Last Updated : 12 Feb, 2018 04:37 PM

 

Published : 12 Feb 2018 04:37 PM
Last Updated : 12 Feb 2018 04:37 PM

ரயிலில் பயணிக்கும் முதியவர்களுக்காக மாற்றி யோசித்த சேலம் மாணவர்: புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்காக இலங்கை செல்கிறார்

நம்மில் பலரும் பெரும்பாலும் நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்போம். ஆனால், தன்னலமற்று பிறருக்காகவும் சமூக மேம்பாட்டுக்காகவும் சிந்திப்பவர்களே தலைவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் உருவாக முடியும்.

அப்படித்தான், ரயிலில் பயணிக்கும் முதியவர்கள் சிரமத்தைக் குறைக்க ஒரு திட்ட முன்வடிவை முன்வைத்து ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் நடத்திய இளம் விஞ்ஞானிகள் போட்டியில் கலந்து கொண்டு 2-வது ரன்னர் அப் இடத்தைப் பிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த மாணவர்.

தி.நகரில் உள்ள எம்.சி.என். உயர் நிலைப்பள்ளியில் 9-வது படிக்கிறார் கவுதம். இந்தப் பள்ளி அரசு உதவி பெற்று இயங்கும் பள்ளி. இப்பள்ளியில் கடந்த ஆண்டுதான் கவுதம் வந்து சேர்ந்திருக்கிறார். வந்தநாள் முதலே படிப்பில் அதீத ஆர்வம் காட்டியிருக்கிறார். அதன் காரணமாகவே ஆசிரியர்களின் செல்லப் பிள்ளையாகவும் ஆகியிருக்கிறார்.

கடந்த ஆண்டு மண்டல அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட கவுதமின் பள்ளி முதலிடத்தைத் தட்டிச் சென்றது. காரணம் கவுதம் ஏற்படுத்திய விளக்க மாதிரி. பிளாஸ்டிக் (நெகிழியின்) தீமையை விளக்கி அவர் ஒரு விளக்க மாதிரியை வடிவமைத்திருந்தார். அது அவரது பள்ளிக்கு முதலிடத்தைப் பெற்றுத்தந்தது. அந்த வெற்றி அளித்த ஊக்கம் கவுதமின் அறிவியல் மீதான நாட்டத்தையும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதான ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. அவரது அறிவுப் பசிக்கு தகுந்த உணவு அளித்து வந்திருக்கிறார் அவரது அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார்.

இந்த வேளையில்தான் ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனம் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியை அறிவித்திருக்கிறது. அந்தப் போட்டிக்கு நாடு முழுவதும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. சர்வதேச தரத்திலான பள்ளிகள் முதல் உள்ளூர் கார்ப்பரேஷன் பள்ளிகள் வரை அறிவுத் தாகம் நிறைந்த மாணவர்கள் பலர் விண்ணப்பித்தனர்.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் பெற்ற விண்ணப்பங்கள் 500. அவற்றில் 250 விண்ணப்பங்களை முதல் கட்டத்துக்கு அந்நிறுவனம் தேர்வு செய்தது. கடந்த ஜனவரி 23-ம் தேதியன்று போரூர் மணப்பாக்கம் அருகே நடந்த நிகழ்ச்சியில் அந்த 250 மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர். அவர்களில், இறுதிப் போட்டிக்காக முதல்நிலையில் 18 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, உடனடியாக ஒரு தலைப்பு வழங்கப்பட்டு அது தொடர்பாக பேச வேண்டும் என்ற சவால் வைக்கப்பட்டது. அதில் மாணவர் கவுதம் வெற்றி பெற்றார். இறுதியில் 6 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் தனியார் பள்ளி மாணவர்கள். 3 பேர் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் கவுதம் 2-வது ரன்னர் அப்- ஆக வெற்றி பெற்றிருக்கிறார்.

