Published : 21 Oct 2017 10:15 AM
Last Updated : 21 Oct 2017 10:15 AM

வெள்ளையர்கள் ‘திமிர் வரி’ விதித்த கோவை கண்ணம்பாளையத்தின் கதை!

வெ

ள்ளையர்கள் வரி போட்டு மக்களை வதைத்தார்கள் என்று சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கு அடங்கவில்லை என்பதற்காக ஒரு கிராமத்துக்கே ‘திமிர் வரி’ போட்ட கதை தெரியுமா?

கோவை மாவட்டத்திலுள்ள கண்ணம்பாளையம் கிராமம்தான் 1942-ல், வெள்ளையர்களின் ‘திமிர் வரி’க்கு இலக்கான கிராமம். வரி போட்டு வசூலிக்குமளவுக்கு இவர்கள் அப்படி என்னா திமிர் காட்டினார்கள்? அந்தக் கதையைப் பார்ப்போமா..

கண்ணம்பாளையமும் ஆகஸ்ட் புரட்சியும்

ஆகஸ்ட் புரட்சியின் போது கோவையில் நடந்த சூலூர் ரயில் எரிப்பு மற்றும் சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்பு சம்பவங்கள் சுதந்திரப் போராட்டத்தில் சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டவை. இந்தப் போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தியதாக கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த கே.வி.ராமசாமியைக் குறிவைத்தது வெள்ளையர் அரசாங்கம். அதேசமயம், சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்புக்காக அப்பாவிகளையும் அள்ளிக் கொண்டுபோய் அடித்து வதைத்தது போலீஸ்!

இதில், கே.வி.ராமசாமியின் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த பலர் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப் பட்டனர். இந்த நிலையில், அடுத்த அதிரடியாக சூலூர் விமான தளத்தை தீ வைத்துக் கொளுத்த நாள் குறிக்கிறது கே.வி.ராமசாமி தலைமையிலான போர்ப் படை. அப்போது, கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி கே.எஸ்.பழனியப்பன் தான் ‘வெண்டயங்கள்’ (தீப்பந்தம்) செய்து கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர். திட்டமிட்டபடி 1942 ஆகஸ்ட் 26 அன்று இரவு சூலூர் விமான தளத்தை தீக்கிரையாக்கியது இந்தப் படை.

கிராமத்துக்கே திமிர் வரி

இதையடுத்து, போராட்டக்காரர்களை சல்லடை போட்டுத் தேடியது போலீஸ். அவர்களின் உறவுகள் எல்லாம் கடும் சித்திரவதைகளுக்கு ஆளானார்கள். இதில், அதிகம் பாதிக்கப்பட்டது கண்ணம்பாளையம் தான். இதனிடையே, விமான தளம் தாக்கப்பட்டதற்கான இழப்பீட்டுத் தொகையை போராட்டக்காரர்களின் ஊர்களைச் சேர்ந்த பொதுமக்களே ஏற்க வேண்டும் என உத்தரவு போட்டது பிரிட்டிஷ் அரசு.

இதில்தான், குற்றவாளிகளைக் காட்டிக் கொடுக்காத காரணத்துக்காக கண்ணம்பாளையம் கிராமத்துக்கு ‘திமிர் வரி’ என்று புதிதாக ஒரு வரியை விதித்தனர் பிரிட்டிஷ் அதிகாரிகள். அந்த வரியை 48 மணி நேரத்துக்குள் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.

கடைசிவரை சிக்கவில்லை

இதை எல்லாம் இப்போது கேட்டாலும் கதை கதையாய் சொல்கிறார்கள் கண்ணம்பாளையத்து மக்கள். ஆகஸ்ட் புரட்சியின் போது கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த 33 பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு மூன்று மாதத்திலிருந்து பத்து ஆண்டுகள் வரையிலும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய கே.வி.ராமசாமி உள்ளிட்டவர்கள் தலைமறைவாகி விட்டனர். கடைசிவரை சிக்கவே இல்லை.

இதையெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொண்ட மறைந்த தியாகி கே.வி.ராமசாமியின் மகன் கே.வி.ஆர்.நந்தகு மார், “எங்க தாத்தா வெங்கட்ராய கவுண்டரும் சுதந்திர போராட்ட தியாகிதான். ‘எனது மூன்று பிள்ளைகளில் பெரியவன் (கே.வி.ராமசாமி) நாட்டுக்கு, நடுப்பிள்ளை விவசாயத்துக்கு, கடைசிப்பிள்ளை ஊருக்கு’ என அறிவித்தவர் எனது தாத்தா. அப்பா உள்பட இந்த கிராமத்திலிருந்து சிறைசென்ற 33 தியாகிகளுமே இப்போது உயிரோடு இல்லை. அவர்களில் 6 பேரது மனைவிகள் மட்டுமே உயிருடன் உள்ளனர். இந்தியாவிலேயே எங்கள் ஊருக்கு மட்டும் தான் ‘திமிர் வரி’ போடப்பட்டதாக அப்பா சொல்வார். எங்கப்பா கைதாகாமல் தலைமறைவாக இருந்ததால் அவர் சுதந்திரப் போராட்ட தியாகி என்பதற்கான ஆதாரங்களை சிரமப்பட்டுத்தான் சேகரிக்க வேண்டியிருந்தது” என்று சொன்னார்.

