Published : 23 Mar 2018 07:24 PM
Last Updated : 23 Mar 2018 07:24 PM

யானைகளின் வருகை 149: நைஜில் என்றொரு சரணாலயம்

நைஜில் ஓட்டரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் பத்தோடு பதினொன்றாக செய்திகள் தரும் என்ஜிஓக்களில் ஒருவராகவே அப்போது பாவித்தேன். அதற்கேற்பவே அவரைப் பேட்டிகளில் பயன்படுத்திக் கொண்டேன். இவர் மூலமாகவே முதுமலை வனத்துறையில் அந்த காலகட்டத்தில் நடந்த முறைகேடுகள், முகாம் யானைகளுக்கு அளிக்கப்படும் உணவுகளில் கலப்படம், கோயில் யானைகள் முகாம் நடத்துவதால் ஏற்படும் நோய்த் தொற்றுக்கள். ஏற்கெனவே முதுமலைக்கு வந்த கோயில் யானைகளின் கதி என்ன என்பது பற்றியதான செய்திகள் எல்லாம் வெளிவந்தன. அதில் நெருக்கமான மனிதருடன் அடுத்தடுத்த சந்திப்புகளில் காடுகளாக சுற்ற ஆரம்பித்தேன்.

ஹோட்டலில் தங்குவதும், காலையில் அவர் ஜீப்பில் வந்தவுடன் அவருடன் கிளம்புவதுமான நீண்டதொரு பயணம் அது. அப்போதுதான் அந்த மனிதரின் பிராணிகள் நல நேசத்தை கண்கூடாகக் கண்டேன். அது முதல் பயணத்திலேயே ஆச்சர்யமூட்டும் வகையில் அமைந்தது. அவர் பயணித்த ஜீப்பில் ஒரு பெரிய பக்கெட் இருந்தது. அதில் நம் ஊர் தேங்காய் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு போல ஏதோ ஒரு பொருளை நிரப்பி வைத்திருந்தார். போகும் வழியில் எல்லாம் இவர் ஜீப்பைப் பார்த்து தெருநாய்கள் பறந்து வந்தபடி இருந்தன. இவர் அந்த பக்கெட்டில் இருந்த தின்பண்டத்தை அவற்றுக்கு வீசியபடி வந்தார். அவையும் தவ்வி எடுத்து சாப்பிட்டபடி நகர்ந்தன.

சில நாய்கள் மெதுவாகச் செல்லும் ஜீப்பிலேயே தொற்றி ஏறி அவர் மடிமீது தலைவைக்க, வண்டியை நிறுத்தி விட்டு சாதுர்யமாக தடவிக் கொடுத்து அதன் பெயரைச் சொல்லி போடா, போ என கூடுதலாக தின்பண்டங்களை வீசினார். அப்புறம்தான் தெரிந்தது. அவர் பக்கெட்டில் நிரப்பி வைத்திருந்தது நாய்களுக்கென அவரே தயாரித்த பிஸ்கட்டுகள். அந்த பிஸ்கட்டுகளை அன்றாடம் தெருநாய்களுக்கு வீசுவதையும், தெருநாய்களில் அடிபட்டுக் கிடப்பதை தன் பிராணிகள் நலக் காப்பகத்திற்கு கொண்டு வந்து சிகிச்சையளிப்பதையும், அவை குணமானவுடன் கருத்தடை ஆபரேசன் செய்வதையும் தவமாகவே செய்து வருகிறார் என்பதும் அறிந்து அதிசயப்பட்டேன். அவர் நடத்தி வந்த பிராணிகள் நலக் காப்பகத்திற்கு முதுமலை காடுகளில் அடிபட்டும், அநாதரவாக விடப்பட்ட யானைக்குட்டிகள், மான்குட்டிகளை கொண்டு வந்து வனத்துறையினரே சிகிச்சை அளிக்கக் கொடுப்பதாகவும் அறிந்து ஆச்சர்ய உச்சத்திற்கும் போனேன்.

தாயிடமிருந்து பிரிந்த யானைக்குட்டியை எப்படி பராமரிக்க வேண்டும். மான்குட்டியை எப்படி வைக்க வேண்டும். புலிக்குட்டி, சிறுத்தைக்குட்டியை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதையெல்லாம் ஒரு குழந்தையைப் பராமரிப்பது போல் சொல்லிக்கொண்டே வந்ததைக் கேட்கும்போது பெற்றதற்கு இணையாக பாசத்தை உமிழும் தாய்ப்பாசத்தையே அவரிடம் கண்டேன்.

