Published : 12 Jan 2018 09:38 PM
Last Updated : 12 Jan 2018 09:38 PM

யானைகளின் வருகை 117: வலசை கூத்தில் பாழான பால்வளம்!

இருபது ஆண்டுகளுக்கு முன்பு மசினக்குடி மற்றும் இதைச் சுற்றியுள்ள வாழைத்தோட்டம், ஆனைகட்டி, மாவனல்லா, மாயாறு, சுற்ரம், சிங்காரா உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களிடம் கால்நடை வளர்ப்பு என்பது பிரதான தொழிலாக இருந்தது. அவற்றில் நாட்டு மாடுகளே 99 சதவீதம் இருந்தன.

மலைப்பிரதேசம் என்பதாலும், மேய்ச்சல் நிலங்கள் மிகுதியாக இருந்ததாலும், அதற்கேற்ற கால்நடை என்றால் அது நாட்டுமாடுதான் என்பதால்தான் இத்தொழில் இங்கே சிறந்தது. பொதுவாக நாட்டு மாடுகளை காலையில் மலைக்காடுகளுக்குள் அவிழ்த்துவிட்டால் அவை தானாக மேய்ந்து விட்டு மாலையில் வீடு திரும்பிவிடும். அதற்கு பெரிய செலவு இருக்காது.

இந்த தன்மைக்கும், இங்குள்ள சூழலுக்கும் நாட்டு மாடுகளே ஒத்துவந்தன. அவை ஒவ்வொன்றும் வருடத்திற்கு ஒருமுறை கன்று ஈன்றும். கன்று ஈன்றால் 6 முதல் 7 மாதங்கள் வரை தினசரி 2 முதல் 5 லிட்டர் வரை தரமான பாலைத் தரும். அப்படி ஒரு மாடு, ஒரு வருடத்திற்கு சுமார் 1200 லிட்டர் வரை அளித்துவந்தன.

இப்படி பல்லாயிரக்கணக்கான மாடுகள் கொடுத்த பால் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்ததோடு, மசினக்குடியில் ஏற்படுத்தப்பட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் தினசரி 5 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. நாட்டுமாடுகள் கறக்கும் பால் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியத்திற்கும் பயன்படும் என்பதால் மசினக்குடியிலிருந்து கேரளா பகுதிகளுக்கும் சென்றது.

கடந்த 1980 ஆம் ஆண்டுக்கு முன்பு நடந்த அபரிமித பால் உற்பத்தி வளர்ச்சியால் காமதேனு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், வாழைத்தோட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், மாயாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், ஆனைகட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், பொக்காபுரம், மாவனல்லா பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் என நிறைய கூட்டுறவு சங்கங்களும் உருவாகின.

மாடு வளர்ப்போர், அந்தந்த பகுதிகளிலேயே பால் கறந்து கொடுக்க ஆரம்பித்தனர். இங்கு கொள்முதல் செய்யப்படும் பாலை பதப்படுத்த, வாழைத்தோட்டம் கிராமத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் பால்குளிரூட்டும் நிலையமும் தொடங்கப்பட்டு செயல்பட்டது. இந்த கூட்டுறவு சங்கங்கள் நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் கீழ் இயங்கியது. இதில் மசினக்குடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் தரமான, அதிகமான பால் உற்பத்திக்கு 3 முறை மாநில அளவில் முதல் இடம் பிடித்து விருதுகளும் வாங்கியது.

இந்த சூழ்நிலையில்தான் முதுமலை வனச்சரணாலய வனத்துறையினர் மூலம் கால்நடை வளர்ப்பு பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியது. 'முதுமலை வனப்பகுதியில் உள்ள மான், யானை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளையே மையமிட்டு நகர்வதால், மக்கள் வளர்க்கும் கால்நடைகள் மூலம் வனவிலங்குகளுக்கு நோய்கள் பரவி இறப்பு நேரிடுகிறது. மாடு, ஆடுகளை புலி, சிறுத்தை போன்ற மிருகங்கள் அடித்து கொல்வதால் கால்நடை வளர்ப்போர் வன விலங்குகளுக்கு விஷம் வைத்து கொல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்!' என்ற புகார்களை முன்வைத்து மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகள் வளர்க்க கட்டுப்பாடுகளை விதித்தது வனத்துறை.

