Last Updated : 06 Dec, 2017 02:52 PM

 

Published : 06 Dec 2017 02:52 PM
Last Updated : 06 Dec 2017 02:52 PM

காசநோய்: தவறான கற்பிதங்களைக் கட்டுடைப்போம்!

பெரியம்மை, மலேரியா, பிளேக், போலியோ, எய்ட்ஸ், பறவைக் காய்ச்சல், டெங்கு என நோய்கள் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், நூற்றாண்டுகள் கடந்தும் உலகத்தையே அச்சுறுத்தக்கூடிய ஆட்கொல்லி நோயாக, உருக்குலைக்கும் நோயாக இருப்பது காசநோய்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கயநோய், இளைப்புநோய், சயரோகம், எலும்புருக்கி நோய், உருக்குலைக்கும் நோய், சரயோகம் என்று வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வெறு பெயர்களில் அழைக்கப்படும் காசநோய் ஒரு காலத்தில் காத்து கருப்பால் பரவும் நோய் என்றும், ஆவியால் பரவும் நோய் என்றும் மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் 51 மாவட்டங்களில் ஒன்று சிவபுரி. இதில் உள்ள ஜன்கோட் கிராமத்தில் சகாரியா பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இந்தக் கிராமத்தில் காசநோயால் பாதிக்கப்படாதவர் எவரும் இல்லை. ஆனால், அவர்களிடம் பரவுவது காசநோய்தான் என்று அவர்களுக்குத் தெரிவதுமில்லை.

ஜன்கோட் கிராமத்தில் வசிக்கும் போண்டி எனும் பழங்குடியினப் பெண்ணின் 3 வயது மகள் பிங்கி 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காசநோய்க்கு பலியானார். ஆனால், தன் மகளை சூனியக்காரி கொன்றுவிட்டதாகக் கருதுகிறார் போண்டி.

போண்டியின் கணவர் சுரேஷுக்கும், அவரது ஆறு வயது மகன் மணீஷுக்கும் காசநோய் இருக்கிறது. இவர்களுக்கும் தன் மகளுக்கு நேர்ந்த கதி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பக்கத்து கிராமத்தில் உள்ள மந்திரவாதியை சந்தித்து நடந்ததைச் சொன்னார் போண்டி.

அந்த மந்திரவாதி காளிக்கு சேவலைப் பலியிட்டு பூஜை செய்தால் உங்கள் வீட்டில் எந்த துர்சம்பவமும் நிகழாது என்று கூறியிருக்கிறார்.

இத்தனைக்கும் போண்டியின் கணவரின் தங்கை ரூமாலியின் கணவர் ரமேஷ் 2016-ம் ஆண்டு மே மாதம் காசநோயால் உயிரிழந்தார். இவர்கள் குடும்பத்தில் போண்டியும், அவரது மாமியார் பாகோவும் மட்டும்தான் காசநோயால் பாதிக்கப்படாதவர்கள். அதனாலேயே சூனியக்காரியின் சூழ்ச்சிதான் தன் குடும்ப உறுப்பினர்களை காவு வாங்குகிறது என்று போண்டி நினைத்தார்.

தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் கொடிகட்டிப் பறக்கும் இந்தக் காலத்திலும் மூட நம்பிக்கை அதன் கவர்ச்சியை இழக்கவில்லை என்பதைத்தான் மேற்கண்ட உதாரணம் நிரூபிக்கிறது.

காசநோய் குறித்த இதுபோன்ற தவறான கற்பிதங்கள்,மூடநம்பிக்கைகள் இந்தியாவின் பல்வேறு பட்ட மாநிலங்களில் ஏன் தமிழகத்திலும் கூட இருந்துவருகின்றன. காசநோய் குறித்து அறியாதவர்கள் காத்து கருப்புதான் தன் குடும்ப நபர்களை காவு வாங்குகிறது எனவும், ஆவியின் மிரட்டலால்தான் அடுத்தடுத்த உயிரிழப்புகள் ஒரே குடும்பத்தில் தொடர்கின்றன என்றும் இன்னும் சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் காசநோய் பரம்பரை நோய் அல்ல, மாசடைந்த காற்றின் மூலம் எளிதில் பரவும் தொற்றுநோய் என்பதை மக்கள் இன்னும் நம்பத் தொடங்கவில்லை.

இந்த சூழலில் காசநோய் குறித்த வரலாறு அவசியமாகிறது.

* காசநோயின் வயது சுமார் 15,000 வருடங்கள் இருக்கலாம் என்கிற தகவலே அதிர்ச்சி அளிக்கிறது.

