Published : 31 Aug 2017 09:53 AM
Last Updated : 31 Aug 2017 09:53 AM

வைஷாலி மறுபிறவி எடுத்த உண்மைக் கதை... 3- அறுவைசிகிச்சை ஆரம்பம்!

ஜூ

ன் 12... திங்கட்கிழமை காலை.

குஜராத்தில் கட்டிட வேலையின்போது விபரீத விபத்துக்குள்ளான 18 வயது வைஷாலிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் உள்ள சவால்கள் மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்து ஆசிரியர் குழுவில் விரிவாகப் பேசினர். சட்ட சிக்கல் ஏதுமில்லாமல் தவிர்க்க உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான என்.ரமேஷை நாடலாம் என்றார் ஆசிரியர்.

அடுத்த நாளே அவரைச் சந்தித்து வைஷாலிக்கு நேர்ந்த விபத்து குறித்தும், பாலாஜி மருத்துவமனை சார்பாக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையில் இருக்கும் மருத்துவ சவால்கள் குறித்தும் விளக்கினேன்.

கவனமாகக் கேட்டுக் கொண்ட வழக்கறிஞர் ரமேஷ், ''வெளிநாடுகளில், முகச்சீரமைப்பு உட்பட அனைத்து சிகிச்சைகளுக்குமே மருத்துவர்களுக்கும் பயனாளிகளுக்கும் இடையே ஒப்பந்தம் இடுவது நடைமுறையில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இத்தகைய ஒப்பந்தங்கள் அமைக்கப்படுவதில்லை. இதுகுறித்த விழிப்புணர்வு இந்தியாவில் இனியாவது அதிகரிக்க வேண்டும். சட்ட நடைமுறைகளின் உதவியோடு கையெழுத்தாகும் ஒப்பந்தம் மூலம் மருத்துவர்களின் பொறுப்பும், சிகிச்சை பெறுபவர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும்'' என்றார்.

அறுவை சிகிச்சையில் உள்ள ஆபத்துக்கான சாத்தியக்கூறுகள், வாய் வழியாக மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலைமை, இரு கண்களிலும் பார்வை இல்லாத நிலை, சிகிச்சைக்கு வைஷாலி முழுமனதுடன் தயாராக உள்ளார் என்பதற்கான உறுதி, மருத்துவர் எஸ்.எம்.பாலாஜி மேற்கொள்ள உள்ள சிகிச்சை குறித்த தகவல்கள் ஆகியவை பற்றி தெளிவான விவரங்களுடன் ஒப்பந்தம் ஒன்றை ரமேஷ் அடுத்த சில நாட்களில் தயார் செய்து கொடுத்தார்.

அத்துடன் வைஷாலிக்கான முழு மருத்துவ செயல்முறையில் எந்த கட்டத்திலாவது சட்ட ரீதியான நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தால் தயங்காமல் என்னை அணுகலாம் என்று கூறி அனுப்பினார் வழக்கறிஞர் ரமேஷ்.

ஜூன் 16, வெள்ளிக்கிழமை...

வைஷாலி குடும்பத்தினருக்காக 'குஜராத்தி மண்டல்' நரேந்திரா, தங்கள் அமைப்பின் தலைவர் ரமேஷ் பட் மற்றும் செயலாளர் சுரேஷ் பரேக் ஆகியோரிடம் பேசினார். அவர்களின் அனுமதியோடு வைஷாலி குடும்பத்தினருக்கு பாரிஸ் கார்னரில் உள்ள குஜராத்தி மண்டலில் ஓர் அறை இலவசமாக ஒதுக்கப்பட்டது.

