Published : 28 Sep 2017 10:32 AM
Last Updated : 28 Sep 2017 10:32 AM

உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே!- 13: உடலை வில்லாக வளைக்கும் தனுராசனம்

பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியைத் தவிர்க்க மகராசனம், சஷங்காசனம் சிறந்தவை என்று பார்த்தோம். அந்த வரிசையில், உஷ்ட்ராசனமும் முக்கியமான தாகும்.

உஷ்ட்ராசனம்

உஷ்ட்ர என்றால் ஒட்டகம். உஷ்ட்ர ஆசனம் செய்வது எப்படி? விரிப்பில் வஜ்ராசனத்தில் அமர்ந்து, கைகளை முன்னால் நீட்டியவாறு முட்டி போட வேண்டும். மெதுவாக மூச்சை இழுத்து வலது கை, வலது உள்ளங்காலையும், இடது கை, இடது உள்ளங்காலையும் பிடிக்க வேண்டும். தலையை பின்புறமாக கீழ்நோக்கி வைத்திருக்க வேண்டும். மார்பு விரிந்த நிலையில் வயிற்றுப் பகுதியும் நன்றாக விரிவடைவதால், அந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இதனால் மாதவிடாய் நாட்களில் வலி இருக்காது. சிறிது நேரம் கழித்து, மெதுவாக கைகளை விலக்கி, பழைய நிலைக்கு வரவேண்டும்.

அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது. இதற்கு மாற்று ஆசனமாக சஷங்காசனம், புஜங்காசனம் செய்யலாம்.

வயிற்றுப் பகுதிக்கான இன்னொரு சிறந்த ஆசனம் தனுராசனம். தனுர் என்றால் வில்.

தனுராசனம் எப்படி செய்வது?

ஒரு விரிப்பின் மேல் குப்புறப் படுக்க வேண்டும். இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்து கால்களைச் சேர்த்து வைக்க வேண்டும். இப்போது உடம்பு ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்.இப்போது முட்டியை அகலப்படுத்தி வலது மற்றும் இடது காலை மடக்க வேண்டும். இரு கைகளையும் பின்னுக்கு கொண்டுவந்து, வலது கையால் வலது கணுக்காலையும், இடது கையால் இடது கணுக்காலையும் பிடிக்க வேண்டும்.

இந்த நிலையில் பொறுமையாக மூச்சை உள்இழுத்துக்கொண்டே, தலையை மெதுவாக தூக்கிக்கொண்டே கால் முட்டிகளையும் மேலே உயர்த்த வேண்டும்.இப்போது நம் உடம்பு நாணேற்றிய வில்போல இருக்கும். இதில் முக்கியமான விஷயம் கைகள் மடங்கக் கூடாது. தொடைப்பகுதியை தரையில் இருந்து எவ்வளவு தூரம் தூக்க முடியுமோ தூக்கலாம். இந்த நிலையில் 10 விநாடிகள் இருக்கலாம்.

இந்த நிலைக்கு அடுத்ததாக முன்னும், பின்னும் சீசா போன்று உடலை அசைக்க, சினைப்பை, கருக்குழாய், கருப்பைக்கு சரியான அளவு ரத்த ஓட்டம் பாய்ந்து, உள்ளே இருக்கும் நீர்க்கட்டிகள், ரத்தக் கட்டிகள் கரைந்து வெளியேறிவிடும். தினமும் 3-5 முறை செய்யலாம்.

கருக்குழாய், சினைப்பை பாதிப்பு மற்றும் கருப்பை சம்பந்தப்பட்ட எந்த விதமான பிரச்சினைகள் இருந்தாலும் இந்த ஆசனம் செய்வதன்மூலம் பலன் பெறலாம். மேலும் அஜீரணம், முதுகுத் தண்டுவலி, நீரிழிவு, குடல் சம்பந்தமான நோய்களும் நீங்குகின்றன.

தாய்மை அடையும்போது ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுமையடைகிறது. பூரிப்பு கொள்கிறது. தன்னுள் ஒரு ஜீவனைப் பாதுகாத்து, வளர்த்து இந்த உலகுக்கு கொண்டுவருவதில் பெண் ணின் பங்கு அளப்பரியது.

சரியான வயதில் திருமணம், சரியான இடைவெளியில் குழந்தைகள் என்ற வாழ்வியல் முறையில் இருந்து இன்று நாம் விலகி வந்துள்ளோம். படிப்பு, வேலை, பதவி என்று முதலில் திருமணத்தை தள்ளிப்போட்ட பெண்கள் இன்று பிள்ளைப்பேற்றையும் தள் ளிப் போடுகிறார்கள். விளைவு, அவர்கள் விரும்பும் நேரத்தில் கருத்தரிக்க முடியாமல், கருத்தரிப்பு மையத்தில் பதிவு செய்துவிட்டு, குழந்தை வரம் வேண்டி காத்திருக்க நேரிடுகிறது. திருமணம் ஆனவுடனேயே குழந்தைப் பெற்றுக்கொள்வது நல்லது.

இன்னொரு பக்கம் கருப்பையில் ஏற் படக்கூடிய நீர்க்கட்டிகள், ரத்தக் கட்டிகள்கூட கருத்தரிப்பை தடை செய்கிறது.மேலும் PCOD என்று சொல்லப்படுகிற பாலிசிஸ்டிக் கருப்பை பிரச்சினைகளைச் சரிசெய்ய சூர்ய நமஸ்காரம், தனுராசனம், சலபாசனம், அர்த்தகடி சக்கராசனம், அர்த்த மச்சேந்திர ஆசனம் போன்றவற்றைச் செய்யலாம். இவை கருக்குழாய், சினைப்பைக்கு தூண்டுதல் கொடுத்து, அங்கு இருக்கக்கூடிய அடைப்பு, நீர்க்கட்டிகளைக் கரைக்கும் ஆற்றல்மிக்கது. சூரிய நமஸ்காரம் செய்வது எப்படி? அதன் பலன்கள் என்ன? அடுத்து பார்க்கலாம்.

- யோகம் வரும்...

எழுத்தாக்கம்:

ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x