Published : 20 Oct 2017 03:00 PM
Last Updated : 20 Oct 2017 03:00 PM

யானைகளின் வருகை 59: எமனாகும் அரசின் இலவச மின்சாரம்!

நள்ளிரவு. நல்ல தூக்கம். முன்தினம் சுழன்றடித்த காற்றுக்கு விரவி நிற்கும் ஆயிரக்கணக்கான வாழைகள் தாங்குமா? விழுமா? என்ற கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த ராமையாவுக்கு, காற்று சுத்தமாக நின்று சோவென மழை பெய்த பிறகுதான் ஓரளவு திருப்தியாக இருந்தது. இன்றைக்கு வாழைக்கு பிரச்சனையில்லை என்ற நிம்மதியுடன்தான் கண்ணசந்தார்.

எத்தனை நேரம் அப்படி தூங்கினாரோ தெரியவில்லை. திடீரென்று வாழைத் தோட்டத்தில் பயங்கர அரவம். குலைகள் தள்ளிக்கிடந்த வாழையை யாரோ மூர்க்கமாய் தட்டித்தட்டி சாய்க்கிற ஓசை. தடாபுடாவென்று எழுந்திருச்சு விட்டார் ராமையா. சாலை விளக்கை எரிய வைக்க சுவிட்ச் போட்டார். விளக்கு எரியவில்லை. மழையினால் மின்தடை. வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது.

அதையும் மீறி அங்கே இருட்டோடு இருட்டாய் கரேலென பெரிய உருவங்கள் பல. வாழை மரங்களை முட்டுவதும், தட்டுவதுமாக தெரிய அதிலொன்றின் கொம்பு விளக்கொளியில் பளிச்சிட்டது. சாட்சாத் காட்டு யானைகளேதான். 'இவை எத்தனை வாழை மரங்களை சாய்த்ததோ தெரியவில்லை. இன்னும் எத்தனையை சாய்க்கப் போகிறதோ?'

மழையினால் தடைபட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தி போடப்பட்டிருந்த தடுப்பு மின்வேலியைத் தாண்டி வந்திருக்கிறது. அனிச்சையாய் எழுந்தார். வெளியே தாழ்வாரத்தில் நின்று ஓங்கி குரல் கொடுத்தார். ஆளைக் கண்டதும் பிளிறிய யானைகள் அங்கும் இங்கும் பாய்ந்தது. ஓட்டம் பிடித்தது. தூரத்தில் ஓடி மறைந்த அவற்றுள் ஒன்று திடீரென்று மரண ஓலம் எடுத்து பிளிறியது.

அநேகமாக பக்கத்து தோட்டத்து விவசாயிகளும் விழித்திருக்கக் கூடும்.

இவருக்கு அவசரம்.

வெளியே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அலறல் வந்த திசையை நோக்கி நகர்ந்தார். அந்த நேரத்தில் அங்கே போடப்பட்டிருந்த மின்விளக்கு பளீரென்று எரிந்தது. இவர் கால் வைத்திருந்த தோப்பில் தேங்கி நிற்கும் நீர். அதில் ஆயிரம் வோல்ட் அதிர்வு. உடலெல்லாம் குலுக்கிப் போட்டு மூளையை வெட்டுகிற மின்னல். தான் கால் வைத்திருந்த இடத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் பாய்ந்திருந்த உயர் அழுத்த மின்சாரத்தை உணர முடியாமலே உயிரைப் பறிகொடுத்திருந்தார் ராமையா.

அவர் அலறல், அதற்கும் மீறிய யானையின் அபயக்குரல் கேட்டு ஓடி வந்த அடுத்தடுத்து உள்ள தோட்டத்து விவசாயிகள் ஓடிவந்தனர்.

பொழுதும் மெல்ல புலர ஆரம்பித்தது. அந்த தோட்டத்தில் பார்த்தால் ஒன்றுக்கு இரண்டு மரணங்கள். ராமையா மட்டுமல்ல; உயர் அழுத்த மின்சாரம் தாக்கி பதினைந்து வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானையும் இறந்து கிடந்தது.

காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தோட்டத்திற்குள் வரவிடாமல் இருக்க ஏற்படுத்தப்பட்ட சோலார் மின்வேலி. அதையும் மீறி விலங்குகள் உள்ளே புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. அதைக்கருத்தில் கொண்டு இரவு நேரங்களில் அந்த மின்வேலியில் தான் உறங்கப் போகும் முன் உயரழுத்த மின்சாரத்தையே இணைப்பு கொடுத்துவிட்டுச் சென்று படுப்பது வழக்கம்.

