Published : 28 Jan 2015 10:38 AM
Last Updated : 28 Jan 2015 10:38 AM

45 ஆண்டுகளாகச் செயல்படும் ‘பேனா ஆஸ்பத்திரி’ திண்டுக்கல்லில் 3 தலைமுறையாக நடத்தும் குடும்பத்தினர்

கடந்த 45 ஆண்டுகளாக அதாவது, 3 தலைமுறைகளாக இந்தக் கடை ஒரு குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மனதில் தோன்றும் சிந்தனைகளைப் பதிவு செய்ய பயன்படும் அடிப்படை சாதனம் பேனா. ஒவ் வொரு பேனா சிந்தும் ஒவ்வொரு சொட்டு மையும், உலகின் தலை யெழுத்தையே மாற்றக் கூடியது.

செல்போன், மெயில், பேஸ்புக், வாட்ஸ் ஆப் வருகையால் கடிதப் போக்குவரத்து குறைந்ததாலும், பெரும்பாலான பணிகள் கணினி மயமாக்கப்பட்டுவிட்டதாலும் பேனா வின் பயன்பாடு மிகவும் சுருங்கி விட்டது. கையெழுத்திடவும், குறிப்பு கள் எடுப்பதற்கும் மட்டுமே தற்போது பேனா பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஜெல், பால்பாயிண்ட் பேனாக்களுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பால் ‘நிப்’ பேனாக்களின் பயன்பாடு சுருங்கிவிட்டது.

’பேனா ஆஸ்பத்திரி’

இந்தச் சூழலில், திண்டுக்கல்லில் கடந்த 45 ஆண்டுகளாக பேனா பழுது நீக்கும் கடையை நடத்தி வருகின்றனர் ஒரு குடும்பத்தினர். பேனா ஆஸ்பத்திரி என்ற பெயரில், மாநகராட்சி அலுவலகம் அருகே அந்தக் கடை செயல்பட்டு வருகிறது. முகம்மது கமருதீன்(57) குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக இந்தக் கடையை நடத்தி வருகின்றனர்.

பழுதடைந்த பேனாவை கொடுத் தால் நொடிப்பொழுதில் பழுது நீக்கி கொடுக்கிறார் முகம்மது கமருதீன். பேனா விற்பனை மற்றும் பேனா பழுது நீக்குதல் ஆகியவற்றை முழுநேரத் தொழிலாக நடத்திவரும் இவர், கடையில் நிப் பேனா மட்டுமன்றி பால்பாயிண்ட், ஜெல் பேனா என்று பேனாக்களை மட்டும் விற்பனைக்கு வைத்துள்ளார்.

இவரது கடையில், 10 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலான நிப் மை பேனா, 5 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலான பால்பாயிண்ட், ஜெல் பேனாக்கள் விதவிதமாக விற்பனைக்கு உள்ளன.

இதுகுறித்து முகம்மது கமருதீனி டம் கேட்டபோது அவர் கூறியதாவது:

எனது தந்தை ஷேக் மைதின், இதே கடைவீதியில் பிளாட்பாரத்தில் 1965-ம் ஆண்டு இந்தக் கடையைத் தொடங்கினார். தொடர்ந்து, எனது வாரிசுகளும் இந்தக் கடையை நடத்தத் தொடங்கிவிட்டனர். எனது தந்தை செய்த இந்தத் தொழிலை கைவிட மனமின்றி தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதிக லாபம் இல்லாவிட்டாலும், தொழிலில் திருப்தி உள்ளது. நிப் பேனா பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு இலவசமாக மை வழங்கி வருகிறேன்.

பேனாக்களில் நிப் பேனாக் கள்தான் ஹீரோ. நிப் பேனாக்களை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும். நிப் பழுதாகும்போது மாற்றி விட்டால் மீண்டும் பயன்படுத்தலாம். நிப் பேனாவை பயன்படுத்தும்போது கையெழுத்து மாறாது. அழகாகவும் இருக்கும். பால்பாயிண்ட், ஜெல் பேனாக்களில் கையெழுத்து அவ்வாறு இருக்காது என்றார்.

நுகர்வுக் கலாச்சாரத்துக்கு மாறும் இந்தியா

முகம்மது கமருதீன் மேலும் கூறும் போது, ‘முன்பெல்லாம் நிப் பேனாக் களை தலைமுறை, தலைமுறையாக பாதுகாத்து பெருமைப்பட்டுக் கொள்வர். இன்று, பால்பாயிண்ட் பேனாக்களை மை தீர்ந்தவுடன் தூக்கி எறிந்துவிடுவதால், பேனாக்களின் மதிப்பு குறைந்துவிட்டது.

உலக அளவில் இந்தியாவில் பேனாக்களின் பயன்பாடு அதிகள வில் உள்ளது. ஆனால், அவற்றை நாம் வெளிநாடுகளில் இருந்துதான் அதிகளவு இறக்குமதி செய்கிறோம். இந்தியா உற்பத்தி கலாச்சாரத்தில் இருந்து நுகர்வுக் கலாச்சாரத்துக்கு மாறி வருவதற்கு, பேனா உற்பத்தியும் ஒரு எடுத்துக்காட்டு’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x