Published : 06 Apr 2018 03:57 PM
Last Updated : 06 Apr 2018 03:57 PM

யானைகளின் வருகை 157: ‘அப்பா, அப்பா வருதுப்பா!’

அந்த வீட்டுக்காரர் இரண்டு வீட்டுமனைகள் வைத்திருந்தார். ஒரு வீட்டு மனையில் வீடுகட்டி விட்டு, இன்னொரு மனையில் முழுக்க, வாழையும், காய்கறிச் செடிகளும் வைத்திருந்தார் அங்கே. எப்படிப் பார்த்தாலும் இருபது வாழை மரங்களுக்கு மேல் விளைந்திருந்தது. அவற்றில் பல வாழைகளில் முற்றின காய்கள் சில நாட்களில் பழுக்கும் நிலைக்கு எட்டியிருந்தது. அவற்றில் பாதியை மிதித்து தாம்பு கட்டியது. மீதியை வாயில் புசித்தது. வனத்துறைக்கு போன் செய்து அவர்கள் சைரன் ஒலியுடன் கூடிய ஜீப்பில் வந்து விரட்ட ஆரம்பிக்க, பக்கத்து வீட்டில் புகுந்தது. அங்கே இருந்த வாழைகளையும் மற்ற மரங்களையும் முறித்துவிட்டு, வழியில் இன்னும் இரண்டு வீட்டில் இருந்த மரங்களை பிடுங்கிப்போட்டு விடியற்காலையில்தான் மேற்கே உள்ள காடு நோக்கிச் சென்றன.

காலையில் பார்த்தால் அங்கே ஏழெட்டு வீடுகளில் உள்ள வீட்டுத்தோட்டங்கள் காண சகிக்கவில்லை. அந்த அளவுக்கு அவை எல்லாம் யானைகளின் காலடியில் மிதிபட்டு மூலைக்கு மூலை யானைச் சாணங்களின் குவியல்கள் காணப்பட்டன. அந்த வீடுகளைப் பார்வையிட வந்தவர்கள் எங்கள் வீட்டு வழியே சென்ற யானையின் காலடித் தடத்தையும் வந்து பார்த்து சென்றனர். வீட்டிற்கு தென்புறம் யானையால் உடைக்கப்பட்ட கம்பி கல்லுக்காலையும் வந்து பார்த்து வியப்பு பொங்கப் பேசினர். அவர்கள் அதோடு நிற்கவில்லை.

எங்கள் வீட்டில் கன்று ஈன்று நிற்கும் வாழை மரங்களையும் பார்த்தனர். சிறிய இடம்தான். அதில் பத்து பதினொரு வாழை மரங்கள் ஒரே கொத்தில் படர்ந்திருந்தது. அதில் காய்களும் பிடித்திருந்தன. இங்கே வந்தவர்கள் எல்லாம், ‘அத்தனை வீடுகளில் வாழையை ஒரு பிடி , பிடித்து விட்டு சென்ற யானைகள் உங்கள் வீட்டிற்கு மட்டும் ஏன் வரவில்லை. வந்திருந்தால் இங்கே என்ன ஆகியிருக்கும்?’ என்றே வெளிப்படையாக பேசிச் சென்றனர்.

அதில் பெரும்பான்மையோர், ‘இன்னெய்க்கும் யானைகள் வரும். வந்தா உங்க வாழை மரங்களை விட்டு வைக்காது. காம்பவுண்ட் சுவர், இரும்பு கேட் உள்ள வீட்டையே அந்த நிலைமைக்கு ஆளாக்கிடுச்சுன்னா இந்த வாழைக என்னத்துக்கு ஆகும். உடனே வெட்டிடுங்க. இல்லேன்னா யானைகள் வாழைகளை மட்டுமல்ல, உங்க வீட்டு கதவு, ஜன்னல் எதையும் விட்டு வைக்காது!’ என்று எச்சரி்த்தும் சென்றனர். அவ்வளவுதான். அதேநாளில் பூவும் பிஞ்சுமாக இருந்த அத்தனை வாழைகளையும் என் மனைவி வெட்டி விட்டாள்.

