Published : 17 Sep 2017 08:45 AM
Last Updated : 17 Sep 2017 08:45 AM

உடல் வளர்த்தேன்.. உயிர் வளர்த்தேனே!- 2: உடல் உழைப்பு வேறு.. உடற்பயிற்சி வேறு

நாம் தமிழில் அடிக்கடி பயன்படுத்தும் சொற்றொடர் ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பது. உயிர் இயங்க ஆதாரமாக இருக்கும் உடலை ஆரோக்கியமாகப் பேணுவது எப்படி?

இந்தியா உலகுக்குத் தந்த மாபெரும் பொக்கிஷம்தான் யோகக்கலை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது மூதாதையர் மனித வாழ்க்கையை மேம்படுத்தும் வழிமுறைகளை யோகக் கலைகள் மூலம் தெளிவாக விளக்கியுள்ளனர். யோகக்கலையின் அடிப்படை,யோகக்கலையை அறிந்துகொள்வதற்கு முன்பு நம் உடலைப் பக்குவப்படுத்தும் வழிமுறைகள், அன்றாட பழக்க வழக்கங்கள், உணவுமுறை ஆகியவை குறித்து படிப்படியாக இத்தொடரில் பார்க் கலாம்.

‘யோகத்தைக் கற்றுக்கொள்வதே வாழ்க்கையின் மிகப் பெரிய யோகம்’ என்கிறார் பதஞ் சலி முனிவர். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலைப் பொழுது, நம் உடல்நலனுக்கு நன்மை செய்யும் ஓசோன் வாயுக்களால் நிரம்பித் ததும்புகிறது. இயற்கை ஏராளமான செல்வங்களை நமக்கு அளித்திருக்கிறது. நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய இத்தகைய பொக்கிஷங்களை மிகச் சரியான வகையில் நம் உடல், மன வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளும் உபாயங்களைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

மனிதனின் அடிப்படைத் தேவைகள், அடிப்படை ஆதாரங்கள் என்று சொல்லப்படுவது உணவு, உடை, உறைவிடம். இதைப் பயன்படுத்த நமக்கு நல்ல உடல் வேண்டும். இந்த உடல்தான் நம்மை இயக்குகிறது. சுவையான உணவை ரசித்து உண்ணச் செய்கிறது, ஆடைகளை அழகியலோடு அணியச் செய்கிறது. நாகரிகத்தின் தொட்டிலாக குடியிருப்புகள் அமைந்தபோது, இருப்பிடத்தை ரசிப்பதற்கும் இந்த உடலே பிரதான மாகிறது.

இன்றைய காலகட்டத்தில், காற்றைவிட வேகமாக நகர்கிறது வாழ்க்கை. நகர, கிராம வாழ்க்கை பரபரப்பு மிகுந்ததாகவே காணப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை என்பதே இன்று நம் முன் நிற்கும் மிகப்பெரிய சவால். இயந்திரத்தன மாக மாறிவிட்ட நமது வாழ்க்கை முறையில், ஒருநாளின் 24 மணிநேரத்தில், நம் இயக்கத்துக்கு ஆதாரமாக விளங்கும் உடலுக்காக எத்தனை மணி நேரம் செலவிடுகிறோம்? இது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

இக்கேள்வியை பலரிடம் கேட்டபோது, ‘‘காலையில் நடைபயிற்சி செய்கிறேன்..’’, ‘‘நாள் தவறாமல் ஜிம்முக்கு செல்கி றேன்’’ என்றார்கள். வேறு சிலரோ, ‘‘வீட்டு வேலையோடு அலுவலக வேலையையும் நான்தானே செய்கிறேன்’’ என்கின்ற னர்.

அவர்களிடம், ‘‘உங்கள் உடல்நலனுக்காக தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குகிறீர்களா?’’ என்று கேட்டால், இல்லை என்பதே பதில்! நம்மில் எத்தனை பேர், உடலுக்காக பிரத்யேகமாக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குகிறோம்?

உடல் உழைப்பு என்பது வேறு, உடற்பயிற்சி என்பது வேறு! அன்றாடம் நாம் பல வேலைகளைச் செய்கிறோம். அவை அனைத்தும் உடல் உழைப்பால் செய்யக்கூடியவை. உடற்பயிற்சி என்பது, நிபந்தனையில்லாமல் உடலுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கி உடலை அசைத்து, மூச்சுப் பயிற்சியோடு செய்யக்கூடிய பயிற்சிகள்.

தினமும் காலை எழுந்தவுடன், பல் துலக்குவதை நாம் பழகிக்கொண்டதுபோல, முடிந்தவரை விடியல் பொழுதை நம் உடம்பின் விடியலுக்கான பொழுதாக நாம் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். நம்மை ஒருநிலைப்படுத்தும் முயற்சியாக, நமது உடல் ஒரு குறிப்பிட்ட நிலையில் அமர்வது தான் யோகாசனம். பல்வேறு எண்ணங்கள் நமக்குள் அலைமோதினாலும், நம் உடலையும், உள்ளத்தையும் பக்குவப்படுத்த ஒருங்கிணைப்பு அவசியம். தினமும் காலை 4 மணி முதல் 6 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் யோகாசனம் செய்ய சரியான நேரம்.

ஏன் இந்த குறிப்பிட்ட நேரம்? என்று கேட்கலாம். இந்த நேரத்தில்தான், நம் வயிற்றில் எந்த உணவும் தேங்கியிருக்காது. குறிப்பாக, யோகப் பயிற்சிகளுக்கு காலை நேரம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இரவு நன்றாக ஓய்வெடுத்து எழுந்த பிறகு, மனம் மிகுந்த அமைதியாகக் காணப்படும். மேலும், ஓசோன் வாயு மண்டலம் பரவிய நிலையில், பேரமைதியான சூழலில் மேற்கொள்ளப்படும் யோகப் பயிற்சி, நாள் முழுவதும் நாம் புத்துணர்ச்சியோடு செயல் பட நமக்கு உதவிபுரிகிறது.

- யோகம் வரும்..

எழுத்தாக்கம்: ப.கோமதி சுரேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x