அதற்கு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரிடம் எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்களும் நடந்தன. ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மாடுகள் வளர்க்க வனத்துறை கட்டண முறை டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தியது. இதே சமயம் நாட்டு மாடுகளால் பெரியதொரு வருமானம் கிடையாது. பால் உற்பத்தியும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றும், அதற்கு பதிலாக ஜெர்சி மாடுகளை விவசாயிகளை வளர்க்கலாம்; அதன் மூலம் ஒரு நாளைக்கு 15 முதல் 30லிட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்யலாம் என்றும் கவர்ச்சிகர திட்டங்களை வகுத்து செயல்படுத்தினர் அரசு அதிகாரிகள்.

அதன்படி 5 நாட்டு மாடுகள் கொடுத்தால் ஒரு ஜெர்சி இன கலப்பின மாடு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஈர்க்கப்பட்டு தம்மிடமிருந்த நாட்டு மாடுகளை அளித்து விட்டு, கலப்பின மாடுகளை பெற்றுக் கொண்டனர். நாட்டு மாடுகள் அடிமாடுகளாக அனுப்பப்பட்ட நிலையில் புதிதாக வாங்கப்பட்ட ஜெர்சி மாடுகள் பால் கொடுத்ததா என்றால் இல்லை.

அவை இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தாங்கவில்லை. இந்த மாடுகள் நாட்டு மாடுகளை போல் மேய்ச்சலுக்கு செல்லாது. கட்டுத்தரையிலேயே வைத்து தீவனம் போட வேண்டும். அதற்கான முதலீடுகளும் அதிகம். இந்த மாறுபட்ட சூழல்களால் நிறைய மாடுகள் இறந்தன. இதற்காக போடப்பட்ட கொட்டகைகள், பண்ணைகள் மூலம் இந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இடையில் நிலவிய கடும் வறட்சியும் இதற்கு தூபமிட்டு மாடுகள் வளர்ப்பு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

இதற்கிடையே 1997-ல் சரணாலய விஸ்தரிப்பு அறிவிப்பு, அதை ஒட்டிய கட்டுப்பாடுகள், விதிமுறைகள், தொடர்ந்து 2007-ம் ஆண்டு சரணாலயம், புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது போன்ற நடைமுறைகள் மேலும் கால்நடை வளர்ப்பை நாசப்படுத்தியது. வனத்துறையின் கெடுபிடிகளும் அதிகரித்தது. மசினக்குடியை புலிகள் காப்பகத்தின் பப்பர் ஜோன் பகுதியாக அறிவிக்க, இதனால் எல்லோரும் தொழிலை விடவேண்டியதிருக்கும், ஊரை விட்டே வெளியேற வேண்டி வரும் என்றெல்லாம் போராட்டங்கள் வெடித்தன. இந்த விஷயம் நீருபூத்த நெருப்பாக இருக்க, ஒரு கட்டத்தில் நாட்டு மாடுகள் பெருமளவு அழிந்து பால் உற்பத்தியே நின்று போனது.

மசினக்குடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு பால் வரத்து மிகவும் குறைந்தது. சுற்று வட்டாரத்தில் இருந்த காமதேனு, ஆனைகட்டி, வாழைத்தோட்டம், மாவனல்லா-பொக்காபுரம் ஆகிய கூட்டுறவு சங்கங்கள் யாவும் மூடப்பட்டன. இருந்த ஒரே ஒரு பால்குளிரூட்டும் நிலையமும் நிறுத்தப்பட்டது. இயந்திரங்கள் வெளியேற்றப்பட்டன.

இந்த சூழ்நிலையில் கடந்த 2002 முதல் 2004 வரை சுத்தமாகவே மசினக்குடி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கும் பால் கொள்முதல் நிறுத்தப்பட்டு பெயரளவிலேயே இயங்கி வந்திருக்கிறது. இதைப்பற்றி பிரகிருதி இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவரும், கால்நடை மருத்துவருமான டாக்டர் சுகுமாரன் விரிவாக விளக்கினார்.