* கி.மு. 2400-3000 வருட எகிப்து, பெரு 'மம்மீஸ்' ஆய்வுகளில் அவர்கள் முதுகெலும்பில் இக்கிருமி தாக்குதல் இருந்ததாகவும், அது இப்போது வரை புத்துயிர் பெற்றுள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

* கி.மு.460-ல் காசநோய் எடை குறைவோடு கூடிய நோய் என்ற குறிப்பு கிடைத்துள்ளது. காசநோய் கிருமிகள் உலக காலநிலை மாற்றங்களினால் அழிவுறாது தப்பி உயிர்வாழும் தன்மையைப் பெற்றுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

* காசநோய் கிரேக்க மொழியில் பதிசிஸ் (Pathisis) என அழைக்கப்பட்டுள்ளது.

* வங்களாதேசம், இந்தியா, பூட்டான், வடகொரியா, இந்தேனேசியா, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, ஆகிய நாடுகளிலும் காசநோய் உள்ளது.

* நெப்போலியன், எலினார் ரூஸ்வெல்ட், முகமது அலி ஜின்னா, நெல்சன் மண்டேலா, கலீல் ஜிப்ரான், அலெக்சாண்டர் போக்டநோவ், புதுமைப்பித்தன் என எந்தப் பிரபலத்தையும் காசநோய் விட்டுவைக்கவில்லை.

* போரில் வெல்வோமோ, தோற்போமோ என்று தெரியாமல் மனதில் தோன்றுவதையெல்லாம் செய்வோம் என்று ஹிடல்ரின் நாஜிப் படையினர் செய்த டெஸ்ட்டில் ஒன்று காசநோய் டெஸ்ட்.

* ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 22 லட்சம் பேருக்குக் காசநோய் வருகிறது. ஆனால், உலக அளவில் 90 லட்சம் பேருக்கு இந்நோய் வருகிறது. உலகில் நான்கு பேருக்குக் காசநோய் வந்தால், அதில் ஒருவர் இந்தியர் என்கிறது உலகச் சுகாதார அமைப்பின் காசநோய் பற்றிய புள்ளிவிவரம்.

தொற்று நோய்களின் அபாயச்சங்கு இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்போது மிக மோசமாக அலறிக்கொண்டிருக்கிறது என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் பதிவுசெய்கின்றன.

''உலக காச நோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர். இங்கு வருடத்துக்கு 22 லட்சம் பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இறக்கிறார்கள். ஒரு காசநோயாளி ஆண்டுதோறும் 10 முதல் 15 பேருக்கு இந்த நோயைப் பரப்புகிறார். தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோய் குழந்தை முதல் முதியோர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீரிழிவு மற்றும் எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுக்கு இது வருகிற வாய்ப்பு மிக அதிகம்'' என்று எச்சரிக்கிறார் மருத்துவர் கு.கணேசன்.

காசநோய் எவ்வாறு தோன்றியது? எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு காசநோய் உருவானது? என்பது குறித்து பொதுமருத்துவர் கு.கணேசனிடம் பேசினோம்.

''காசநோய் மிகப் பழமையான நோய். எகிப்து பிரமிடுகளில் இது குறித்து காணப்படுகிறது. பைபிளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு 3300 ஆண்டுகளுக்கு முன்பும் சீனாவுக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பும் வந்திருக்கிறது. ரோம் மற்றும் கிரேக்க நாடுகளிலும் இந்த நோய் பரவியதை வரலாறு கூறுகிறது.

முதன் முதலில் 1851-ல், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் காசநோயால் 4-ல் ஒருவர் இறந்துகொண்டிருந்தனர். அப்போது அதற்கு சிகிச்சை எதுவும் இல்லை.

1854-ல் இந்த நோயாளிகளை சானிட்டோரியம் என்று அழைக்கப்படும் தனிசிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன. இதன் நோக்கம் நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுவதைத் தடுக்கமுடியும். நல்ல ஓய்வு, நல்ல காற்றோட்டம், சத்துள்ள உணவு போன்றவற்றை நோயாளிக்கு வழங்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற்று ஒரு சிலர் நோயிலிருந்து மீள வாய்ப்பு கிடைத்தது.

1882 மார்ச் 24-ல் ராபர்ட் காக் எனும் விஞ்ஞானி இந்த நோய்க்குக் காரணம் 'மைக்கோபாக்டீரியம் டுயூபர்குளோசிஸ்' ( Mycobacterium tuberculosis ) எனும் பாக்டீரியா கிருமி என்று கண்டுபிடித்தார். இந்த நாளை உலக காசநோய் தினமாக கொண்டாடுகின்றனர்.

1920ல் பிசிஜி (BCG) எனும் தடுப்பூசி இதற்குக் கண்டுபிடிக்கப்பட்டது. இதை 1953-ல்தான் போடத்தொடங்கினர். இதன் மூலம் காசநோய் பரவுவது குறைந்தது.