 

 

கவுதம் முன்வைத்த திட்ட வரைவுக்கு செயல்வடிவம் கொடுக்க அவர் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவர் இலங்கை செல்வதற்கான மொத்த செலவையும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனமே ஏற்றுக் கொள்கிறது. பள்ளி நிர்வாகம் கவுதமின் பாஸ்போர்ட் வேலைகளை மட்டும் கவனித்து வருகிறது.

இலங்கை வரை அழைத்துச் செல்லும் திட்டம்:

ரயில், இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் போக்குவரத்து வாகனம். ரயிலில் செல்வது குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் வசதியாக இருக்கிறது என்பது ரயில் பயணத்தை பயணிகள் தேர்வு செய்யக் கூடுதல் காரணமாக இருக்கிறது. ஆனால், ரயிலில் ஏறி உட்கார்வதற்கு முன்னாள் முதியவர்கள் சில சவால்களை சந்திக்கின்றனர். அவர்கள் நடைமேடையில் அதிக தூரம் நடந்து செல்வதில் சிக்கல் இருப்பதால் குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் பேட்டரி வாகனங்கள் இருக்கின்றன. அதேபோல் வெகுசில ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் இருக்கின்றன.

ஆனால், எல்லா ரயில் நிலையங்களிலும் எளிதில் முதியவர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு தொழில்நுட்ப உபகரணத்தை கண்டுபிடிப்பதே கவுதமின் லட்சியமாக இருந்தது. அதற்காக அவர் உருவாக்கிய திட்டம்தான் 'ஸ்லைடிங் பிளாட்பார்ம்' (Sliding Platorm) திட்டம்.

அதாவது ஒரு நடைமேடைக்கும் இன்னொரு நடைமேடைக்கும் இடையே இத்தகைய ஸ்லைடிங் பிளாட்பார்ம் அமைக்கப்படும். ரயில்கள் வராத நேரத்தில் இந்த ஸ்லைடிங் பிளாட்பார்ம் வாயிலாக முதியவர்கள் அடுத்தடுத்த நடைமேடைக்கு எளிதில் செல்ல முடியும். இதனால், அவர்கள் தட்டுத் தடுமாறி படிக்கட்டுகளில் ஏறி நடைமேடைக்குச் செல்ல வேண்டியிருக்காது. ரயில் வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாகவே கிராஸிங்கில் சிக்னல் போடுவதுபோல் இந்த ஸ்லைடிங் பிளாட்பார்முக்காக ஒருவித பீப் ஒலி எழுப்பப்படும். அப்போது ஸ்லைடிங் பிளாட்பார்ம் மேலே உயர்த்தப்பட்டுவிடும். மீண்டும் ரயில்கள் அப்பாதையில் கடக்காதவரை ஸ்லைடிங் பிளாட்பார்ம் இயக்கப்படும். இந்தத் திட்டம்தான் கவுதமும் பரிசை வென்றுதந்துள்ளது.

சேலம் டூ சிலோன்..

இந்த வெற்றி குறித்து கவுதமிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் பேசினோம். அப்போது அவர், மகிழ்ச்சி துள்ளலுடன் நம்முடன் தனது திட்டம் குறித்தும் எதிர்கால லட்சியம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

உங்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது எப்படி ஆர்வம் வந்தது?

ஒன்றிலிருந்து 7-வது வரை நான் சேலத்தில்தான் படித்தேன். 8-ம் வகுப்பு படிக்கும்போதுதான் இங்கு வந்தேன். இங்கே எனது அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் சார் தான் எனக்கு முன்னோடி. அவர் என்னை எப்போதும் ஊக்குவிப்பார். அவரது ஊக்கத்தினால்தான் மண்டல அளவிலான அறிவியல் போட்டியில் எங்கள் பள்ளி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்தும் அவர் கூறியதால்தான் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனப் போட்டியிலும் நான் பங்கேற்றேன். அதேபோல், எனது பள்ளித் தலைமை ஆசிரியர் சுதாகர் சார் என்னை எப்போதுமே ஆதரித்து ஊக்குவிப்பார். அவர்தான் நான் படிக்க உதவுகிறார்.

ஏன் இந்த ஸ்லைடிங் பிளாட்பார்ம் திட்டத்தை தேர்வு செய்தீர்கள்?