எங்கள் வீட்டுக்கு அப்போது சுற்றுச்சுவர் கிடையாது. வீட்டுக் காவலுக்கு சபாபதி என்ற பெயருள்ள நாய் மட்டுமே. குறிப்பிட்ட தினத்தன்று அது யானை வரும்போது மாடியில் போய் பதுங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பிந்தைய நாட்களில் எல்லாம் எந்த நாளில், எந்த நேரத்தில், எந்த வீட்டிற்கு யானைகள் வருமோ என்ற பீதியிலேயே ஆழ்ந்திருந்தது குடும்பம்.

அதற்காகவே குடி வந்து 2 - 3 வருடங்களில் அங்கே இங்கே கடன் வாங்கி காம்பவுண்ட் கட்டி கேட் போட்டுவிட்டேன். இதே சமயம் எங்கள் வீட்டிற்கு பின்புறம் உள்ள சுமார் 20 ஏக்கர் நிலங்களை வாங்கி லே-அவுட் போட ஆரம்பித்தனர் ஒரு நிறுவனத்தினர். என்றாலும் அதற்கு மேற்கே, தெற்கே, தென்கிழக்கே எல்லாம் வாழை, தக்காளி என்று செய்தனர் விவசாயிகள். அதற்கும் அப்பால் பெரியதொரு தென்னந்தோப்பும் இருந்தது.

இங்கே காய் பிடிக்கும்போது யானைகள் வருவதும், விளைச்சலை நாசம் செய்வதும், அதைத் தடுப்பதற்காக மின்வேலிகளை விவசாயிகள் போடுவதும், அதையும் சில சமயங்களில் யானைகள் பிரித்தெறிந்து உள்ளே நுழைவதும் சகஜமாகி வந்தது. அங்கே வரும் யானைகள் சில சமயங்களில் காலனிக்குள்ளும் புகுந்து விடுவதுண்டு. குறிப்பாக பச்சாபள்ளி வீடுகளில் அவை புகுந்து விடுவதும், அதை விரட்டுவதும் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருந்தது.

இரவு நேரங்களில் விசில் சத்தம் கேட்டாலும், பட்டாசு வெடிச்சத்தம் கேட்டாலும் யாராவது அதி ஒளி உமிழும் டார்ச் லைட் அடித்துப் பார்த்தாலும், வீட்டிற்கும், காம்பவுண்டிற்கும் இடையே உள்ள சந்துப்பகுதியில் எங்கள் வீட்டு நாய் சபாபதி இரவில் குழிதோண்டி அதில் பதுங்கியிருந்தது என்றாலும் அன்று காட்டுயானை வந்து சென்றுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.(யானைகள் வாசம் தூரத்தில் தெரிந்தாலே ஒரு மாதிரி பயத்துடன் அங்கே இங்கே ஓடும். வீட்டிற்குள் வந்து நடுங்கியபடி படுத்துக் கொள்ளும். வீடு தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தால் கதவருகே வந்து கத்திப் பார்க்கும். கதவு திறக்கப்படாவிட்டால் வீட்டுப் பின்புறம் காம்பவுண்ட் சுவர் ஓரம் பெரிய குழியைப் பறித்து அதற்குள் படுத்துக்கொள்ளும். அதை இப்பவும் வாடிக்கையாக வைத்துள்ளது சபாபதி)

காம்பவுண்ட் கட்டுவதற்கு முன்புதான் யானைகள் வந்தன என்பதற்காக வைத்திருந்த வாழைகளை வெட்டி எறிந்திருந்தாள் மனைவி. காம்பவுண்ட் வைத்த பிறகு, ‘யானை வந்தால் அது சாப்பிடட்டும்; அதை மீறி பழம் பழுக்கும் வரை காய்கள் இருந்தால் நம்ம சாப்பிடலாம். தைரியமா வாழை வை!’ என்று நான் ஊக்கப்படுத்தியிருந்தேன்.