''1985 முதல் 2002-ம் ஆண்டு வரை நீலகிரி மாவட்ட பகுதிகளில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்தேன். பணி ஓய்வுக்குப் பிறகு இயற்கையைப் பாதுகாப்பது, வனவிலங்குகள் பாதுகாப்பு, கால்நடைகளின் தேவையும், அவற்றின் பாதுகாப்பும் குறித்து ஒரு மையம் ஆரம்பித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகிறேன். நான் அரசு கால்நடை மருத்துவராக பணிபுரிந்த காலத்தில் மிக அதிகமாக மசினக்குடி, கூடலூர் பகுதிகளிலேயே பணியாற்றியுள்ளேன். 1985-86 ஆண்டுகளில் நான் மசினக்குடியில் இருந்த காலத்தில் இந்த பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம் தினசரி 4900 முதல் 5 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

2002-ம் ஆண்டில் கூட 3400 லிட்டர் வரை பால் உற்பத்தி வந்தது. பால் உற்பத்தி குறையக் காரணம் புதிதாக அறிமுகப்படுத்திய ஜெர்சி இன மாடுகள் மலைப் பாங்கான மேட்டுப்பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் மேய தோதில்லாதது. அதேசமயம் ஏராளமான நாட்டு மாடுகளை ஸ்கிராப் (அடிமாட்டுக்கு) கொடுத்ததும்தான் என்பதை அப்போதே எடுத்துச் சொன்னேன். அதை யாரும் கேட்கவில்லை. குறிப்பாக வனத்துறை நாட்டு மாடுகளை, மேய்ச்சல் நிலங்களில் விடக்கூடாது என்பதில் குறியாக இருந்து, அதை அழிப்பதிலும், ஜெர்சி இன மாடுகளை தள்ளிவிடுவதிலுமே அக்கறை காட்டியது. அதன் பலனை பிறகு நன்றாகவே கால்நடை வளர்ப்போர் அனுபவித்தார்கள். 1980களில் மசினக்குடி பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் இருந்தன.

அது 2006-07ல் 200 மாடுகள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. கலப்பின மாடு போல் அல்லாமல் தன் வாழ்நாளில் ஒரு நாட்டு மாடு வருடத்திற்கு ஒன்றுவீதம் 20 முதல் 25 கன்றுகள் வரை ஈனக் கூடியது. மலைக் காடுகளில் மட்டும் மேய்ச்சல் செய்வதால் அதன் பால் மருத்துவக் குணத்துடன் சத்து மிக்கதாக உள்ளது. இந்த மாடுகளை புலி உள்ளிட்ட வனவிலங்குகள் கொன்று விடுகிறது. அதனால் வனவிலங்குகளை மக்கள் கொன்று விடுகிறார்கள் என்ற கருத்தை வனத்துறையினர், சில சுற்றுச்சூழல் அமைப்பினர் பரவ விடுகிறார்கள். பொய்ப்பிரச்சாரமும் செய்கிறார்கள். உண்மையில் அது இதற்கு பொருந்தாது. அடிக்கடி கன்று ஈன்று பட்டி பெருகும் நிலையில் எந்த கால்நடை வளர்ப்போரும் வனவிலங்குகளால் ஒன்றிரண்டு கால்நடைகள் கொல்லப்படுவதை பெரிதுபடுத்துவதில்லை.

ஆனால் வனத்துறையினர்தான் இதையே பெரிது டுத்துகின்றனர். ஜெர்சி மாடு ஒன்று கொடுத்து 5 நாட்டு மாடுகளை கால்நடை வளர்ப்போர் வாங்கி சென்ற வறட்சி காலத்தில் ஓர் வனத்துறை அதிகாரி கால்நடைகளை அவரவர் விவசாய நிலங்களில் மேய்க்கவே கட்டண முறை டோக்கன் சிஸ்டம் வைத்தார். அதுவே பின்னர் வந்த அதிகாரி மாடுகள் மேய நடத்திய கெடுபிடிகள் மாடுகள் எல்லாம் அழிந்து 200 ஆக குறைந்தது. அதன் பின்பு அந்த அதிகாரி மேய்ச்சல் மாடுகளுக்கு டோக்கன் கொடுப்பதையும் நிறுத்தி விட்டார். அதற்குப் பிறகு தன் தவறை இந்த மண்ணுக்கு நாட்டு மாடுகள்தான் ஏற்றது என்று சில ஆண்டுகளாக நாட்டு மாடுகளை தேடித்தேடி வாங்கி வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் மக்கள். அது இப்போது 2 ஆயிரம் மாடுகள் என்ற அளவுக்கு வளர்ந்து விட்டது. ஆனால்..!'' என்று சொல்லி நிறுத்தினார் டாக்டர் சுகுமாரன்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x