Published : 21 Oct 2017 04:58 PM
Last Updated : 21 Oct 2017 04:58 PM

யானைகளின் வருகை 60: கதிகலங்க வைக்கும் பவானி சாகர் புதைசேறு!

 

அது 2014-ம் ஆண்டு.

வாட்டும் கோடை. அதில் ஒரு நாள். பவானி சாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிக்கு அப்பால் சேறும் சகதியுமாக காட்சியளித்த ஒரு குழியில் இரண்டு யானைகள் சிக்கி உயிருக்குப் போராடின. அதை வனத்துறையினர் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வந்து, கால்நடை மருத்துவர்கள் உதவியோடு மீட்டு கரையில் சேர்த்தனர். சிகிச்சையும் அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு யானைகளும் இறந்தன.

மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்து பார்த்ததில் 12 வயது பெண் யானைக்கு குடற்புழு நோய் தாக்கியிருப்பதும், இன்னொரு பதினைந்து வயதுடைய பெண் யானைக்கு வயிற்றில் 22 மாத பெண் குட்டி யானை வயிற்றில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. வயிற்றில் அடிபட்டு குட்டி யானை இறந்ததால், பெண் யானை வலி தாங்க முடியாமல் சேற்றில் சிக்கி புரண்டிருக்கலாம். அதைப் பார்த்து அடுத்த யானை மீட்கும் முயற்சியில் இறங்கி அதுவும் புதை சேற்றில் மாட்டியிருக்கலாம் என வனத்துறையினர் முடிவுக்கு வந்தனர். யானைகளை அங்கேயே பெரும்பள்ளம் தோண்டி புதைத்தனர்.

இது 2017-ம் ஆண்டு.

இதுவும் கோடை காலம். பவானி சாகர் வனச்சரகம், விளாமுண்டி வனப்பகுதி. நீர்த்தேக்கத்தில் நீர் அருந்துவதற்காக வந்த யானைக்கூட்டம் நடுமேடு என்ற பகுதிக்கு வந்தது. ஆங்காங்கே புதை சேறும் சகதியுமாக இருந்த ஒரு குழிக்குள் 15 வயதுள்ள பெண் யானை சிக்கிக் கொண்டது. அதைப் பார்த்து மற்ற யானைகள் பிளிறிக் கொண்டு அதை மீட்க முயற்சித்தன. ஒருநாள் பொழுது போராட்டம் முடியாமல் திரும்பிச் சென்றன. அடுத்த நாள் இப்படி சேற்றில் சிக்கிக் கிடந்த யானையை பக்கத்தில் உள்ள சித்தன்குட்டை மற்றும் ஜே.ஜே நகர் பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். பவானி சாகர், சிறுமுகை வனச்சரகத்தை சேர்ந்த வனத்துறையினர் அங்கு வந்து கயிறு மற்றும் பெல்ட் போட்டு பொதுமக்கள் உதவியுடன் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில் சேற்றிலிருந்து மீண்ட யானை சோர்வின் காரணமாக எழ முடியாமல் படுத்து விட்டது. கோடையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் யானையின் உடல் சூடேற, அதை தடுக்க லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து அதன் மீது ஊற்றப்பட்டது. சிறிது நேரம் அதில் குளிர்ந்த யானை அப்படியே மெல்ல எழுந்து காட்டுக்குள் சென்றது.

இப்படி ஒன்றல்ல; இரண்டல்ல வருடத்திற்கு கோடை வந்து விட்டால் போதும் இந்த காலகட்டங்களில் மட்டும் 7 முதல் 10 யானைகள் வரை பவானி சாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் நீர் மற்றும் புதைகுழிகளில் அகப்பட்டுக் கொள்கின்றன. இவற்றில் சில இறந்தும் போகின்றன. சில வனத்துறையினருக்கு தகவல் தெரிந்து மீட்கப்பட்டு காட்டுக்குள் விரட்டப்படுகின்றன. அப்படி காட்டுக்குள் செல்லும் யானை சோர்வு தட்டி காட்டுக்குள்ளே இறக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே நடைபெறுகின்றன. அதில் கடைசி ஐந்தாண்டுகளில் இச்சம்பவங்கள் வேகமெடுத்துள்ளன. ஒரு பக்கம் சிறுமுகையில் விஸ்கோஸ் தோன்றி மறைந்த கதை. இன்னொரு பக்கம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழிற்சாலைகள், வலசை மறிப்பு கட்டிடங்கள் யானைகளை வழக்கத்தை மாற்றி இம்சித்து கொல்கிறது என்றால் அதற்கு இணையாக இப்படி சேற்றில் சிக்கி இறக்கும் யானைகளின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆறு, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான இந்நீர்தேக்கத்திற்கே பவானி சாகர் நீர்தேக்கம் என்று பெயரிடப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு உருவான இத்திட்டம் 1956ல் நிறைவடைந்தது. இவ்வணை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.

