Last Updated : 15 Jan, 2018 05:11 PM

 

Published : 15 Jan 2018 05:11 PM
Last Updated : 15 Jan 2018 05:11 PM

புத்தகக் காட்சியில் ஒரு கடையை தெரிஞ்சுக்கலாமா? - புக்ஸ் ஃபார் சில்ரன்

''சார் பூமி ஏன் சார் சூரியனை சுத்தி வருது?'' ''பிலிம் தலைகீழா இருந்தாதான் திரையில படம் நேரா இருக்குமாமே அது ஏன் சார்'' என்று கேள்வி கேட்கும் குழந்தைகள் பள்ளிகளில் பலராலும் விநோதமாகப் பார்க்கப்படுவதுண்டு, ''அம்மா ஒரு கதை சொல்லேன்.. அப்பதான் நான் தூங்குவன்'' என்று கேட்கும் குழந்தைகள் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிடுவதுண்டு...

உலக ஞானத்தை கேள்வி கேட்பதின்மூலமும் அப்பாவோ, அம்மாவோ, வீட்டில் உள்ள மற்ற பெரியவர்கள் சொல்லும் கதைகளை கேட்டலின் வழியே பரபரப்பான குழந்தை மனம் ஆசுவாசப்படுவதையும் காண்கிறோம்.

உலகை அதிசயத்தோடு எதிர்கொள்ளும் இளங்குழந்தைகளை அவர்களது ஆர்வத்தைப் புரிந்துகொள்ளமுடியாத பெற்றோரே அநேகம். அதனாலேயே பல இடங்களில் ''அட சும்மா கிட சும்மா தொணதொணன்னு கேட்டுகிட்டு'' என்று வாயடைக்கும் குரலையும் கேட்கமுடிகிறது.

ஆனால் எல்லைகள் கடந்த அறிவுப்பாய்ச்சல் இன்று பலரையும் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது.. குழந்தைகளிலிருந்து இளம் விஞ்ஞானிகள் உருவாவதற்கு ஏதுவாக 'புக்ஸ் பார் சில்ரன்' பதிப்பகமும் ஒரு அணிலாக செயல்பட்டுவருகிறது. அதற்கு அவர்கள் வெளியிட்டு வரும் நூற்றுக்கணக்கான குழந்தை புத்தகங்களே சாட்சி.

அவர்கள் வெளியிட்டுவரும் குழந்தை நூல்கள் ஆயிரக்கணக்கான குழந்தைகளை சென்றடைந்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை போதுமானதுதானா? குழந்தைகள் என்ன மாதிரியான புத்தகங்களை விரும்புகிறார்கள்? குழந்தைகள் புத்தகங்கள் போதிய அளவுக்கு விற்பனையாகின்றனவா? போன்ற கேள்விகளுக்கு சிறந்த விடையாகத் திகழ்கிறது சென்னை புத்தகக் காட்சியில் இடம்பெற்றிருக்கும் 'புக்ஸ் பார் சில்ட்ரன்' அங்காடி.

'புக்ஸ் பார் சில்ட்ரன்' பதிப்பாளர் நாகராஜ் நல்லவேளையாக புத்தக அரங்கிலேயே கிடைத்தார். நேற்று (ஞாயிறு) மாலை அவரிடம் பேசினோம். பதிப்புலகில் குழந்தைகளிடம் புத்தகங்களை கொண்டுசெல்லும் அவரது 15 ஆண்டுகால அனுபவங்கள் ஊடே அவரது பயணத்தைப் பற்றிய பார்வையாகவும் அது அமைந்தது...

பாரதி புத்தகாலயத்திலிருந்து புக்ஸ் பார் சில்ட்ரன் உருவான வரலாற்றைச் சொல்லுங்களேன்..

பாரதி புத்தகாலயம் 2002ல் தொடங்கப்பட்ட புத்தகங்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்று புத்தகக் காட்சியுடன்தான் தொடங்கினோம். அப்போது குழந்தைகளுக்கான பதிப்பகம் தொடங்க வேண்டும் என்ற திட்டம் உருவானது. ஆனால் 2005ல்தான் புக்ஸ் பார் சில்ட்ரன் பதிப்பகம் தனியே உதயமானது. அதற்காக

எழுத்தாளர்களிடம் குழந்தைகள் பற்றிய மாற்றுக் கல்விக்கான சிந்தனைகளை உருவாக்க லயோலா கல்லூரியில் 2 நாட்கள் செமினார் நடத்தினோம். அதைத் தொடர்ந்து தாகூர், பெரியார், அம்பேத்கார், லெனின், மாண்டீஸ்வரி, பாவ்லோபிரேயர், ஜான் வோல்ட் இவர்கள் என்ன மாற்று சிந்தனை வைத்திருக்கிறார்கள் என மக்களுக்குத் தெரியப்படுத்த 25 புத்தகங்கள் கொண்டுவந்தோம். இது தவிர, பாரதி கிருஷ்ணகுமார் முரண்பாடுகளிலிருந்து கற்றல், இரா.நடராஜன் எழுதிய ஆயிஷா ஆகிய புத்தகங்களும் அப்போது வெளிவந்தன.

2005ல் குறைந்த விலையில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் கொண்டுவரவேண்டும் என தீர்மானித்தோம். அதன்படி ரூ.5 விலையில் நிறைய புத்தகங்கள் கொண்டுவந்தோம். ச.மாடசாமி எழுதிய ஏமாளியும் திருடனும் பூமரப் பெண் ஆகிய புத்தகங்களும் இயற்பியல், வேதியியல், உயிரியல் சோதனைகள்,

விஞ்ஞானிகளைப் பற்றிய சீரியல் புத்தகங்கள் கொண்டுவந்தோம். இன்று குழந்தைகளுக்கான புத்தகக் காட்சிகள் கடலூர், காவேரிப்பட்டினம் ஆகிய இடங்கள் உள்ளிட்டு தமிழகம் முழுவதும் நடத்திவருகிறோம்.