ஒரு முறை நான் அவருடன் ஜீப்பில் செல்லும்போது மணி மாலை ஆறரை, ஏழு ஆகி விட்டது. அந்த சமயம் நாங்கள் முதுமலைக் காட்டின் எல்லை ஒன்றில் இருந்தோம். அங்கே பத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட காட்டு யானைகள் குழு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் உடன் வந்த நண்பர் ஒருவர் ஜீப்பை வேகமாக ஓட்டுங்கள், அது வந்துடப்போகுது எனப் பயந்தார். ஆனால் நைஜில் பதட்டப்படவில்லை. வண்டியில் இருந்தவர்களை அமைதிப் படுத்தினார்.

'அது ஒண்ணும் செய்யாது. நம்மை அது பாத்துடுச்சு. நம்ம தீங்கு செய்ய வந்தவங்க இல்லைன்னு உணர்ந்திருச்சு. நீங்க இப்ப அதை கிட்டவே போய் தாராளமாகப் பார்க்கலாம்!' என சொல்லி ஜீப்பை யானைகள் இருந்த இடத்தின் பத்தடி தூரத்திலேயே நிறுத்தியவர் எந்த இடத்திலும் ஜீப்பின் என்ஜினை நிறுத்தாமல் பார்த்துக் கொண்டார்.

தும்பிக்கை அசைவை கண நேரம் நிறுத்திவிட்டு உறுத்துப் பார்த்த அந்தக் கூட்டத்திலேயே பெரிய யானை, சின்ன செறுமலை வெளிப்படுத்திக் கொண்டு தீவனத்தை தின்ன ஆரம்பித்து விட்டது. அதேபோல் மற்ற யானைகளும் சாப்பிட, பெரிய யானையின் சிறிய கண்கள் மட்டும் எங்களை பார்த்த மாதிரி இருந்தது.

'எந்த வண்டியா இருந்தாலும் என்ஜினை மட்டும் அணைக்காம, எந்த ஒரு கலாட்டாவும் பண்ணாம இப்படி நின்னா போதும். எத்தனை யானைகள் இருந்தாலும் ஒண்ணும் பண்ணாது!' என்று சொல்லி பத்து நிமிடத்திற்கு மேல் எங்களுக்கு அந்த காட்டு யானைகளை அருகிலேயே காண்பித்தார் நைஜில்.

அப்போதுதான் அவர் முதுமலைக்கு வந்த காந்தி குட்டி யானையை தன் யோசனைப்படி ஒரு மருத்துவர் குழுவே காப்பாற்றிய விதத்தையும், வனத்துறையினர் ஈகோ பாலிடிக்ஸில் அதை கொண்டு போய் காட்டில் விட்டு சாகடித்த கதையையும் நெஞ்சு விம்ம எனக்கு சொன்னார்.

அவர் அதோடு நிறுத்தவில்லை. அடுத்தநாள் அவரின் இருப்பிடத்திற்கும் கூட்டிச் சென்றார். அங்கே கண்ட காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது. அவர் ஜீப்பில் எங்களை அழைத்துக் கொண்டு போய் அங்கே இறங்கியதும் முப்பதுக்கும் மேற்பட்ட நாய்கள் வாஞ்சையுடன் அவரை நோக்கி ஓடி வந்தன. காட்டுக்குள்ளிருந்து நூற்றுக்கணக்கான கழுதைகள் ஒரே நேரத்தில் மாறி மாறி கத்தும் சத்தம். இருபதுக்கும் மேற்பட்ட குதிரைகளின் கனைப்பொலி. எல்லாவற்றுக்கும் மேலாக மரத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் இவரின் மீது குதித்து தோளிலும், தலையிலும், பிடறியிலும் அமர்ந்து விளையாடின. அவற்றை அவர் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

அதில் சோகமான ஒரு விஷயம். இவரிடம் விளையாட்டு காட்டிய, வாஞ்சை செலுத்திய அத்தனை விலங்குகளுக்கும் கண்ணோ, காதோ, ஒரு காலோ, இடுப்போ ஊனமாகியிருந்ததுதான். அத்தனையும் இவர் சிகிச்சை கொடுத்து பராமரிப்பதுதான். கிட்டத்தட்ட பத்து ஏக்கர் பரப்பளவில் விரிந்திருந்தது இவரது பிராணிகள் நல காப்பகம். அதில் புல் மேய்ந்து கொண்டிருந்த கழுதைகள் இவரைப் பார்த்ததும் ஓடி வந்து கனைத்துக் கொண்டே நாவல் நக்கியதும், அதைத்தாண்டி வேறு கழுதைகள் சிநேகத்துடன் கத்தி விளையாடியதையும் பார்க்க கண்கோடி வேண்டும்.

