம். ஒரு ஆண்/சிறுவன் தன் சக மனிதியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ஏன் சொல்லித் தருவதில்லை.

தெரிந்துகொள்ள வேண்டிய புள்ளிவிவரம்..

18 வயதுக்கு உட்பட்ட 1000 பேரில் 14 பேர் ஸ்டாக்கிங்குக்கு உள்ளாகிறார்கள்.

இப்படி பின்தொடரப்படுபவர்களில் 11% பேர் தாங்கள் குறைந்தது 5 வருடங்களாவது இத்தகைய கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக பெண்கள் கூறுகின்றனர்.

41% பெண்களும் 37% ஆண்களும் பின்தொடர்தலுக்கு ஆளாகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களில் 46% பேர் தங்களைப் பின் தொடர்பவர்களால் தங்களுக்கு எப்போது என்ன நடக்குமோ? என்ற பயத்திலேயே இருக்கின்றனர்.

43% பேர் ஒருமுறையேனும் போலீஸை அணுகி தாங்கள் ஸ்டாக்கிங் மூலம் பாதிக்கப்பட்டதாக புகார் அளிக்கின்றனர்.

பெண்களை ஏன் பின்தொடர்கிறார்கள் தெரியுமா?

பெண்களை ஏன் சிலர் பின்தொடர்கிறார்கள் என்பது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் சைக்காலஜி துறையின் தலைவராக இருக்கும் பேராசிரியர் தேன்மொழி நம்மிடம் விரிவாக விளக்கினார்.

அவர் கூறும்போது, "ஸ்டாக்கிங் (பின்தொடர்தல்) என்பது இயல்பான ஒரு குணம் அல்ல. எல்லோருமே இப்படி பெண்களைப் பின்தொடர்வதில்லை. அப்படியே பின்தொடரும் சிலர் அந்தப் பெண்ணுக்கு அதில் விருப்பமில்லை என்றதும் ஒதுங்கிவிடுவதும் உண்டு. ஆனால், ஒரு சிலர் மட்டுமே தான் நினைத்ததை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறியுடன் பெண்களைப் பின்தொடர்கின்றனர். இப்படியான செய்கையில் ஈடுபடுபவர்கள் நிச்சயமாக குழந்தைப் பருவத்தில் ஏதாவது ஒரு வகையில் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பார்கள். பெற்றோர்களின் சரியான பேணுதல் இல்லாமல் இருந்திருக்கலாம். தாய் அல்லது தந்தை என யாரேனும் ஒருவருடன் மட்டுமே வாழ்பவராக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட பெற்றோருக்குப் பிள்ளையாக இருந்திருக்கலாம். இப்படியாக ஏதாவது ஒரு வகையில் உளவியல் ரீதியில் துன்பத்தை சந்திக்கும் குழந்தைக்கே அதன் பதின் பருவத்தில் ஹார்மோன்கள் மாற்றம் ஏற்படும்போதே இத்தகைய குணங்கள் வெளியே தெரியவருகின்றன.

 

ஸ்டாக்கிங்கில் ஈடுபடும் இளைஞர்கள் அனைவருக்குமே மனநல பாதிப்பு இருக்கிறது. இவர்கள் அனைவருமே பார்டர்லைன் பெர்சானிலிட்டி டிஸ்ஆர்டர் (Borderline Personality Disorder) கொண்டவர்களே. இவர்களால் புறக்கணிப்பை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதன் காரணமாகவே விளைவுகள் பற்றி யோசிக்காமல் பழிவாங்கும் அளவுக்குச் செல்கிறார்கள். இதேபோல், தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டவர்கள் சிலரும் புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்" என்றார்.

தாக்கத்தை ஏற்படுத்துகிறதா சினிமா?

"நிச்சயமாக ஏற்படுத்துகிறது. நாம் குழந்தையாக இருக்கும்போது 40% பார்ப்பதையே கற்றுக்கொள்கிறோம். நாம் என்ன பார்க்கிறோமோ அதையே பிரதிபலிக்கிறோம். அதேபோல் இளமைப் பருவத்தில் இருப்பவர்கள் சினிமா என்கிற சக்தி வாய்ந்த ஊடகத்தால் ஈர்க்கப்படுகின்றனர். திரையில் தன் ஹீரோ என்ன செய்கிறாரோ அதை அப்படியே இமிடேட் செய்ய முற்படுகின்றனர். சிகரெட் புகைப்பதாக இருக்கட்டும், மது அருந்துவதாக இருக்கட்டும் இல்லை பெண்களைப் பின்தொடர்வதாக இருக்கட்டும் அதை அப்படியே பின்பற்றுகின்றனர். ஒரு வலுவான ஊடகம் கவனமாக காட்சிகளைக் கட்டமைக்க வேண்டும். ஏனெனில் சினிமா என்பது நேரடியாக சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருக்கிறது" எனக் கூறினார்.