தியாகிகளுக்கு மரியாதை

கண்ணம்பாளையம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் தளபதி முருகேசன், “ஒருங்கிணைந்த கோவை ஜில்லாவில் ஆயிரக் கணக்கானோர் ஆகஸ்ட் புரட்சியின் போது சிறை சென்றனர். அதில், ஒரு சிறிய கிராமத்திலிருந்து 33 பேர் கைதானது எங்கள் கண்ணம்பாளையமாகத்தான் இருக்கும்” என்கிறார்.

கண்ணம்பாளையத்தில் சுதந்திரப் போராளிகள் ரகசியக் கூட்டங்கள் போட்ட கண்ணம்மை அம்மன் கோயில் இன்னமும் பழமையின் சாட்சியாய் அப்படியே இருக்கிறது. இங்குள்ள பொதுக்கூட்ட மேடைக்கு ‘கண்ணம்பாளையம் சுதந்திர போராட்ட தியாகிகள் கலையரங்கம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இங்கு, 33 தியாகிகளின் நினைவாக கல்வெட்டும் வைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி அலு வலகத்திலும் தியாகிகளின் படங்களை வைத்து கவுரவித்திருக்கிறார்கள்.

கண்ணம்பாளையத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிலரது உறவுகளையும் சந்தித்தோம். தியாகி கருப்பண்ண கவுண்டரின் மனைவி ராமாத்தாளுக்கு இப்போது வயது எண்பதாகிறது. அவர் நம்மிடம், “17 வயசுல எனக்கு கல்யாணம் ஆச்சு. சூலூர் ஏரோட்ராமுக்கு தீவச்சுட்டாங்க. அந்த ஊரையே போலீஸ் புடிச்சு உதைக்குதுன்னு எங்க ஊரே பேசுச்சு. அப்ப நான் சின்னப் புள்ள. அதுக்கப்புறம், அந்த தீ வச்ச போராட்டத்துல கலந்துக்கிட்டவரையே கல்யாணம் செய்வேன்னு நினைச்சுப் பார்க்கல. அப்பவெல்லாம் சுதந்திர போராட்டமா.. ஜெயிலுக்கு போயிருக்கானான்னு எல்லாம் பார்க்க மாட்டாங்க. சொந்தமா விவசாய நிலம் இருக்குதா.. கந்தாயம் (வரி) கட்டறாங்களான்னு பார்த்துத்தான் பொண்ணு கொடுப்பாங்க. அப்படித்தான் எனக்கும் கல்யாணம் நடந்துச்சு” என்றார்.

இன்னமும் வறுமைக் கோட்டில்..

தியாகி மாரப்பனின் மனைவி முத்தம்மா, “சுதந்திரமெல்லாம் கெடச்சு 10 வருஷம் கழிச்சுத்தான் எங்க கல்யாணம் நடந்துச்சு. 7 வருஷம் தண்டனை வாங்கி 4 வருஷம் உள்ளே இருந்தேன்னு கல்யாணத்துக்குப் அப்புறம்தான் அவரு சொன்னாரு” என்றார்.

வெண்டயம் செய்து தந்த சலவைத் தொழிலாளி தியாகி பழனியப்பனின் மகன் முருகேசனிடம் பேசியபோது, “அந்தக் காலத்துல, சலவைக்கு சேலைகள் வர்றதே அபூர்வம். அதுல, ரெண்டு சேலைகளை எடுத்துத்தான் இருபது, இருபத்தஞ்சு வெண்டயம் செஞ்சு சீமண்ணெய் டின்னோட போராட்டத்துக்கு போயிருக்கார் எங்கப்பா. அவர் ஏழு வருசம் தண்டனை வாங்கி நாலு வருசம் ஜெயில்ல இருந்த கதைய நிறையச் சொல்லியிருக்கார்” என்றார்.

இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால், விடுதலைக்காக போராடிய பழனியப்பன் உள்ளிட்ட தியாகிகளின் குடும்பங்கள் இன்னமும் வறுமைக் கோட்டில் தான் இருக்கின்றன. ஓரளவுக்கு வசதியானவர்களும் வானம் பார்த்த பூமியோடுதான் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x