Last Updated : 05 Jan, 2018 10:04 AM

 

Published : 05 Jan 2018 10:04 AM
Last Updated : 05 Jan 2018 10:04 AM

உயர்கல்வியை தொடர முடியாதோருக்கு தரமான தொழிற்கல்வி; வங்கி பணியை ராஜினாமா செய்து சமுதாய கல்லூரி தொடக்கம்: 10 ஆண்டுகளாக தொடரும் கல்விச் சேவை

பொருளாதார பின்னணி இல்லை; உயர் கல்வியை தொடர முடியவில்லை என்று ஏங்கி நிற்பவர்களுக்காகவே இயங்கி வருகிறது புதுச்சேரி அருகேயுள்ள சுவாமி விவேகானந்தர் ஊரக சமுதாயக் கல்லூரி.

ரிசர்வ் வங்கி பணியை ராஜினாமா செய்துவிட்டு இக்கல்லூரியை தொடங்கி 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் சுப்பிரமணியன்.

புதுச்சேரி அருகே தமிழக பகுதியான கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள இக்கல்லூரியில் எளிய குடும்பத்தினர் மட்டுமில்லாமல், பள்ளிக் கல்வியைத்தொடர முடியாத பலரின் குழந்தைகளும் தொழிற்கல்வியை ஆர்வமுடன் கற்று வருகின்றனர். இந்த சமுதாயக் கல்லூரி பற்றி அதன் நிறுவனர் சுப்பிரமணியன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மும்பையில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றி வந்தேன். மூன்று மகன்கள் இருந்தனர். பணியைத் தாண்டி சமூகத்துக்கு ஏதாவது செய்ய விரும்பினேன். மும்பையில் இருந்த வீட்டை விற்றேன்.

தொடர்ந்து, சென்னை லயோலா கல்லூரி சேவியர் அல்போன்ஸ் வழிகாட்டுதல்படி சமுதாயக் கல்லூரி தொடங்க முடிவு எடுத்தேன். வீட்டை விற்று கிடைத்த பணத்தை புதுச்சேரி அருகே இடத்தை வாங்கி இக்கல்லூரியை தொடங்கினேன்.

கீற்றுக்கொட்டகையில் கடந்த 2008-ம் ஆண்டில் 70 மாணவர்களுடன் வகுப்புகளைத் தொடங்கினோம். தற்போது ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெறுகின்றனர்.

சத்குரு ஸ்ரீ ஞானானந்தா சேவா அறக்கட்டளை மூலம் இயங்கும் இந்த சமுதாயக் கல்லூரியில் ஆட்டோமோட்டிவ் சர்வீஸ் டெக்னீசியன், அக்கவுண்ட்ஸ் எக்ஸிகியூட்டிவ், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், சுகாதார செவிலியர் உதவியாளர், மெடிக்கல் லேப் டெக்னிசியன், பிளம்மிங் டெக்னாலஜி, பிரிட்ஜ் மற்றும் ஏசி பழுதுபார்த்தல், ஹவுஸ் மற்றும் இன்டஸ்ட்ரீயல் எலக்ட்ரீசியன், இன்டஸ்ட்ரீயல் டெக்னிசியன், டெய்லரிங், எம்ப்ராய்டரி மற்றும் ஆரி ஓர்க், செல்போன் சர்வீிசிங், ஹவுஸ் கீப்பிங், சிசிடிவி சர்வீசிங் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

ஏழைகள் மட்டுமில்லாமல் ஆதரவற்றோரின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள் என பலர் இங்கு தொழிற்கல்வி பயில்கின்றனர். பொறியியல் படிக்கும் பலர் மாலையில் நேரடி பயிற்சி பெற வருகின்றனர்.

9 ஆண்டுகளில் 2 ஆயிரம் பேர்

காலையில் யோகா, தியான பயிற்சியுடன் வகுப்புகளை தொடங்குகிறோம். 9 மாதங்கள் இங்கு பயிற்சி பெற்றவுடன் 3 மாதங்கள் நிறுவனங்களில் தொழில் சார்ந்த பயிற்சி பெறுகின்றனர். கடந்த 9 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி முடித்து பல நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். 50-க்கும் மேற்பட்டோர் சுயதொழில் தொடங்கி பலருக்கும் பணி தந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் சிங்கப்பூர், குவைத் உட்பட பல வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.

மனநிலை மாற்றம் முக்கியம் என்பதால் அது சார்ந்த பயிற்சி தருகிறோம். இங்கு படித்தோர் பணிக்கு சென்ற பிறகு இங்கு வந்து நாங்கள் நல்ல நிலையில் இருப்பதை தெரிவிப்பதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி. பயிலும் அனைவருக்கும் ஆண்டுதோறும் பணி கிடைத்துவிடுகிறது. இங்கு படிப்போருக்கு உதவும், அறிவு பங்குதாரர்களாக பல தனியார் நிறுவனங்கள் உள்ளன. அத்துடன் பயிற்சி பெறவும் பணி தரவும் தொழிற்சாலை மற்றும் வேலைவாய்ப்பு பங்குதாரர்களாக தனியார் நிறுவனங்கள் உள்ளனர். அத்துடன் அறங்காவலர்கள் உதவியும் நிறுவனம் உயர்வுக்கு காரணம் என்றார்.

சுப்பிரமணியத்தின் மனைவியும் கல்லூரி முதல்வருமான அனுராதா கூறும்போது, ‘எங்கள் முதல் மகன் படிப்பை முடித்திருந்த நிலையில், என் கணவர் ரிசர்வ் வங்கி பணியை விட்டு சமூக பணியை தொடங்கினார். அவர் எது செய்தாலும் அப்பணி சரியாகவே இருக்கும் என்பதால் நான் அவருக்கு துணை நின்றேன். கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் கோயில் யாத்திரை, மகன் வீடுகளுக்கு சென்று தங்கியதில்லை. இங்குள்ள ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளே எங்கள் குழந்தைகளாக மாறிவிட்டார்கள். பல கஷ்டங்கள் இருந்தாலும், அதைத் தாண்டி வாழ்வில் உயர விரும்பும் இவர்களுக்கு கற்று தருவதே இறைவன் எங்களுக்கு இட்ட பணி’ என்றார்.

கல்லூரி அறங்காவலர்களில் ஒருவரான ஹரிஹர சுப்பிரமணியன் கூறும்போது, ‘முக்கிய தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்கள் ஆய்வகங்கள் அமைக்க உதவுகின்றனர். படிக்கும் அனைவருக்கும் மதிய உணவு இலவசமாக தருகிறோம். கணினி பயிற்சியும், ஆங்கிலத்தில் பேசவும் பயிற்சி தருகிறோம். பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் இணைந்து கல்லூரி செயல்பட்டு வருகிறது. பயிற்சி குறைந்த கட்டணத்தில் தரப்படுகிறது. இக்கட்டணம் ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ. 9 ஆயிரம் வரை இருக்கும். தகவல் அறிய இணையத்திலும் (www. svrcc.in) பார்க்கலாம். பயிற்சி பெற விரும்புவோர் 0413 2655193 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.

கல்லூரியிலிருந்து புறப்பட்டபோது பிரபல இருசக்கர வாகன நிறுவனத்தில் இருந்து ஆய்வகம் அமைக்க அனுப்பிய சாதனங்கள் வந்திறங்கின. ‘கடந்த வாரம்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். தற்போது வந்துவிட்டது. அடுத்து இப்பணிகள் தொடங்கும்’ என்று ஆர்வத்துடன் கூறினர் சுப்பிரமணியனும், அவரது மனைவி அனுராதாவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x