இது ஒரு மண் அணை. இதன் உயரம் 105 அடி, இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடி. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுர மைல். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்கள். அணை அமைந்துள்ள இடத்தை ஒட்டியுள்ள ஊரின் பெயரே அணையின் பெயராலயே பவானிசாகர் என அழைக்கப்படுகிறது, இவ்வணையிலிருந்து செல்லும் நீர் கீழ் பவானி திட்ட கால்வாய் ஈரோடு மாவட்டத்தை வளப்படுத்துகிறது.

ஹொய்சாளர் ஆட்சிக் காலத்தில் படைத்தளபதியான பெருமாள் தண்டநாயக்கனைப் பாராட்டி வழங்கப்பட்ட குறுநிலத்தை அவன் ஆண்டு வந்த போது கி.பி 1254-ம் ஆண்டு ஆற்றுச்சமவெளியில் இந்தக் கோட்டையைக் கட்டி ஆண்டான். தண்டநாயக்கன் கோட்டை நாளடைவில் டணாயக்கன் கோட்டை ஆனது. பல நூறு ஆண்டுகள் ஆன பின்பும் கூட இன்னும் உறுதியுடன் கம்பீரமாய் நிற்கும் இந்தக் கோட்டையைப் பார்க்கும்போது அன்றையக் கட்டிடக்கலையின் நுட்பம் விளங்கும். அப்படிப்பட்ட கோட்டை கொத்தளங்கள் இந்த அணையில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த அணைக்கு நீர் வரத்து குன்றி, கொள்ளளவு கீழே செல்லும் போது மட்டம் அந்த கோட்டையின் கட்டிடங்கள் அணைக்கு வெளியே தெரியும். அப்படி அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து ஓரிரு முறை மட்டுமே கோட்டையின் மேல்பகுதி அணையின் நீர்பரப்புக்கு மேலே தெரிந்துள்ளது.

இந்த அணையின் நீர் மட்டம் 120 அடி. முந்தைய காலத்தில் எப்போதும் தண்ணீர் 90 அடிக்கு கீழே வந்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்குள்ளாகத்தான் அணை நீர் மட்டம் 90 அடிக்கு கீழும் சென்று 45 அடிக்கும் கூட சில சமயம் வந்துவிடுகிறது. இதனால் சிறுமுகை, காந்தவயல், புதுக்காடு வரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரை தேங்கி நிற்கும் அணை நீர் சுத்தமாக வற்றி, குழியும் சேறும் ஆக காட்சியளிக்கும் நிலை ஏற்படுகிறது. அதனால் டணாயக்கன் கோட்டை கட்டிடங்களுக்கு அணைக்குள்ளேயே நடந்து செல்லும் வசதி கூட கடந்த நான்கைந்து ஆண்டுகளாக கோடைக்கு கோடை ஏற்பட்டு வருகிறது.

பவானி சாகரை அடுத்து பல திக்கிலும் நீளும் வனப்பகுதிகள், அதையடுத்து சதுப்பு நிலக்காடுகள் மிகுந்துள்ள தெங்குமரஹாடா, சத்தியமங்கலம் காடுகள் என வரும் பகுதிகளில் உயிர் துஞ்சும் வனவிலங்குகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதே இந்த பவானி சாகரும், அதை ஒட்டியோடும் மாயாறு, காந்தையாறு போன்றவைதான். அதை முன்னிட்டு அவை நீர் தேடி இங்கே வரும்போது வறட்சி காலங்களில் இங்கு தேங்கியிருக்கும் புதைசேறுகளில் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உயிருக்குப் போராடி மீண்டிருக்கின்றன. உயிரை விட்டும் உள்ளன. மீண்டு சென்ற யானைகள் காட்டுக்குள் சென்றும் சுகவீனம் அடைந்து உயிர் விடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இப்படி சேற்றுக்குள் சிக்குவது பெரும்பாலம் 40 வயதுக்கு மேலான வயது முதிர்ந்த யானைகள். அல்லது 15 வயதுக்குட்பட்ட குட்டி யானைகள். சென்ற கோடையில் கடும் வறட்சி இங்கு வாட்டி எடுத்தது. அதனால் அடுத்தடுத்த நாட்களிலும் யானைகள் இங்கு 30 மைல் சுற்றளவில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமல் கிடக்கும் புதைசேற்றில் சிக்கியுள்ளன. அந்த சமயம் இங்கே செய்தி சேகரிக்க சென்றிருந்த போது ஏற்பட்ட அனுபவம் மிகவும் விநோதமானது.

