Published : 22 Sep 2017 05:07 PM
Last Updated : 22 Sep 2017 05:07 PM

தி இந்து செய்தியை அடுத்து இஎஃப்ஐ அமைப்பின் உதவியால் சீரமைக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் செல்ல பெருமாள் நகர் ஏரி

கச்சா எண்ணெய்ப் படலத்தை அகற்றத் தன்னார்வலர்கள் தேவை என்று 'தி இந்து'வில் வெளியான செய்தியை அடுத்து, 'இஎஃப்ஐ' என்னும் தன்னார்வ அமைப்பை நாடிய தன்னார்வலரின் பரிந்துரையால் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்ல பெருமாள் நகர் ஏரி சீரமைக்கப்பட்டுள்ளது.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி 2 சரக்குக் கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதில் சரக்குக் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி, கடலில் கலந்தது. எண்ணெய்ப் படலம் எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவான்மியூர் வரை பரவியதால், கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்பட்டது.

இதனால் கடலில் பரவிய கச்சா எண்ணெய்க் கசிவை நீக்க, தீவிர நடவடிக்கையில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டனர். ஆட்கள் போதாமையால் கச்சா எண்ணெய்ப் படலம் கடலின் பல பகுதிகளுக்கும் பரவியது. அதை துரித கதியில் அகற்றத் தன்னார்வலர்கள் தேவைப்பட்டனர். இதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய தன்னார்வ அமைப்பான 'இஎஃப்ஐ' அமைப்பினர் நம்மை அணுகினர்.

இதுகுறித்து 'தி இந்து' இணையதளத்தில் பிப்ரவர் 3-ம் தேதி நீலாங்கரையில் எண்ணெய் படலத்தை அகற்ற தன்னார்வலர்கள் தயாரா? என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது.

கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்பு பற்றியும் அதனால் விளைந்த ஏரி சீரமைப்பு பற்றியும் 'இஎஃப்ஐ' நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தியே நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

''நிறைய தன்னார்வலர்கள் 'தி இந்து' கட்டுரையைப் படித்துவிட்டு எங்களை அணுகினர். குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த விக்னேஷ் எங்களைத் தொடர்பு கொண்டு, மூன்று நீர்நிலைகள் சீரமைப்புப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டார். பிறகு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்ல பெருமாள் நகர் ஏரி பாழடைந்து கிடப்பது குறித்து விவரித்தார்.

நேரில் சென்று பார்த்தபோது அதைச் சீரமைத்தே ஆகவேண்டிய கட்டாயம் அந்த ஏரிக்கு இருந்தது தெரியவந்தது.

உடனே காஞ்சிபுரம் துணை ஆட்சியரிடம் அனுமதி பெற்று வேலையில் இறங்கினோம். உபகரணங்களின் உதவியோடு சீரமைப்புப் பணி தொடங்கியது.

புதர் மண்டிய நிலையில், அழியும் முறையில் அந்த நீராதாரம் இருந்தது. தொடர் முயற்சியால் படிப்படியாக ஏரி தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டு, கரைகள் கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏரி பலப்படுத்தப்பட்டு, வாய்க்கால்கள் சரிசெய்யப்பட்டன. இறுதியாக நீர்நிலைகள் உறுதியுடன் அமைக்கப்பட்டன.

விக்னேஷ் தங்கள் ஊரின் அருகாமையில் இருந்த தன்னார்வலர்களை வார இறுதியில் அழைத்து வந்தார். அவர்கள் ஏரியை தூய்மைப்படுத்துவது, அழகுபடுத்துவது, ஓவியங்கள் வரைவது ஆகிய பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

நாற்பத்து மூன்றே நாட்களில் கிட்டத்தட்ட அழிந்த நிலையில் இருந்த நீராதாரம், புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதன்மூலம் அங்குள்ள பொதுமக்கள் அதில் மழைநீரைச் சேமித்துத் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தற்போது வட கிழக்குப் பருவமழையை எதிர்நோக்கிக் கம்பீரமாகக் காத்து நிற்கிறது செல்ல பெருமாள் நகர் ஏரி!

ஒரு கட்டுரையைப் படித்து, எங்கள் அமைப்பைத் தொடர்புகொண்ட ஒருவரின் முன்னெடுப்பால், ஓர் ஏரியே சீரமைக்கப்பட்டிருப்பது சாதாரணமல்ல. இதை 'தி இந்து' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்'' என்கிறார் மகிழ்வுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x