அதைத்தான் அன்றும் செய்திருந்தார் ராமையா. அதை அனிச்சையாக உணராத அளவுக்கு அசதி. கடும் மழை. திடீர் மின்தடை. திரும்ப வந்த மின்சாரம். இந்த இடைப்பட்ட நேரத்தில் வாழைத்தோப்பில் புகுந்து அழிச்சாட்டியம் செய்த ஒற்றை யானை. அதை விரட்ட பறப்பட்ட வேகம். தான் இணைப்பு கொடுத்த உயரழுத்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து யானைக்கு மட்டுமல்ல, அவருக்கும் எமனாக வந்துவிட்டது.

சிறுமுகைக்கு வடமேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள லிங்காபுரத்தில் 2015 நவம்பர் மாதம் 29-ம் தேதி இரவு நடந்த சம்பவம்தான் இது. இந்த ஊரில் மட்டுமல்ல, இதன் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள காந்தவயல், ஊழியூர், அம்மன்புதூர், சின்ன கள்ளிப்பட்டி, பெத்திகுட்டை, புதுக்காடு, ரங்கம்பாளையம், வச்சினம்பாளையம், மொக்கை மேடு, டேம்மேடு, அம்மன்புதூர், கூத்தாமண்டி பிரிவு, இரும்பறை என வரும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மட்டுமல்ல, குடியிருப்பு மக்கள் பலரும் யானைகள் வராமல் தடுக்க சோலார் மின் வேலியில் உயர் அழுத்த மின்சாரத்தையே பாய்ச்சி விடுகிறார்கள்.

குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படி செய்வதன் மூலம் யானைகளை விட மான்களும், காட்டுப்பன்றிகளும் அதிகமாக சிக்குகின்றன. அதை உடனே கசாப்பும் போட்டு விருந்தும் வைத்து விடுகின்றனர். எப்போதாவது காட்டு யானை அகப்பட்டு உயிரிழப்பு நேர்ந்தால் மட்டும் அது மீடியாவுக்கான செய்திகளாகின்றன. சர்ச்சைக்குள்ளும் சிக்குகின்றன. அப்படித்தான் 2017-ம் ஆண்டு மே மாதம் 17-ம் தேதி இரவு. சிறுமுகை சிட்டேபாளையம் கிராமத்தில் காட்டு யானைகள் புகுந்தன. கோடை வறட்சியில் தாகத்துடன் அலைந்த அந்த யானைகள் எங்கோ தண்ணீர் வாசம் கண்டுதான் அந்தப் பாதையில் பயணித்திருக்கிறது. வழியில் மாணிக்கம் என்பவரது தோட்டத்தில் ஒரு குறுக்கீடு. மின் வேலி. அதைக் கடந்து சில யானைகள் செல்ல ஒரு 12 வயது யானை சிக்கிக் கொண்டது. மின்சாரம் தாக்கி கடும் பிளிறலுடன் உயிரை விட்டது.

இந்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்தனர் கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகள். இறந்து கிடந்த யானையின் துதிக்கையில் மின்சாரம் பாய்ந்துள்ளதையும், அப்பகுதியில் விவசாயத்திற்காக கிணற்று மோட்டாருக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை நேரிடையாக மின்வேலியில் செலுத்தியுள்ளதை கண்டறிந்து உறுதிப்படுத்தினர். இதனையடுத்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தோட்டத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பையும் துண்டித்தனர். தோட்ட உரிமையாளர் மீது வன சட்டப்படி வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். பிறகு வனத்துறை மருத்துவர் யானையின் உடலை உடல் கூறு ஆய்வு நடத்தினார். யானையின் உடலை அங்கிருந்த புதர்காட்டிலேயே குழி தோண்டி புதைத்தனர்.

ஆனால் முன்தினம் இரவு மின்வேலியில் பட்டு காட்டு யானை இறந்தும் ஒரு நாள் முழுக்க தோட்டத்துக்காரர் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு விவசாயிகளுக்கும், வனத்துறையினருக்கும், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைகளுக்குமான செயல்முறை சிக்கல்கள்தான்.