‘வாழைய சாப்பிட்டா பரவாயில்லை. காம்பவுண்டை உடைச்சுட்டா!’ என்று பதிலுக்குக் கேட்பாள். ‘அதை நம்ம சரிபண்ணிக்கலாம். ஆளை அடிக்காம போனா சரி!’ என்பேன் வேடிக்கையாக நான்.

அப்படி சொன்னபிறகுதான் அரைமனதுடன் வாழைகளை காம்பவுண்ட் ஒட்டி வைக்க ஆரம்பித்தாள் மனைவி. அப்படி வைக்கப்பட்ட வாழைகள் பலமுறை பூத்து, காய்த்து, பழமாகி எங்களுக்கும், பக்கத்து வீடுகளுக்கும், உறவினர் வீடுகளுக்கும் அது பயனானது.

ஒரு சமயம் இரவு 9 மணி இருக்கும். பணி முடிந்து வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு சிட்-அவுட்டில் மனைவியுடன் பேசியபடி அமர்ந்திருந்தேன். எனக்கு அப்பால் என் மனைவி. நான் யாருடனோ போனில். திடீரென்று வீட்டுக்குப் பின்புறம் பிளிறல் சத்தம். நான் உடனே செல்போனை அணைத்துவிட்டு, ‘யானை பிளிறும் சத்தம் போல இருக்கே!’ என மனைவியிடம் கேட்க, ‘உங்களுக்கு எப்பப் பாரு யானை நினைப்புதான். அப்படி எதுவும் இல்லை. இல்லைன்னா இன்னேரம் பச்சாபள்ளியில் எல்லாம் விசிலடிச்சிருப்பாங்க. பட்டாசு வெடிச்சிருப்பாங்க!’என அவள் சொல்லி வாயை மூடவில்லை. மறுபடி ஒரு பிளிறல் சத்தம். என் மனைவியின் பயம் முகத்திலேயே தெரிந்தது.

‘இது என்ன? இதுதான் யானை போடற சத்தமா?’ என்று சற்றே நடுங்கினாள். அதற்குள் நான் ‘சிட்- அவுட்’டிலிருந்து எழுந்து வீட்டின் பின்புறம் பதட்டத்துடன் பார்க்க, சுமார் 200 அடி தூரத்தில் நண்பர் ஒருவரின் வீட்டருகே உள்ள கம்பி வேலி கல்லை உடைத்துக் கொண்டு பிரம்மாண்டமாக கரியக்குன்று போல் சென்று கொண்டிருந்தது ஒரு யானை. ஒற்றையானை. அதுவும் கொம்பன் யானை. நீண்ட கொம்புகள். அங்கிருந்த தெருவிளக்கு வெளிச்சத்தில் பளீரிட்டது. என் மனைவி அதைப் பார்த்து அதிர, கண் மூடிக் கண்திறக்கும் நேரம் ஆகவில்லை.

அங்கிருந்து 200 அடி மேற்கே உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்டின் உள்ளே இருந்த சில வாழைகளைப் பிடுங்கி ஒரே கவளமாய் இடுவதைப் பார்க்க முடிந்தது. அதற்கடுத்த வீட்டில் உள்ள வாழையையும் அடுத்தது பதம் பார்க்க ஆரம்பித்தது. அதற்குள் கிழக்கு, மேற்கு, வடக்குப் பகுதிகளில் இருந்த வீடுகளில் எல்லாம் கூக்குரல்கள். விசில் சத்தங்கள். பச்சாபள்ளியில் இருந்த ஜனங்கள் வானவெடி கொளுத்தி விசியபடி ஆய், ஊய் சத்தம் எழுப்பியபடி மேற்கு நோக்கி ஓடி வந்தனர்.