அவர்களுக்கான உணவும் அங்கேயே வழங்கப்பட்டது. உண்ண உணவும் தங்க இடமும் கிடைத்த மகிழ்ச்சியோடு, அங்கிருப்பவர்களுடன் தங்கள் மொழியிலேயே தயக்கம் களைந்து உரையாடவும் முடிந்தது, வைஷாலி குடும்பத்தினரை ஆசுவாசப்படுத்தியது. நிகழ்வுகளைத் தாயின் வழியாகக் கேட்டறிந்த வைஷாலியின் முகத்திலும் தெளிவு தோன்ற ஆரம்பித்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய குஜராத்தி மண்டல் தலைவர் மற்றும் செயலர் இருவரும், ''ஆதரவில்லாமல் எங்களை நாடிவரும் குஜராத்தி மக்களுக்கு உதவுவதற்காகவே இந்த குஜராத்தி மண்டல் அமைக்கப்பட்டது. இங்கு குறைவான கட்டணத்தில் உண்ண உணவும் தங்க இருப்பிடமும் அளிக்கப்படுகிறது. நரேந்திராவின் பரிந்துரை மற்றும் 'தி இந்து'வின் முயற்சியால் வைஷாலி குடும்பத்தினருக்கு இலவசமாகவே அனைத்தையும் அளிக்கிறோம்.

புரவலர்களின் உதவியுடன் இங்கு இலவச நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. எவ்வித பேதமில்லாமல் அனைத்து மாணவர்களும் பள்ளி மற்றும் கல்லூரி புத்தகங்களை எடுத்துச் சென்று படிக்கலாம். அந்த செமஸ்டர் முடிந்தவுடன் புத்தகங்களை திருப்பி அளித்துவிட வேண்டும்'' என்று தங்களின் மற்ற சேவைகள் குறித்தும் ஈடுபாட்டுடன் விளக்கினர்.

இதற்கிடையே, 'தி இந்து' இணைய தளத்தில் எழுதியிருந்த கட்டுரையைப் படித்துவிட்டு, நல்ல உள்ளம் கொண்ட வாசகர்கள் சிலர், அதில் குறிப்பிட்டிருந்த வைஷாலியின் கணக்கிற்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை அனுப்பியிருந்தனர். இதனால் அவர்களால் குஜராத்தி மண்டலில் இருந்தவாறே, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவர் பாலாஜியின் மருத்துவமனைக்கு பொருளாதார சிரமமில்லாமல் போய் வர முடிந்தது.

ஜூன் 21, புதன்கிழமை...

அறுவை சிகிச்சை குறித்து தொடர் கண்காணிப்புடன் இருக்கவும், ஆலோசனைகள் வழங்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டது. மருத்துவர் எஸ்.எம்.பாலாஜி, ஆர்வமுடன் முன்வந்த திரைப்பட நடிகர் ஜி.வி.பிரகாஷ், குஜராத்தி மண்டல் உறுப்பினர் நரேந்திரா, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.ரமேஷ், வைஷாலியின் பெற்றோர், சகோதரர், 'தி இந்து' சார்பாக மூவர் அதில் இணைந்தோம்.

மருத்துவர் எஸ்.எம்.பாலாஜி மற்றும் 'அனஸ்தீஷியா' நிபுணரின் நேரம், ஆபரேஷன் தியேட்டரின் இருப்பு நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அறுவை சிகிச்சைக்கான நாள் அறிவிக்கப்படும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வைஷாலி குடும்பத்தினர் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் கண்காணிப்புகளுக்கும் தொடர்ந்து பாலாஜி மருத்துவமனைக்குச் சென்று வந்தனர். அப்போது மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின்போது முகத்தில் தழும்புகள் ஏற்படும் என்று கூறியிருந்தது அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியிருந்தது. 'திருமணம் ஆகவேண்டிய இளம் பெண் ணின் முகத்தில் வடுக்கள் ஏற்பட்டால் எப்படி?' என்று யோசித்தனர்.

வைஷாலி வழக்கம்போல் உணவு உண்ண வேண்டும். எல்லோரையும் போல பேச வேண்டும். அதற்கான அறுவை சிகிச்சைதான் இப்போது நடக்கப் போவது...

- பயணம் தொடரும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x