உயர் அழுத்த மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பது மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப் பகுதிகளில் கூடுதல் ஆகி வருகிறது. இதற்கு காரணமான விவசாயிகள் மீது நடவடிக்கை எடுத்தால் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தும். அது மட்டுமல்லாது, யானைகள் எங்கள் பட்டா தோட்டங்களுக்குள் வராமல் பாதுகாப்பது வனத்துறையினர் பணி. அதை செய்யாத வனத்துறையின் மீதே இந்த வழக்கைப் பதிவு செய்ய வேண்டும். அவர்கள்தான் இதற்கு பொறுப்பு. காட்டு விலங்குகளால் சேதப்படும் விளைச்சலுக்கு வனத்துறையினரே இழப்பீடு தரவேண்டும் என்றெல்லாம் புதுமையான கோரிக்கைகள் வைத்துள்ளார்கள்.

அதை வலியுறுத்தி அவர்கள் போராடியும் வருகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதில் வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, உள்ளூர் அரசியல் பிரச்சினை என நிறைய எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று இந்த விஷயத்தில் மென்மையான அணுகுமுறைப் போக்கை கடைப்பிடிக்க சொல்லி வனத்துறையினருக்கு அறிவுறுத்தல் உள்ளது.

''எனவேதான் இதில் இவ்வளவு தயக்கம். முன்பெல்லாம் ஒரு பட்டா நிலத்தில் காட்டு யானையோ பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளோ மின்வேலி, அகழிகளில் சிக்கி உயிரிழந்தால் உடனே கைது நடவடிக்கைதான் எடுக்கப்படும். அவர்கள் ஜாமீனில் வெளியே வரவே பல மாதங்கள் ஆகி விடும். இப்போதெல்லாம் அப்படி செய்யவே முடிவதில்லை!'' என வெளிப்படையாகவே நம்மிடம் அப்போது பேசினார் வனத்துறை அதிகாரி ஒருவர். அதுதான் இப்போது வரை நடந்து வருகிறது.

இந்த அரசியல் வெளிப்பாட்டின் எதிரொலி இதற்கு 6 மாதங்களுக்கு முன்பு தாசம்பாளையம் பகுதியில் விவசாயி தோட்டத்து மின்வேலியில் சிக்கி (30 மற்றும் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானைகள் உடனே இறந்தது. அதே சமயம் மின்கம்பியில் சிக்கி துதிக்கை கிழிந்த நிலையில் சுற்றிய 2 வயது குட்டியானை பிடிபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டும் இறந்தது) இறந்த 3 யானைகளுக்காக ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் முன்ஜாமீன் பெற்று வழக்கு நடத்தி வந்தார். இதேபோல் மேட்டுப்பாளையம் கேளிக்கை பூங்கா அருகில் உள்ள தோட்டத்தில் புகுந்த ஓர் யானை மின்வேலியில் பட்டு உயிரிழந்தது. அதற்கும் பெரியதான நடவடிக்கை இல்லை. அதேபோல் இந்த அத்தியாயத்தில் முகப்பில் சொல்லப்பட்டிருக்கும் லிங்காபுரம் சம்பவத்திலும் வழக்குப் பதிவு செய்ததோடு சரி.

விவசாயிகளின் போராட்டங்களை முன்வைத்து யானைகள் மரணத்திற்கான நடவடிக்கையில் இப்படி சுணக்கம் ஏற்படுத்துவதால் இப்போதெல்லாம் சூரிய மின்வேலியில் உயர் அழுத்த மின்சாரத்தைப் பாய்ச்சும் விவசாயிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப இந்த மின்வேலியில் சிக்க உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டேயிருக்கிறது என்பதுதான் தற்போதைய நிஜம். அது மட்டுமல்ல; விவசாயிகளுக்காக தரப்படும் இலவச மின்சாரமே தற்போது யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளையும் கொல்லப் பயன்படுகிறது என்பதுதான் கொடுமை.

