Published : 13 Apr 2018 02:27 PM
Last Updated : 13 Apr 2018 02:27 PM

யானைகளின் வருகை 162: பழங்குடிகளே காட்டரசர்கள்

 

காயத்ரி இறந்ததற்கும், விஜயகுமார், தங்கமணி அடிபட்டதற்கும் அரசு சட்டப்படியான நஷ்ட ஈடு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்கள். ‘அந்த நஷ்ட ஈட்டுத் தொகை இது போன்ற குடும்பங்களுக்கு ஆறுதல் தரலாமே ஒழிய நிரந்தரத் தீர்வைத் தரமுடியாது.

மாறாக 60 - 70 ஆண்டுகளுக்கு முன்பு இலவச பட்டா வாங்கி குருவிக்கூடு மாதிரி வீடுகட்டிக் கொண்டு வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் குடியிருப்புகளில் பல்கிப் பெருகியிருக்கும் குடும்பங்கள் எத்தகைய சூழ்நிலையில் வசிக்கிறார்கள் என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காட்டு யானை உருவில் மட்டுமல்ல; வேறு பல உருவங்களிலும் இப்படிப்பட்ட அபாயங்கள் நேரவே செய்யும்!’ என்பதே அப்போது என்னுடைய பார்வையாக இருந்தது. அதையே நான் எழுதிய கட்டுரைகளிலும் வலியுறுத்திக் குறிப்பிட்டேன்.

அப்போது இறந்தவர்களில் ஒருவர் வீட்டில் கழிப்பறை வசதியில்லாமல் காலைக்கடன் கழிக்க பக்கத்தில் இருந்த பொட்டல்வெளிக் காட்டில் புதர் மறைவுக்கு சென்றுள்ளார். அவரை நேருக்கு நேர் சந்தித்த யானை தூக்கி வீசியிருக்கிறது. இன்னொருவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த பொதுக் கழிப்பிடம் சென்றிருக்கிறார். போகும் வழியிலேயே யானை எதிர்ப்பட ஒரே தூக்கு. ஒரே வீசு. உயிர்கள் பறிபோயிருக்கிறது. இப்படியே இன்னொருவர் உயிரும் பறிபோயிருக்கிறது.

காட்டுக்குள் இருக்க வேண்டிய யானையை வனத் துறையினரால் காட்டுக்குள் வைக்க முடியவில்லை. காட்டை காடாக அவர்கள் கட்டிக் காக்காததால் அங்கிருந்த விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. ஊருக்குள்ளும் மக்களுக்கு தேவையான வசதிகளை வருவாய்த்துறை, சமூக நலத்துறை போன்ற அரசுத்துறைகள் உருவாக்கித் தராததால் அவர்களும் இப்படி பொட்டல் வெளிக்கும், ஊருக்கு ஒதுக்குப்புறத்திற்கும் வந்து அநியாயமாய் உயிரிழக்கிறார்கள். இதெல்லாம் ஆராய்ந்தால் காடு, காடாக இல்லை. நாடு நாடாக இல்லை. அதைக் காக்க வேண்டியவர்கள் வேறு தேடலுக்குள் இருக்கிறார்கள் என்பதை வேதனையுடன் சுட்டிக் காட்டும் நேரத்தில் கடந்த சில அத்தியாயங்களில் நான் சுட்டிக் காட்டிய சம்பவங்களை தொகுத்துப் பாருங்கள்.

தூவைப்பதி மண்ணுக்காரன் தோட்டத்தில் குட்டிகளை மீட்கும் பாசப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 24 யானைகளைக் கண்டு பயப்படாத பழங்குடிகள், மூர்க்கமாய் 3 கிலோமீட்டர் தூரத்தில் கொம்பனைப் பார்த்ததும் பயந்து ஓட்டமெடுத்தது ஏன்? ஆழியாறு குரங்கருவி அருகே சாலையில் முன்கூட்டியே வந்து நின்ற ஒரு கொம்பன், அங்குள்ள மரத்தின் கீழே நின்று கொண்டு ஒரு சின்ன செருமல் செய்து தன் கூட்டத்தை வரவழைத்து சாலையைக் கடக்க வைத்து, பத்திரமாக காட்டுக்குள் அனுப்பி விட்டு, அங்கிருந்து சிக்னல் கிடைத்ததும் அதுவும் புறப்பட்டுச் சென்றது ஏன்? எட்டிமடை கிராமம் அருகே ஒரே சமயத்தில் அடிபட்டு இறந்த 3 யானைகளைப் பிரிந்து, அதே இடத்தில் ரயிலில் அடிபடாமல் தப்பித்த ஆண் யானை அங்கே வருடக்கணக்கில் சுற்றித் திரிந்தது ஏன்?