1944-ல் ஸ்டெரெப்டோமைசின் (Streptomycin) எனும் ஊசி மருந்து இந்த நோய்க்குக் கண்டுபிடிக்கப்பட்டது. 1952-ல் ஐசோநியசிட் (Isoniazid) எனும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 1960-ல் பிஏஎஸ் (PAS) எனும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மூன்று மருந்துகளையும் கூட்டாக ஒரு நோயாளிக்கு வழங்கினால் நோய் விரைவில் குணமாவது தெரிந்தது. அதிலிருந்து ஒரு நோய்க்குக் கூட்டு மருந்து சிகிச்சை தரப்படுவது பிரபலமானது. 1970-ல் ரிஃபாம்பிசின் (Rifampicin) மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. காசநோய்க்கு இதுதான் தற்போது முதல்நிலை மருந்தாக உள்ளது.

1993-ல் இந்த நோய் உலகம் முழுவதிலும் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

ஆப்பிரிக்காவில்தான் இந்த நோயின் தாக்கம் மிக அதிகம். ஆண்டுதோறும் 10 லட்சம் குழந்தைகள் இதனால் புதிதாக பாதிக்கப்படுகிறார்கள்'' என்றார் மருத்துவர் கணேசன்.

காசநோய் பாதிப்பு
  • * உலக அளவில் காசநோய் பாதிப்புக்குள்ளானோரில் 24 % இந்தியர்கள்.
  • * உலக அளவில் எச்.ஐ.வி, மலேரியாவைக் காட்டிலும் காச நோயால் உயிரிழப்பவர்கள் அதிகம்.
  • * இந்தியாவில் 10 லட்சம் பேர் காசநோய் பரிசோதனைக்கு வராமலேயே இருக்கின்றனர்
  • * உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் காசநோய் சிகிச்சைக்கு வராமலேயே இருக்கிறார்கள்
  • * காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளாத ஒருவர் ஆண்டுக்கு 10 முதல் 15 நபர்களுக்குக் காசநோயை பரப்புகின்றனர்.

காசநோயை எப்படி விரட்டி அடிக்கலாம் என்பது குறித்து மருத்துவர் எழிலன் நாகநாதனிடம் பேசினோம்.

''தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்காக மம்மிக்களை தோண்டி எடுக்கும்போது அதில் இருக்கும் கிருமிகள் மூலமாக காசநோய் பரவி இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது ஏழை-பணக்காரன், ஆண், பெண், குழந்தைகள் என்ற அனைத்து வயதினரையும் தாக்கக்கூடிய ஒரு நோய்.

காசநோய் உடலின் எந்த ஒரு பாகத்தையும் தாக்கலாம். காசநோய் முக்கியமாக நுரையீரல், மூளை மற்றும் தண்டுவடத்தைத் தாக்குகிறது. பெரும்பாலானவர்களிடம் காசநோய் கிருமி உடலில் இருந்தாலும் அது நோயாக மாறுவதில்லை. எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு காசநோய் தொற்றக்கூடிய வாய்ப்பு மிக அதிகமாகும்.

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடத்தில் சளியை துப்பக்கூடாது, அப்படி துப்பினால் அருகில் இருப்பவர்களுக்கோ, அந்த இடத்தைப் பெருக்குபவர்களுக்கோ, காச நோயாளிகளின் துணிகளைத் துவைப்பவர்களுக்கோ காசநோய் பரவும்.

காசநோய் உள்ளவர் துப்பினால் அந்த சளி மூலம் குறைந்தது 4 பேருக்கும் அதிகபட்சம் 10 பேருக்கும் கிருமி மூலம் காசநோய் தொற்றிக்கொள்ளும்.

ஒருவர் துப்பும்போது அதில் காசநோயை உண்டாக்கக் கூடிய 10,000 அணுக்கள், பாக்டீரியாக்கள் உருவாகும்.

இதற்காகவே காசநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் தொடர்பைத் துண்டித்து தனியாக சிகிச்சை பெற அந்தக் காலங்களில் சானிட்டோரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த முறை இப்போதும் தொடர்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் கிருமியை தொற்றும் நிலையில் இருந்தால் காசநோய் பரவும். உதாரணத்துக்கு எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்களுக்கு எளிதில் காசநோய் பரவும்.

காசநோயை பரவாமல் தடுக்க பொது இடங்களில் துப்பும் பழக்கத்தை முதலில் கைவிட வேண்டும், பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும், வீடு,பள்ளி, பொது இடங்களிலும் குப்பை, மாசு இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்.

பொது சுகாதாரம், ஆரோக்கியமான சத்தான உணவு முறை, மாசில்லாத சுத்தமான காற்று ஆகியவற்றின் மூலம் காசநோயை விரட்டி அடிக்கலாம்.

அரசு நிர்வாகம், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, பொது சுகாதாரம், மக்கள் விழிப்புணர்வு என்ற ஐந்தும் இணைந்து செயல்பட்டால்தான் காசநோயை விரட்ட முடியும். ஒழிக்க முடியும்'' என்கிறார் மருத்துவர் எழிலன் நாகநாதன்.

காசநோய் குறித்த தவறான கற்பிதங்களை கட்டுடைத்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வளம் சேர்ப்பதே நம் முதல் பணியாக இருக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x