''பவானியின் நீராதாரமான சிறுவாணி வரும் வழியிலேயே பல்லாயிரக்கணக்கான மோட்டார்கள் வைத்து கேரள பகுதிகளிலேயே நீர் உறிஞ்சப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் பவானி வரும் வழித்தடங்களிலும் ஆயிரக்கணக்கான மின்மோட்டார்கள் நீர் உறிஞ்சி தண்ணீரை எடுத்து பாசனத்தை மேம்படுத்துகின்றன. போதாக்குறைக்கு சிறுவாணிக்கு இடையிலும், பவானிக்கு இடையிலும் கேரள அரசு தடுப்பணை கட்டிக் கொண்டேயிருக்கிறது. இதுவெல்லாம் கடந்த 15 ஆண்டுகளில் தொடர்ந்து கேரள மாநிலம் அட்டப்பாடியில் நடந்து வரும் வேகமான மாற்றம்.

அந்த மாற்றத்தின் விளைவே இந்த பவானியில் வரலாறு காணாத வறட்சி கோடை காலங்களில் ஏற்பட்டு வருகிறது. இன்னமும் பவானி, சிறுவாணியில் பெரிய அணைகள் கட்டும் திட்டத்தை காட்டி (சிற்றூர், முக்காலி) கேரள அரசு பயமுறுத்தி வருகிறது. அந்த அணைகள் மட்டும் அமைந்து விட்டால் பவானியில் தண்ணீரையே மறந்து விடலாம். மேல்பவானி நீரை மட்டுமே நாம் வைத்துக் கொண்டு பாடாய் பட வேண்டியிருக்கும். அது மனிதர்களான நமக்கே போதாத நிலையில் பெரிய ஜீவன்களான யானைகள் என்ன செய்யும்?'' என்பதே அப்போது சிறுமுகை தொடங்கி பவானி சாகர் வரையில் உள்ள சூழலியாளர்களின் கேள்வியாக இருந்தது. அதே சமயம் இந்த சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின் கருத்து வேறொரு கோணத்தில் இப்படி வந்தது.

இந்த சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்டது கூத்தாமண்டி பீட். பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதிகளில் ஒன்றாக விளங்கும் இங்கு தினசரி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடிக்கிறது. கூடவே குளியலும் போடுகின்றது. அப்படி கூட்டமாக வரும் யானைகள்தான் அடிக்கடி புதை சேற்றில் சிக்கி விடுகிறது. அதற்கு காரணம் இந்த இடத்தில் ஒரு வாய்க்கால்போல செல்லும் ஓர் ஆறு. அது மேல்பகுதி வறண்டு கீழ்பகுதி சேறு மயமாக உள்ளது. இதை எப்போதும் போல் கோடை காலங்களிலும் யானைகள் கடக்கின்றன. அதில் சில யானைகள் சிக்கினாலும், முக்கி புரண்டு தப்பித்து சென்று விடுகின்றன.

வயதானவை, வயதில் குறைந்தவை முட்டிங்கால் மடித்து மேலேற முடியாமல் சிக்கிக் கொள்கின்றன. இப்படி மட்டும் அணைக்குள்ளேயே வாய்க்கால்கள் சேறாக மாறிக்கிடக்கும் குழிகள் கோடைகாலங்களில் ஆயிரக்கணக்கில் உருவாகி விடுகின்றன. இந்த ஆயிரக்கணக்கான புதைசேறுகளில் மனிதர்கள் சிக்கினாலே மீட்க முடியாது. யானைகள் சிக்கினால் என்ன ஆகும்?.

இங்கிருந்து 1. 5 கிமீ தூரத்தில் வனத்துறை வாட்ச் டவர் ஒண்ணு இருக்கு. அதில் 2 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் தங்கி வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்கலாம். இது கொஞ்சம் மக்கள் பார்வைக்கு படும் பகுதி. அதனால் இங்கே யானைகள் சிக்கினால் கண்டுபிடிக்கப்படுகிறது. இதுவே உள்ளே மரங்கள் அடர்ந்த ஆளே செல்லமுடியாத பகுதிக்குள் ஒரு புதைசேற்றுக்குள் யானை மாட்டினால் யாருமே பார்க்க முடியாது. யானை செத்து அழுகி சேறோடு, சேறாக கரைந்து மக்கி போனால் கூட வெளியே தெரிய வராது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்யாவிட்டால் ரயிலில் அடிபட்டு இறப்பதுபோல், மின்சார வேலியில் சிக்க உயிரைக் கொடுப்பதுபோல், பவானிசாகர் புதைசேற்றில் சிக்கி இறக்கும் யானைகளின் கணக்கும் எண்ணப்படவேண்டியிருக்கும். இந்த விஷயம் வனத்துறையினருக்கு தெரிந்தே இருக்கிறது. இருந்தாலும் இதை எப்படி சரிசெய்வது என்று புரியாமலே அவர்களும் தவித்து வருகிறார்கள். எனவே இதற்கும் மாற்று ஏற்பாடு செய்யாவிட்டால் யானைகள் வாழ்வுக்கு மேலும் சிக்கல்தான்!

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x