அது எதேச்சையாக தன் முன் வந்தவர்களை உருட்டித் தள்ளிவிட்டுச் சென்றதும், ஒரு சிலரை மட்டும் அடித்துக் கொன்றதுமான காட்சிகள் எதற்காக நடந்தது? மிஷன் மதுக்கரை மகராஜ் என்ற பெயரில் ஒரு கொம்பன் யானையை பிடித்து கராலில் வனத்துறையினர் அடைக்க, அடுத்த நாளே ஒரு கூட்டத்தின் பெண் யானை வழிதவறி ரயிலில் சிக்கி இறந்ததன் பின்னணி என்ன? அடுத்தநாளே கராலில் அடைக்கப்பட்ட மதுக்கரை மகராஜ் இறந்தது எப்படி? அது தற்கொலை செய்து கொண்டது என்ற விஷயத்தை மீடியாக்களிடம் வனத்துறையினர் பரப்ப என்ன காரணம்? அதற்குப் பிறகு கட்டையன் திரும்ப வந்தது எப்படி? நாங்கள் முதலில் பிடித்ததுதான் மகராஜ், இது மகராஜ் கிடையாது வேறு யானை? என வனத்துறையினர் சமாளிப்பதற்கு வேறு காரணிகள் இருக்க முடியுமா?

இந்த விஷயங்களில் எல்லாம் நாம் யார் சொல்வதை நம்பிக் கொண்டிருக்கிறோம். எதை அங்கீகரிக்கப்பட்ட விஷயமாக கொள்கிறோம். எந்தத் துறையினர், எந்த என்ஜிஓக்கள், எந்த அதிகாரிகள் நிறைமாத கர்ப்பணியாக இருந்து குட்டி ஈன்ற யானையின் வயிற்றில் கடைசி வரை கட்டிதான் இருக்கிறது என்று சாதித்தார்களோ, அவர்களின் வாக்குகளையே அங்கீகரிக்கிறோம். அதையே நம்புகிறோம். அதுவே அரசு ஆவணங்களிலும் பதிவாகிறது.

அப்படி மேம்போக்காக பதிவாகும் ஆவணங்கள் வனம், வனவிலங்குகள் குறித்த தேடலில் நம் சந்ததிகளுக்கு எந்த அளவு எதிர்காலத்தில் பயனாகும் என்பதை யோசிக்க மறக்கிறோம். பயனாகாவிட்டால் கூட பரவாயில்லை. அதை வைத்துக்கொண்டு தவறுதலாகப் புரிந்துகொண்டு இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் வேறு திசை நோக்கிப் பாய்ந்தால் நிலைமை என்னவாகும். ‘நீ கணக்கு தப்பா எண்ணிட்டே. முதல்ல இருந்து புரோட்டாவை வை!’ன்னு சொல்லக்கூடிய புரோட்டா சூரியின் காமெடித்தனமாக இதைப் பார்க்க முடியுமா?

இந்த விஷயங்கள் யாவும் என் சிற்றறிவுக்கு எட்டிய விஷயங்கள் மட்டுமே. இதே துறையில் அமர்ந்து கொண்டு ஆராய்ந்தால் எவ்வளவு கிடைக்கும். அரசு ஒவ்வொரு துறை சார்ந்த ஆராய்ச்சிக்கும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்குகிறது. அந்த கோடிகளை விழுங்கி ஆராய்ச்சி செய்பவர்கள் தம் ஆராய்ச்சிக்கும், தாம் ஆராய்ச்சி செய்யும் பாடுபொருளுக்கும் எந்த அளவு நேர்மையாக இருக்கிறார்கள். யாரோ எழுதிக் கொடுத்த ஆயிரமாயிரம் விஷயங்களை மனதில் உருவேற்றிக் கொண்டு அதற்கான ‘வைவாவில்’ ஒப்பித்து, அதற்கான நடுவர்களை, பேராசிரியர்களை ஏதாவது ஒரு வகையில் சரிக்கட்டி வாங்கப்படும் முனைவர் பட்டமும், அதற்கும் மேலான முதுமுனைவர் பட்டமும் அவர்கள் தோள்பட்டையில் வேண்டுமானால் நட்சத்திர அந்தஸ்து சூடலாம்.

அது எந்த வகையிலாவது சமூகத்திற்கு பயனாகுமா? இப்படி சமூகத்திற்கு பயனாகாது போலித்தனமான விஷயங்களை தருபவர்கள் கையில்தானே இங்கே 90 சதவீதம் அதிகார மையம் இயங்கிக் கொண்டிருக்கிறது? இது காடுகளை மட்டுமல்ல, கானுயிர்களை மட்டுமல்ல, அதையொட்டி இருக்கும் புல் பூண்டு, ஜீவராசிகளையும் அழித்து, மனிதகுலத்தையே நாசம் செய்யும் என்பதுதான் கசப்பான உண்மை. எனவேதான் யானைகள், காடுகள், கானுயிர்கள் விஷயத்தில் மட்டுமல்ல எல்லா சங்கதிகளிலும் அறிதல், புரிதல், உணர்தல் அவசியம் என்கிறேன்.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் எந்த அளவுக்கு அவர்கள் சிறு வயதிலிருந்தே அறிந்திருக்கிறார்களோ, அந்த ஆழத்திற்கு அதற்கான தேடலில் இறங்கிப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு துறையில் நான்கு டிகிரி பெற்றுவிட்டால் மட்டும் அது கல்வியல்ல. அந்த கல்வி சார்ந்த ஆய்வு நூல்களை தேடித்தேடி வாசித்து, புரிந்து, அந்த புரிதலுக்கும், நிஜ உலகிற்கும் எந்த அளவுக்கான நெருக்கமும் நேர்மையும் இருக்கிறது என்பதை கள உழைப்பின் மூலம் காண வேண்டும். கள உழைப்பு ஏற்கெனவே கண்டடைந்த விஷயத்திற்கு எதிர் துருவத்திற்குள்ளும் பயணிக்கலாம். அப்படிப் பயணிக்கும் போது ஏற்கெனவே கண்டடைந்த விஷயங்களை, இப்போது நாம் கண்டடையும் விஷயங்களையும் ஒப்புநோக்கி சீர்தூக்கிப் பார்த்து தெளிந்து தெளிதல் வேண்டும்.