குழந்தைகள் எந்தமாதிரியான புத்தகங்கள் விரும்புகிறார்கள்?

குழந்தைகளின் வயதைப் பொறுத்து அவை வித்தியாசப்படுகின்றன. ஆரம்பத்தில் குழந்தைகள் பெரும்பாலும் படக்கதைகள் வழியாகத்தான் படிக்கவே

விரும்புகிறார்கள். அதற்குபிறகு அவர்களின் ரீடிங் ஹேபிட்டுக்கு நம்மால் தீனி போடமுடியாது. கதைகள், சயின்ஸ் ஆக்டிவிட்டி, பயோகிராஃபி வாசிப்புகளில் அவர்களது ஈடுபாட்டைப் பார்க்கமுடிகிறது. இன்றுள்ள ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் பில்பிரைசன் எழுதிய 'ஏ ஷார்ட் ஹிஸ்டரி ஆப் நேச்சுரலி எவ்வரித்திங்' படிக்கக்கூடியவனாக இருக்கிறான்.

books for childrensjpg100center 

 

இதை உணர்ந்துதான் உலகம் முழுவதும் வெளியான சுற்றுச்சூழல், வானியல், மரபியல், நானோ டெக்னாலஜி பற்றிய நூல்களை மிக எளிமையாக குழந்தைகளுக்கு புரியும்வகையில் வெளியிடத் தொடங்கினோம். மேலும் பெரிய விஞ்ஞானிகள் நேர்காணல்கள் பல்வேறு இதழ்களில் வெளிவந்தன. அவற்றை மொழிபெயர்த்து சிறுசிறு நூல்களாகத் தந்தோம். வாங்கன அறிவியல் பேசலாம் எனும் நூல் 5000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.

குழந்தைகளுக்காக உற்சாகமாக எழுத வருகிறார்களா?

ஆரம்பக்காலத்தை ஒப்பிடும்போது இப்போது பரவாயில்லை. நிறைய எழுத்தாளர்கள் குழந்தைகளுக்காக எழுத வந்துள்ளார்கள். நல்ல புரிதல் உருவாகிவருகிறது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் குழந்தைகளுக்காக எழுத வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில் கடலூரில் நடைபெற்ற புத்தகக் காட்சியில் 'தேசிய புத்தகத் திருவிழா விருதுகள்' வழங்கி கௌரவித்தோம்.

குழந்தைகளுக்கான பத்திரிகைகளில் எழுதிவருபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களை அழைத்து 'சிறந்த குழந்தை எழுத்தாளர் விருதுகளையும் வழங்குகிறோம்.

குழந்தை நூல்கள் ஆயிரக்கணக்கான குழந்தைகளை சென்றடைந்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை போதாது. இன்னும் நிறைய வேலை செய்யவேண்டும்.

குழந்தைகளுக்கான புத்தகக் காட்சிகளை எந்தமாதிரியான நாட்களில் நடத்துகிறீர்கள்?

பாரதி புத்தகாலயத்திலிருந்து புக் பார் சில்ரன் உதயமானபிறகு ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர நாள், பிப்ரவரி 28 சர்.சி.வி.ராமன் பிறந்தநாள், ஏப்ரல் 23 உலக எழுத்தறிவு நாள், நவம்பர் 11 முதல் 18 வரையுள்ள தேசிய புத்தக வாரம் இவை உள்ளிட்டு பல நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கான புத்தகக் காட்சிகளை தமிழகம் முழுவதும் நடத்திவருகிறோம்.

புத்தகம் புத்தகம் சார்ந்து தங்களுக்கு இருந்த ஆரம்பகால ஈடுபாட்டைப் பற்றி...

நான் சென்னை கார்ப்பரேஷன் பள்ளியில்தான் படித்தேன். அங்கு ஷிப்ட் முறையில்தான் வகுப்பு. எனக்கு காலை நேர வகுப்புகள். அதனால் மதியம் வேறுவழியேயில்லை. நூலகம்தான் எனது வாசஸ்தலம். சாண்டில்யன் படிக்கத் தொடங்கி புதுமைப்பித்தன் வரை வந்தேன். எங்கள் பகுதியில் மகாகவி பாரதி வாசகர் வட்டம் வைத்து நடத்தினோம். அதில் செயலாளராக இருந்தேன். அந்த வட்டத்திற்கு நிறைய பத்திரிகைகள் வரவழைத்தோம். பிறகு சிபிஎம்மில் முழுநேர

தொண்டராக இருந்தபோதும் வாசிப்புப் பழக்கத்தை விடாமல் இருந்தேன். அப்போது மார்க்சிஸ்ட் இதழ் தொடங்கப்பட்டபோது அதை நடத்தும் பொறுப்பைத் தந்தார்கள். பின்னர் கட்சிக்காக ஒரு பதிப்பகம் தொடங்கும்போது அதற்கான பொறுப்பையும் ஏற்றேன். பாரதி புத்தகாலயத்தில் பணிபுரியத் தொடங்கி 15 வருடங்களில் பலவிதமான பதிப்பு அனுபவங்கள் கிடைத்துள்ளன.

குழந்தைகளுக்கான புரிதலை விரிவுபடுத்துவதில் புக்ஸ் ஃபார் சில்ரட்ன் எழுத்தாளர்களுடன் பதிப்பாளர் நாகராஜ் உழைப்பும் கலந்திருக்கிறது என அறிந்தபோது அவரை வாழ்த்தி விடைபெற்றோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x