அப்போது இரண்டு மான்களுக்கும் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. அதை வனத்துறையினர் காட்டில் அடிபட்ட நிலையில் கண்டெடுத்து ஒரு வாரம் முன் இங்கே சிகிச்சைக்காக விட்டதாக சொன்னார். இப்படியொரு அற்புத உலகம் எப்படி இவருக்கு வாய்த்தது என்று கேட்டபோது அதன் வரலாறு விரிந்தது.

நைஜில் ஓட்டருக்கு பூர்வீகம் பெங்களூரு பக்கம். ஊட்டி கான்வென்டில் படித்த போதே நாய்கள் என்றால் கொள்ளை இஷ்டம். தனக்கு பாக்கெட் மணியாக பெற்றோர் தரும் பணத்தை தெருவில் குட்டி போட்டு பரிதாபமாக இருக்கும் நாய்களுக்கு பிஸ்கட் வாங்கிப் போட செலவழிப்பார். சில சமயங்களில் அடிபட்டு கிடக்கும் குட்டி நாய்களை எடுத்துச் சென்று தன் வீட்டில் வளர்ப்பார். அதை கால்நடை மருத்துவரிடம் கொண்டு போய் சிகிச்சை அளிப்பார்.

இதை எதேச்சையாக நீலகிரிக்கு வந்த வெளிநாட்டுப் பெண்மணி பார்த்திருக்கிறார். இந்தப் பையன் அடிபட்ட குட்டிநாயை எங்கே கொண்டு போகிறான் என பின்தொடர்ந்து பார்த்திருக்கிறார். இதை சிகிச்சையளித்து தன் வீட்டில் உள்ள மற்ற குட்டிநாய்களோடு விட்டிருப்பதையும் பார்த்திருக்கிறார். பையனிடம் பேசியதில் அவனுக்கு பிராணிகளிடம் இருக்கும் அன்பும் நேசமும் வியக்க வைத்திருக்கிறது.

'எங்க ஊருக்கு வர்றியா? உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது!' என கூப்பிட, 'அப்ப இங்கே இருக்கிற நாய்களையெல்லாம் யார் காப்பாத்தறது?' என கேட்டிருக்கிறான். அதில் நெகிழ்ந்து போன அம்மணி உனக்கு என்ன உதவி வேண்டுமோ கேள் என்று ஒரு தொகையை அந்த நாய்கள் பராமரிப்புக்காக தன்னிடம் இயங்கி வந்த தன்னார்வத்தொண்டு நிறுவனம் மூலம் வழங்க ஆரம்பித்திருக்கிறார். அவர் நீலகிரி வரும்போதெல்லாம் பையன் வைத்துள்ள பிராணிகள் பராமரிப்பு மையம் வளர்ந்து வருவதை பார்த்து மகிழ்ச்சி பூத்திருக்கிறார். பையன் பெரியவனாகி, ஒரு கால்நடை மருத்துவருமாக, அவருக்கென ஒரு பிராணிகள் மையத்தையே உருவாக்கிக் கொடுத்து விட்டார்.

அதுதான் மசினக்குடி, வாழைத்தோட்டம் பகுதியில் 'இபான்' (IPAN- India Project for Animals and Nature) என்ற பெயரில் பிராணிகள் நல அமைப்பாக இயங்கி வருகிறது. இவரின் இந்த அரிய சேவை பற்றி அப்போது (2000 ஆம் ஆண்டில்) குமுதத்திலிருந்து புதிதாக வந்த குமுதம் ஜங்ஷன் வார இதழில் 'நைஜில் என்றொரு சரணாலயம்!' என்ற கட்டுரையை எழுதினேன்.

ஒரு முறை இவர் மையத்திற்கு வந்து பார்வையிட்ட மேனகா காந்தி ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து சென்றிருக்கிறார். அது முதலே மேனகா காந்திக்கு இவர் நெருக்கம். முதுமலை, நீலகிரி காடுகளில் கானுயிர்களுக்கு ஏதும் துன்பம் என கேள்விப்பட்டால் போதும் உடனே மேனகா காந்தி அலுவலத்திலிருந்து இவருக்குத்தான் போன் வரும். அந்த விஷயத்தை கூட நானாக கேட்டபோதுதான் சமீபத்தில் ஒரு நாள் கூச்சத்தோடு சொன்னார் நைஜில்.

- மீண்டும் பேசலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x