காடு, கானுயிர் விஷயத்தில் முதுமுனைவர் பட்டமே பெற்றிருந்தாலும் கூட, தமிழ் எழுத்து லிபியினைக் கூட அறிந்திராத காட்டுவாசிகளின் காடு பற்றிய அறிவை அவர்களிடமிருந்து அறிவதில் ஈகோ காட்டக்கூடாது. ஆங்கில, தமிழ், மலையாள இன்னபிற லிபிகள் தெரியாமல் காடோடி வாழ்வதாலேயே காட்டு வாசியும், தொல்குடியும், பழங்குடியும் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்களிடம் இருக்கும் பொக்கிஷங்கள, அனுபவங்களை சமூகத்திற்கு நேர்மையாக அப்படியே கொண்டுவந்து கொட்டும் பணியை ஒரு பாலம் போல் நாம் செய்ய வேண்டும்.

அந்தப் பழங்குடிகளையே காட்டரசனாக ஆக்கிட வேண்டும். ஏனென்றால் அவன் மட்டுமே பிறப்பிலேயே காடுகளைப் பற்றி நேரடியாக அறிகிறான். அறியும்போது புரிந்து உணர்ந்து கொள்ளவும் செய்கிறான். மூன்று வயது, நான்குவயது காட்டில் வளர்ந்த குழந்தைக்கு இருக்கும் காட்டாற்றலும், காட்டறிவும் நம்மிடம் யாரிடமும் இல்லை என்பதை உணர்ந்து அவனுக்கு ‘ராயல்’ சல்யூட் அடித்து, அவன் வழி ஒழுக வேண்டும்.

‘காட்டுக்குள் இருந்து வெளியே வா. மலையிலிருந்து கீழேயிறங்கு. எங்களைப் போல் கல்வி கற்றுக் கொள். எங்களை போல் சொக்காய் போட்டுக் கொள். மூங்கில் வீடுகளை தவிர்த்து சிமெண்ட் ஆர்.சி வீடுகள் கட்டிக் கொள் என்பதெல்லாம்தான் அறிவு என்று நினைத்தால் காடுகள் அழியத்தான் செய்யும். யானைகள் ஊருக்குள் வரத்தான் செய்யும். பிறகு சகல ரசாயன சக்திகளையும் வைத்துக்கொண்டு கொடுங்கருவிகளுடன் திரியும் மனிதன் அதை அழிக்கத்தான் செய்வான். அதன் மூலம் அந்த மனிதகுலமும் நாசமாகித்தான் போகும்.

நாட்டில் கொலையும், கொள்ளையும், பாலியல் கொடுங்குற்றங்களும் நிறைய நிகழ்ந்து கொண்டிருக்கும். அதில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் நீண்டு கொண்டேயிருக்கும். ஆனால் பாருங்கள் போலீஸ்காரர்கள், போலீஸ் அதிகாரிகளில் பெரும்பான்மையோர் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை மட்டும் தடுத்து நிறுத்தி ‘லைசன்ஸ் இருக்கா? இன்சூரன்ஸ் இருக்கா?’ என்று வசூல் செய்து கொண்டேயிருப்பார்கள். அமைச்சர்கள் பாதுகாப்புப் பணியில் பெரும்பான்மையோர் ஈடுபட்டிருப்பார்கள்.

இங்கே மக்களுக்கான பணிகள் என ஒவ்வொரு துறைக்கும் எதுவெல்லாம் வகுக்கப்பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் அதிகார மையமாகத்தான் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் செயல்படுகிறார்களே ஒழிய, மக்கள் நலனில் ஈடுபடுவதேயில்லை. அதே கூத்துதான் வன இலாகாவிலும் நடந்து கொண்டேயிருக்கிறது. அவர்கள் காடுகளை உணரத் தலைப்படுவதே இல்லை. காடுகளை உணர விடுவதுமில்லை ஆட்சியாளர்கள். காட்டரசனாக திகழ வேண்டிய பழங்குடிகளை வேட்டைத்தடுப்புக் காவலர் என்ற பெயரில் எடுபிடிகளாக வைத்து, சொற்ப சம்பளத்தில் வாழும் புள்ளைப் பூச்சிகளாகவே வைத்துள்ளார்கள்.

- மீண்டும் பேசலாம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x