பெற்றோர்களுக்கு உங்கள் அறிவுரை?

"எந்த ஒரு சமூக மாற்றமாக இருந்தாலும் அது குடும்பத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். முதலில் ஒரு குடும்பத்தில் கணவன் தனது மனைவியை சரி நிகராய் நடத்துவதோடு. மதிக்க வேண்டும். தனது அப்பா தனது அம்மாவை எப்படி நடத்துகிறாரோ அப்படித்தான் மகன் தான் சந்திக்கும் பெண்களை நடத்துவார். அதேபோல் தாயும் தனது மாமியார், நாத்தனார் மற்றும் பெண் உறவுகளை மரியாதையுடன் நடத்த வேண்டும். குடும்பத்திலிருந்துதான் குழந்தைகள் சமூகப்பாடங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.

ஒரு பெற்றோருக்கு மிக எளிதாக தனது குழந்தையிடம் ஏற்படும் மன மாற்றங்களைக் கண்டறிய முடியும். வீட்டில் யாரையும் மதிக்காத போக்கு, எதற்கெடுத்தாலும் அதிக கோபப்படும் போக்கு ஆகியன குழந்தைகளிடம் தென்பட்டால் உடனே அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்களை கவுன்சிலிங்குக்காக மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்லுங்கள். 15 வயதிலேயே இத்தகைய நடவடிக்கைக்கு சரியான ஆலோசனை வழங்கினால் அவர்கள் சரியாகிவிடவும் தெளிவாகிவிடவும் வாய்ப்புள்ளது. 20, 21 வயதுக்குப் பின்னர் அவர்களை நம் வசப்படுத்துவது கடினம் என்பதை மறந்துவிடாதீர்கள்" என்றார்.

ஸ்டாக்கிங் எனும் பின்தொடர்தல் இரண்டு தனி மனிதர்களிடையே நடக்கும் சம்பவம் என்று கடந்துபோய் விடமுடியாது. ஏனெனில், அந்தப் பெருங்குற்றம்தான் வினோதினி, ஸ்வாதி, அஸ்வினி கொலைக்கு முதல் காரணம். பின்தொடர்தலில் ஆரம்பிக்கப்படும் தவறு உச்சகட்டமாக கொலையில் முடிகிறது. அது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் நீங்காத சோகத்தை ஏற்படுத்திவிடுகிறது. இளம் பெண்கள் உள்ள குடும்பங்களில் அச்சத்தைக் கடத்துகிறது. இதன் காரணமாகவே ஸ்டாக்கிங் சமூகப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது.

ஆன்லைனிலேயே புகார் செய்யலாம்..

ஒவ்வொரு முறை உங்கள் ஃபோனை நீங்கள் எடுக்கும்போதும் உங்களுக்கு வேண்டாத அந்த நபரிடம் இருந்து குறுந்தகவல் வந்திருக்குமே என்ற பயத்துடனேயே எடுக்கிறீர்களா? இனியும் அப்படி அஞ்ச வேண்டாம். ஆன்லைனிலேயே தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார் அளியுங்கள். மகளிர் ஆணையமானது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் அளித்து விசாரணையத் துரிதப்படுத்துகிறது. தேவைப்பட்டால் மகளிர் ஆணையம், விசாரணைக் கமிஷன் அமைத்தும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரிக்கிறது.

பின்தொடர்தலுக்கு ஆளாகும் பெண் டெல்லியில் இருந்தால் 1096 என்ற எண்ணிலும். பிற மாநிலங்களில் இருக்கும் பெண்களாக இருந்தால் 0111-23219750 என்ற எண்ணிலும் தேசிய மகளிர் ஆணையத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

தண்டனை என்ன?

இந்திய தண்டனை சட்டத்தின்படி ஒரு பெண்ணை நேரடியாகவோ அல்லது போன், இமெயில்,சமூக வலைதளங்கள் வாயிலாகவோ பின் தொடர்பவர்களுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை தண்டனை உறுதி.

- பேசித் தீர்ப்போம்

- பாரதி ஆனந்த்

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x