என் பாட்டியை ஒவ்வொரு முறை ரயிலில் ஊருக்கு அழைத்துச் செல்லும்போதும் அவர் நடைமேடைக்கு செல்ல படிக்கட்டுகளில் ஏற சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அப்போதிருந்தே இதற்கு ஏதாவது மாற்று வராதா என யோசிப்பேன்.

தற்போது, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியை அறிவித்தபோது ஸ்லைடிங் பிளாட்பார்ம் திட்டம் குறித்து எனது தலைமை ஆசிரியரிடமும், அறிவியல் ஆசிரியரிடமும் கூறினேன். அவர்கள் அளித்த ஊக்கம், இன்று என்னை வெற்றி பெறச் செய்துள்ளது.

 

 

இலங்கை செல்கிறீர்கள்? எப்படி உணர்கிறீர்கள்?

மகிழ்ச்சியாக இருக்கிறது. விமானத்தை தரையில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறேன். அந்த விமானத்தில் பயணம் செய்யப்போவதை நினைக்கும்போது என் சந்தோஷத்துக்கு எல்லை இல்லை.

அம்மா என்ன சொன்னார்கள்?

அம்மா 6-வது வரை படித்திருக்கிறார். நானும், தங்கையும் நிறைய படிக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது கனவு. நான் வெற்றி பெற்றதைச் சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டார்.

உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?

அக்ரிகல்ச்சரல் சயின்டிஸ்ட் (Agricultural Scientist) ஆகணும். நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயம்தான். ஆனால், இப்போது விவசாய நிலங்கள் எல்லாம் கட்டிடங்கள் ஆகின்றன. அதை விழிப்புணர்வு மூலம் தடுக்க வேண்டும்.

அதேபோல், அறுவடைக்காக இப்போது சில இயந்திரங்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால், அவை விலை அதிகமாக இருக்கின்றன. எனவே, குறைந்த விலையில் ஓர் அறுவடை இயந்திரம் கண்டுபிடிக்க வேண்டும். இதேபோல், விவசாயத்துக்காக இன்னும் பல உபகரணங்களை கண்டுபிடிக்க வேண்டும்.

கவுதமின் உயரிய எண்ணங்கள் எல்லாம் உயிர் பெற வாழ்த்தினோம்.

நெகிழ்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்..

மாணவர் கவுதம் பற்றி கேட்ட மாத்திரத்திலேயே அவரது பள்ளித் தலைமை ஆசிரியர் சுதாகர் நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.

"கவுதமின் குடும்பம் மிகுந்த சிரமத்தில் உள்ளது. தந்தை இல்லை. தாய் வீட்டு வேலை செய்து கவுதமையும் அவரது தங்கையையும் பராமரிக்கிறார். கவுதம் பள்ளிச் செலவை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். படிப்பில் கெட்டிக்காரர் கவுதம். அவருக்கு அதீத நினைவாற்றல். அண்மையில் அப்துல் கலாம் நினைவு பேச்சுப் போட்டியில் கவுதம் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

 

 

அதற்காக அவர் ராமேஸ்வரத்திலுள்ள அப்துல் கலாம் மணி மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்தப் பயணத்தின்போது ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் பகுதிக்குச் சென்று வந்த கவுதம் அத்தனை தீர்த்தங்களையும் பெயரையும் வரிசை மாறாமல் மனப்பாடமாக சொன்னார். அது எங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதேபோல், ஏலகிரி மலைக்கு பள்ளிச் சுற்றுலா அழைத்துச் சென்றோம். மேலே சென்றவுடன் ஏலகிரி வரும்வரை இருந்த அத்தனை வளைவுகளின் பெயர்களையும் மனப்பாடம் செய்து கூறினார். அவரது நினைவாற்றல் அவருக்கு இன்னும் பல வெற்றிகளைப் பெற்றுத் தரும். அவருடைய லட்சியம் நிறைவேற வேண்டும் என்பதே எங்களது எண்ணம்" என்றார் சுதாகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x