அதில் பதட்டமான யானை திரும்ப தெற்கு நோக்கி வந்து, அங்கே இருந்த ஜெயா டிவி நிருபர் வீட்டின் வாழையைப் பதம்பார்த்தது. அங்கே குரைத்துக் கொண்டிருந்த நாய்கள் திடீரென்று தம் சத்தத்தை குறைத்துக் கொண்டு கமுக்கமாகின. அதை மக்கள் சத்தம் போட்டு விரட்ட, வேகமாக அடுத்ததாக உள்ள தென்னந்தோப்புக்குள் சென்று, அங்கிருந்து ஒரு பள்ளத்தில் இறங்கி காட்டுக்குள் சென்று மறைந்தது.

அடுத்த நாளும் அந்த ஒற்றை யானை தொடர்ந்து அங்கே வந்தது. அப்போதுதான் அதை முழுமையாக கவனித்தேன். ஒரு தந்தம் நீளம் குறைவாகவும், மற்றொரு தந்தம் படு நீளமாகவும் இருந்தது. ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு பின்புறம் ஒரு பர்லாங் தூரத்தில் அதை சிலர் தீப்பந்தங்களுடன் விரட்டிக் கொண்டிருந்தார்கள். அதுவும் படு சாதுவாக தீப்பந்தத்திற்கு பயந்தோ, மனிதர்களின் இரைச்சலுக்குப் பயந்தோ எதிர்திசையில் சென்று கொண்டிருந்தது. அப்போதுதான் அதை கவனித்தேன். அதன் பின்னங்கால் கொஞ்சம் இழுத்தபடி நொண்டிக்கொண்டே சென்றது.

அதே யானை, அடுத்த நாள், அதற்கடுத்தநாள் என அங்கே விசிட் செய்ய ஆரம்பித்தது. அதை இங்குள்ளவர்கள் விரட்டுவது தொடர்கதையானது. வெளியே விசில் சத்தமோ, பட்டாசு சத்தமோ கேட்டால் போதும் ஓடிப்போய் பார்ப்பதும், இந்த யானை நொண்டிக் கொண்டே மேற்கே வடக்கு தெற்காகவோ, தெற்கு வடக்காகவோ செல்வதைக் காண நேரிடும். அதன் பின்னால் மனிதக்கூட்டம். அது ஒரு வேளை திரும்பினால் அவர்கள் கதி என்ன ஆகும்? என்றும் யோசிப்பேன்.

அப்படி அது திரும்பியதும், அந்தக் கூட்டம் சிதறி ஓடியதையும் கண்டிருக்கிறேன். ஒரு முறை எங்கள் வீட்டிற்கு தென்புறம் உள்ள மூன்றாவது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தென்னை மரத்தையோ, முருங்கை மரத்தையோ யானை உடைக்கும் சத்தம் கேட்டது. நாய்கள் குரைத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தன. பச்சாபள்ளியிலிருந்து ஒரு கூட்டம் யானையை விசிலடித்தும், வானவெடி வீசியும் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. நானும், என் மனைவியும், என் மகனும் மொட்டைமாடியில் நின்றிருந்தோம்.

இரவு 11 மணிக்கும் மேலிருக்கும். மூன்று வீடு தள்ளி மரங்களின் கிளைகளை உடைத்துக் கொண்டிருந்த அந்த யானை, அப்படியே பின்பக்கம் நகர்ந்து அந்த வீட்டின் காம்பவுண்டை ஒட்டி எங்கள் வீட்டு காம்பவுண்டை நோக்கி வரத் தொடங்கியது. ‘அப்பா, அப்பா வருதுப்பா!’ என்று என் மகன் செல்போனில் புகைப்படம் எடுக்க விழைகிறான்.

- மீண்டும் பேசலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x