Published : 22 Aug 2017 01:17 PM
Last Updated : 22 Aug 2017 01:17 PM

அணிகள் இணைப்பும் தினகரன் எதிர்ப்பும்: தப்புமா தமிழக அரசு ?

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட நீண்ட குழப்பத்தின் முடிவில் அதிமுக அணிகள் இணைந்துள்ள நிலையில் தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் யார் யாருக்கு எவ்வளவு ஆதரவு தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ள நிலையில் ஆட்சி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக , திமுக , மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் போட்டியிட்டது. இதில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகள் அனைத்துமே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டன.

தேர்தல் முடிவில் அதிமுக 136 தொகுதிகளிலும் , திமுக 89 தொகுதியிலும், கூட்டணி காங்கிரஸ் கட்சி 8 தொகுதியும் , முஸ்லீம் லீக் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக எண்ணிக்கை 135 ஆக குறைந்தது. சபாநாயகரை கணக்கில் சேர்க்க முடியாத நிலையில் அதிமுகவின் 134 என்பது தான் சரியான எண்ணிக்கை.

இதில் ஓபிஎஸ் அணி பிரிந்த போது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தில் 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எடப்பாடி வென்றார். ஓபிஎஸ் தரப்பில் 11 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் கடைசி நேரத்தில் ஆறுகுட்டி எம்.எல்.ஏ எடப்பாடி அணிக்குத்தாவினார்.

இடையில் தினகரன் தரப்பினர் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்று கூறப்பட்டது.

நேற்று இரு அணிகளும் இணைந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் தினகரன் இல்லம் முன்பு குவிந்தனர். மேலும் பல எம்.எல்.ஏக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை அந்த எண்ணிக்கை 19 ஆனது.

19 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் இன்று காலை கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்த நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

அதிமுக ஆட்சிக்கு ஆதரவை விலக்கிக்கொள்வதாகவும் , உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்பதே அவர்களது கடிதத்தில் உள்ள கோரிக்கை.

கடிதத்தை பெற்ற கவர்னர் பின்னர் மும்பை கிளம்பி சென்றார். சட்டசபையில் அதிமுக பெரும்பான்மையை நிருபிக்க வேண்டுமானால் 118 எம்.எல்.ஏக்கள் தேவை. 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்த நிலையில் தற்போது 19 எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் சென்றதால் 103 ஆக குறைந்துள்ளது.

இதில் ஆறுகுட்டி எம்.எல்.ஏ மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேர் சேர்த்தால் 114 ஆக உயர வாய்ப்பு உள்ளது. நடுநிலை வகித்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் ஆதரவையும் சேர்த்தால் 115 பேர் எடப்பாடி பக்கம் உள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக சின்னத்தில் நின்ற தனியரசு , கருணாஸ் , தமீமுன் அன்சாரி நிலை என்ன என்பது கேள்விக்குறி.

அதிமுக ஆதரவில் வெற்றிபெற்ற மூன்று எம்.எல்.ஏக்கள் தனியரசு , கருணாஸிடம் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளனர். தமீமுன் அன்சாரி வெளிநாட்டில் உள்ளதாக அவரது உதவியாளர் தெரிவித்தார். ஆகவே அவர்கள் கருத்தை சொல்லும்போதுதான் யாருக்கு ஆதரவு என்பது தெரியவரும்

ஏற்கனவே அவர்கள் தினகரன் அணியை ஆதரித்து வரும் நிலையில் அதே நிலை தொடர்ந்தால் எடப்பாடி அணியின் எம்.எல்.ஏக்கள் பலம் 112 ஆக குறையும்.

அப்படியானால் அதிமுக பலத்தை நிருபிக்க 6 எம்.எல்.ஏக்கள் தேவைப்படும். தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரை சந்தித்து அதிமுக அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்குவதாக குறிப்பிடாமல் முதலமைச்சர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்கிற ரீதியில் கடிதமாக கொடுத்துள்ளனர்.

இதன் மூலம் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்களும் திரள்வார்களா என்பது முதலில் உள்ள கேள்வி. ஒருவேலை எடப்பாடியை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் சமரசத்திற்கு வரும் வாய்ப்பு உள்ளதாகவும் பார்க்கலாம்.

 

 

தற்போது உள்ள சூழ்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் உள்ள 10 எம்.எல்.ஏக்கள் முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள் ஒருவேலை எடப்பாடி மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுவானால் அந்த இடத்தில் ஓபிஎஸ் ஆதிக்கம் செலுத்தவும் முயற்சிக்கலாம்.

தற்போது உள்ள சூழ்நிலையில் 2011 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஏற்பட்ட நிலையை சுட்டிக்காட்டி அன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் கவர்னர் சட்டசபையை கூட்டி நம்பிக்கை கோர வேண்டும் என எடப்பாடிக்கு உத்தரவிட எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அப்படி ஒரு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அந்த நேரத்தில் ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு தினகரன் தரப்பினர் பொறுப்பேற்க வேண்டி இருக்கும். ஆட்சி இருக்கும் வரைத்தான் இந்த முட்டல் மோதல் எல்லாம். ஆட்சி கவிழ்ந்து மீண்டும் தேர்தல் வந்தால் அனைவரது நிலையும் கேள்விக்குறியாகும்.

அப்படி ஒரு நிலையை கொண்டுவர தினகரன் தரப்பினர் முயற்சிக்க மாட்டார்கள். தினகரனும் , திவாகரனும் தாங்கள் இந்த ஆட்சியை கவிழ்க்க விரும்பவில்லை என தெளிவாக கூறியுள்ள அடிப்படையில் தினகரன் தரப்பினர் தங்கள் தரப்பை பலப்படுத்தவே இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்று எடுத்துக்கொண்டால் ஆட்சிக்கவிழ வாய்ப்பில்லை என்று ஆரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மறுபுறம் திமுகவின் நிலைப்பாடு இதில் என்னவென்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. தேவைப்பட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில் இந்த வாய்ப்பை திமுக பயன்படுத்துமா? மீண்டும் ஒரு தேர்தலை மக்கள் மீது திணிக்க விரும்புமா எனபதும் இப்போது எழுந்துள்ள பிரச்சனை.

தற்போது உள்ள நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தால் அப்போது உள்ள சூழ்நிலைக்கேற்ப திமுக முடிவை திமுக எடுக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மறுபுறம் தினகரன் தரப்பில் மேலும் எம்.எல்.ஏக்கள் இணைய வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர். ஆட்சிக்கு தற்போது பிரச்சனை இல்லை என்ற நிலையில் தற்போது உள்ள சூழ்நிலையை பார்க்கலாமா

முதலமைச்சர் மீது தான் நம்பிக்கை இல்லை என்று கொடுத்துள்ளனர். ஜெயலலிதாவின் உழைப்பால் வந்த ஆட்சியை கவிழ்த்தார்கள் என்ற கெட்ட பெயரை யாரும் சம்பாதிக்கவிரும்பவில்லை ஆகவே அடுத்தடுத்த நிகழ்வுகள் தான் எதையும் தீர்மானிக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x