Published : 18 Sep 2017 10:11 AM
Last Updated : 18 Sep 2017 10:11 AM

உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே!- 3: யோகம் செய்யவும் யோகம் வேண்டும்

யோகா என்றவுடன், ‘இதென்ன பிரமாதம்! கையை நீட்டி மடக்கி, மூச்சை இழுத்து, விட்டு செய்வதுதானே’ என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, ‘ஐயோ, யோகாவா, அதை எப்படி செய்யணும்? எழுந்தவுடன் செய்யணுமா, பல் துலக்கி செய்யலாமா? காப்பி கீப்பி குடிக்கலாமா, அல்லது அதற்கு முன்னாடியே செய்யணுமா? செய்யும்போது எங்கேயாவது தசைப்பிடிப்பு வந்துவிட்டால் என்ன செய்வது? செலவு அதிகமாகுமோ?’ என்று சங்கிலித் தொடர்போல ஏகப்பட்ட கேள்விகள், சந்தேகங்களை எழுப்பிக்கொண்டு, யோகா செய்வதற்கே தயங்கி நின்றுவிடுவார்கள் .

யோகா பற்றிய அறிமுகம் இல்லாதவர்களுக்கு இத்தனை கேள்விகள், சந்தேகங்கள் எழுவது இயல்புதான். நமது உடல் மற்றும் ஆரோக்கியம் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் இந்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டு, யோகாவை நாட வேண்டுமே தவிர, தயங்கி இருந்துவிடக்கூடாது

நம் உடல், மனம், மூச்சு இந்த மூன்றையும் ஒருங்கிணைத்து, காற்றில் பறப்பது போன்ற ஒரு இலகுவான தன்மையை நமக்குள் ஏற்படுத்தும் கலைதான் யோகா. பல்லாயிரம் நுட்பங்களைக் கொண்ட இந்த யோகக்கலையை நாம் எந்தப் புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது , யார் செய்யலாம், எந்த நேரத்தில், எவ்வளவு நேரம் செய்யலாம், எந்த வயதினர் செய்யலாம், நம்மால் செய்ய முடியுமா என்ற சந்தேகங்களை எல்லாம் இத்தொடரில் பார்க்கலாம்.

நம் மனம் நினைக்கும் ஒன்றை நம் உடல் சாதித்துக் காட்டவேண்டும். அதற்குதான் யோகா. கண்களை மூடி நம் உடலையும், உள்ளத்தையும் ஒருமுகப்படுத்துவதே யோகம். ஆனால் இந்த எளிய பயிற்சியைக்கூட நம்மில் பலர் செய்ய முனைவதில்லை. இதைத்தான், ‘‘யோகம் செய்வதற்கும் யோகம் வேண்டும்” என்றார் யோக சாஸ்திரத்தை உருவாக்கிய பதஞ்சலி முனிவர்.

யோகாசனத்துக்கு உடலைத் தயார் செய்வது எப்படி?

உடலை இறுக்கமாக வைத்துக்கொள்ளாமல், இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும். உடலை இறுக்கிப் பிடிக்காத, தளர்வான பருத்தி ஆடை அணிவது நலம். மேலும், யோகா செய்யும்போது, நம் உடலை உறுத்துகிற பெல்ட், கைக்கடிகாரம் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக, ஆசனங்கள் செய்யும்போது நமக்கும் தரைக்கும் இடையே ஒரு விரிப்போ, பாயோ இருப்பது அவசியம். யோகப் பயிற்சிகள் செய்யும்போது நம்மில் இருந்து வெளிப்படும் நேர்மறை அலைகளை நமக்குள்ளேயே தக்கவைத்துக் கொள்ளவே இந்த ஏற்பாடு. இதைத் தவிர யோகா செய்ய வேறு எந்த உபகரணங்களும் தேவையில்லை. ஏனெனில் நம் உடலே ஒரு சிறந்த உபகரணம்!

சிலருக்கு காலையில் எழுந்ததும் காபி குடித்தால்தான் அந்த நாள் விடியும். அவர்கள் யோகா செய்வதற்கு முன்பு காபி குடிக்கலாமா, அல்லது பயிற்சி முடித்தபிறகுதான் குடிக்கவேண்டுமா, அல்லது பயிற்சிக்கு நடுவே சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு காபி குடிக்கலாமா? இப்படி ஒரு சந்தேகமும் பலருக்கு எழலாம்.

காலை எழுந்தவுடன் வழக்கம்போல பல் துலக்கி, காலைக் கடன்களை முடிக்க பத்து நிமிடம் நம் வயிற்றுக்கு நேரம் கொடுத்தால், வயிற்றில் இருக்கும் கழிவு கள் தானே வெளியேறி, யோகா செய்வதற்கு உடல் தயாராகிவிடும். காலையில் பல் துலக்கிவிட்டு,வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது, மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவும். ஒவ்வொருவர் உடல், வயிறு ஒவ்வொரு விதமாக இருக்கும். எனவே, எல்லோருக்கும் பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வெந்நீரே காலையில் சிறந்தது. இவ்வாறு கடைபிடித்தும் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்காதவர்களுக்கு ஏற்ற ஆசனங்களை, பின்வரும் அத்தியாயங்களில் தெரிந்து கொள்ளலாம்.

காலைக்கடன் கழித்தவுடன், நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து யோகப்பயிற்சியைத் தொடங்கலாம். நல்ல வெளிச்சமான ஜன்னலோரம், வீட்டின் பால்கனி, அல்லது மொட்டை மாடி என நமக்கு வசதியான இடத்தில், கை, கால்களை சிரமமின்றி உயர்த்தி, நீட்டி, திருப்பி, பயிற்சி செய்ய ஏற்ற இடத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.

தேர்வு செய்த இடத்தில் ஒரு விரிப்பை போட்டு படுத்துக்கொண்டு, ஆரம்பத்தில் சவாசனம் அல்லது சாந்தி ஆசனத்தில் ஆரம்பிக்கலாம். கை, கால்களை நீட்டிய நிலையில் தரைவிரிப்பில் மல்லாந்து படுக்க வேண்டும். ஒன்று அல்லது ஒன்றரை அடி இடைவெளி விட்டு கால்களை அகன்ற நிலையில் வைத்துக் கொள்ளவும். கைகளை உடம்பைவிட்டு சற்று தள்ளி வைத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் வானத்தை நோக்கி, அதாவது கூரையைப் பார்த்தவாறு இருக்கட்டும். தலையை நேராக வைத்துக் கொள்ளவும். தலையில் கிளிப், பேண்ட் போன்றவை இல்லாமல், முடியை தளர்வாக விடவும். உடம்பிலும் எந்தவித உறுத்தலும் இல்லாமல் நேராக படுத்துக்கொண்டு, 9 - 15 முறை பொறுமையாக மூச்சை இழுத்து விட வேண்டும். இதன்மூலம் நம் உடலையும் மனதையும் யோகப் பயிற்சிக்கு தயார் செய்கிறோம்.

- யோகம் வரும்...

எழுத்தாக்கம்:

ப.கோமதி சுரேஷ்

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x