Published : 10 Jan 2018 09:43 AM
Last Updated : 10 Jan 2018 09:43 AM

இல்லையென்று சொல்ல மனமில்லாத கதிரேசன்

தி

ருச்சி திருவானைக்காவல் பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் கதிரேசனின் தொண்டுள்ளம் குறித்து அப்பகுதி மக்களுக்கு ஏழை மாணவர்கள், ஆதரவற்றோர், சேவை அமைப்புகள், கோயில் நிர்வாகத்தினர் நன்கு தெரியும். சத்தமின்றி பலருக்கும் உதவிகளைச் செய்யும் கதிரேசனைப் பற்றி திருச்சி வாசகி சரோஜா, ‘தி இந்து’ உங்கள் குரல் அழைப்பில் தெரிவித்திருந்தார். திருவானைக்காவல் சன்னதி வீதியிலுள்ள குறிப்பிட்ட அந்த ஜவுளிக் கடையில் பெரியவர் கதிரேசனை சந்தித்தோம். வேலை சுறுசுறுப்புக்கு மத்தியில் நம்மிடம் பேசத்தொடங்கினார்.

‘பிறருக்கு உதவி செய்யவே கடவுள் நம்மை படைத்துள்ளார். அந்த நோக்கத்தை நான் முடிந்த அளவுக்கு நிறைவேற்றி வருகிறேன். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தில் 1944-ல் பிறந்தேன். எனது 11 வயதில் அப்பா முத்துராமலிங்கம் இறந்தார். குடும்பத்தில் வறுமை கோர தாண்டவமாடியது.

உடுத்த நல்ல உடையின்றி என் அப்பாவின் சட்டையை சிறிதாக்கி தைத்து நான் அணிந்துக்கொண்டு செல்வதைக் கண்ட பலர் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தனர். இதைக்கேட்டு அழுத என்னை ஆசுவாசப்படுத்தி தேற்றியவர் எனது அம்மா வள்ளியம்மை. ‘தம்பி இந்த அவமானங்களை மனதில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள். நீ பெரிவயனாகி நன்றாக சம்பாதித்து உன்னை கேலி செய்தவர்களுக்கு உதவி செய்யும் நிலைக்கு உயர வேண்டும். இதை உன் வாழ்க்கையில் குறிக்கோளாக வைத்துக்கொள்’ என்று எனக்கு அறிவுரை கூறி தேற்றுவார்.

எனது தாயாரின் அந்த வார்த்தைகளை நான் எப்போதும் மறக்கவில்லை. வாட்டியெடுக்கும் வறுமை காரணமாக 12 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு உள்ளூரில் வேலைக்கு போனேன். பின்னர் 1962-ல் திருச்சியில் உறவினர்கள் நடத்திய அடகு கடை, ஜவுளிக் கடைகளில் வரவு, செலவுகணக்கு பார்க்கும் பணியைச் செய்தேன். பிறகு 1971-ல் திருவானைக்காவலில் தனியாக ஜவுளிக்கடை தொடங்கினேன். இந்த கடையின் வருமானம்தான் பலருக்கும் உதவி செய்ய பயன்படுகிறது’ என விவரித்தார்.

ஏழ்மை நிலையில் உள்ளோருக்கு கல்விக் கட்டணம், சீருடை, நோட்டு புத்தகம், கல்விக் கூடங்களுக்கு நிதிஉதவி, ஆதரவற்றோருக்கு ஈமச்சடங்கு செய்ய உதவி, கோயில் திருப்பணிகளுக்கு உதவி, அநாதை ஆசிரமங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி, சேவை அமைப்புகள் தொய்வின்றி பணியைத் தொடர நிதிஉதவி, அன்னதானம் வழங்குதல் இப்படி பல்வேறு அறப்பணிகளை கடந்த 34 வருடங்களாக செய்து வருகிறார்.

நாம் அவரைச் சந்திக்க சென்றிருந்த அன்றுகூட சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

‘சுயமாக தொழில் செய்யத் தொடங்கியதும், அம்மா சொன்ன வார்த்தைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க நினைத்தேன். முதலில் சில சிறிய அளவில் உதவிகள் செய்தேன். பின்னர், உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவே செலவு செய்வதற்கான வரையறையை விலக்கிக்கொண்டேன்’ என்கிறார் கதிரேசன் மகிழ்ச்சியுடன்.

கடை ஊழியர்கள் ‘அப்பா’ என்றே இவரை அழைக்கின்றனர். இவரிடம் ஆசி பெற்று ஆடை வாங்கிச் செல்வதற்காகவே இப்பகுதியில் ஒரு பெரும் வாடிக்கையாளர் கூட்டம் இருக்கிறது. வாடிக்கையாளர் வருகைக்கு இணையாக உதவி கேட்டு வரும் நபர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. இவர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மஞ்சள் பையிலும் சமூக கருத்துகள் அச்சிடப்பட்டுள்ளன. உதவி கேட்டுவரும் அனைவரிடமும் முகம் சுழிக்காமல் பொறுமையாக பதில் கூறி ‘இல்லை’ என திருப்பி அனுப்பாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்து அனுப்பி வைக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் மேலே வரவேண்டும் என்ற சுயவிருப்பம் கொண்டவர்.

மகன் இறந்துவிட இருக்கும் 3 மகள்களுக்கும் கதிரசேன் வலியுறுத்தி கூறுவது இதைத்தான். “நான் செய்துவரும் தர்ம காரியங்களை எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடாதீர்கள். தர்மம் வழங்குவது செலவல்ல. அது ஒரு முதலீடு. கடவுள் நம்மை நல்ல நிலையில் வைத்திருப்பது பிறருக்கு உதவி செய்யவதற்காகவே தவிர, நாம் மட்டும் சுகபோக வாழவை அனுபவிக்க அல்ல” என்பதே அது.

கதிரேசனின் தர்ம சிந்தனை தலைமுறைகளை கடந்தும் தொடர வேண்டும் என்பதே நமது விருப்பம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x