இதுகுறித்து கோவை வனக்கோட்ட அலுவலர் ஒருவர் என்னிடம் இப்படி பகிர்ந்து கொண்டார்:

''நீலகிரி, கூடலூரில் 2014 ஆம் ஆண்டு ஒரு விவசாயத் தோட்டத்தில் ஒரு யானை உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இறந்தது. சோலார் மின்வேலியில் உயர் அழுத்த மின்சாரத்தை பாய்ச்சியதாக அந்த தோட்டத்து விவசாயி கைது செய்யப்பட்டார். இதே தோட்டத்தில் உள்ள சோலார் வேலியில் இந்த ஆண்டும் உயர்அழுத்த மின்சாரம் பாய்ந்து ஒரு யானை இறந்து அதே விவசாயி கைது செய்யப்பட்டார். இதேபோல் லிங்காபுரம் தோட்டத்தில் ஒரே சமயத்தில் உயிரிழந்த ஆண் யானை, விவசாயியின் கதை முடிந்ததும் இலவச மின்சாரத்தில்தான் . இப்படி கடந்த 15 வருடத்தில் கோவை கோட்டத்தில் மட்டும் 25 யானைகள் சோலார் மின்சார வேலிகளில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சியதால் இறந்துள்ளன.

அவற்றில் 20 ஆண் யானைகள். அரசு விவசாயத்திற்காக அளிக்கும் மான்யம்தான் இலவச மின்சாரம். அது வனவிலங்குகளையே அழிக்க பயன்படுத்தப்படுவது என்பது யாராலும் ஜீரணிக்க இயலாது. வன எல்லைகளில் உள்ள விவசாய நிலங்களில் மனித மிருக மோதல் தொடர்ந்து நடைபெறுகிறது. அதில் விவசாயிகள் பாதிக்கப்படும்போது மட்டும் போராட்டங்கள் வெடிக்கிறது. அவர்களால் யானைகள் உள்ளிட்ட வனமிருகங்கள் இறந்தால் கைது நடவடிக்கை எடுக்கும் போதும் எதிர்ப்புகள் கிளம்புகிறது. அதனால் அவர்கள் மீது கடும் நடவடிக்கையை தளர்த்தவும் வேண்டியுள்ளது. அதுவே இந்த தவறை செய்தவர்களுக்கு வசதியாகி விடுகிறது முன்பு தவறு செய்தவர்களே திரும்பவும் இலவச மின்சாரத்தை பயன்படுத்தியே வனஉயிரினங்களை கொல்கிறார்கள்.

இதை தவிர்க்க சில ஆய்வுகளை வனத்துறையினர் குழு ஒன்று நடத்தியிருக்கிறது. அதன் முடிவாக ஒரு விவசாயி தோட்டத்தில் யானையோ இதர வனஉயிரினங்களோ உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இறக்க நேரிட்டால் அவர்களுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்து கட்டண மின்சாரமாக மாற்றி விடலாம். இப்படிச் செய்வதால் வனமிருகங்கள் இறந்தால் நமக்கு இலவச மின்சாரம் கிடைக்காது என்பதை அவர்கள் உணர்வார்கள். இதனால் இந்தத் தவறை யாரும் செய்ய மாட்டார்கள். அப்படியே செய்து அகப்பட்டாலும், அடுத்த முறை கட்டண முறை மின்சாரத்தை இந்த வேலைக்கு பயன்படுத்துவதை தவிர்ப்பார்கள்.

அதேபோல் வன எல்லையோரம் அமைந்துள்ள குறிப்பிட்ட கி.மீ தொலைவில் அமைந்துள்ள விவசாய தோட்டங்களில் எல்லாம் உடனடியாக மின்சார மீட்டர் பொருத்தியே ஆக வேண்டும். விவசாயத்திற்கு இலவச மின்சாரம் அளிக்கப்படுவதால் விவசாய நிலங்களில் மின் மீட்டர்களே தற்போது பொருத்தப்படவில்லை. அப்படியே பொருத்தப் பட்டிருந்தாலும் அவை செயல்படுவதில்லை. சொற்ப மீட்டர்கள் செயல்பட்டாலும், அவற்றை மின்வாரிய ஊழியர்கள் கணக்கெடுக்க வருவதில்லை.

எனவே மின்சார மீட்டர் பொருத்தி மாதந்தோறும் அளவீடுகள் கணக்கெடுக்க வேண்டும். அப்போது மின் பயன்பாட்டைப் பொறுத்து சோலார் மின்வேலிகளில் இலவசமாக அளிக்கப்படும் உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தப் பட்டிருப்பது கண்டுபிடித்து விடலாம். அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கலாம். இதேபோல பல விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கையாக மேலிடத்திற்கு அனுப்பப்பட்டு இரண்டு வருடங்களாகி விட்டது. ஆனால் இதுவரை விடிவுதான் கிடைக்கவில்லை'' என்றார் அவர்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x