Published : 20 Jul 2015 10:30 AM
Last Updated : 20 Jul 2015 10:30 AM

4 சதுர மீட்டருக்கு ஒரு கருவேல மரம் பரவுவதாக அதிர்ச்சித் தகவல்: தமிழகத்தில் ஆண்டுக்கு 2.5% விவசாய சாகுபடி பரப்பு குறைகிறது

தமிழகத்தில் 10 ச.மீ.க்கு ஒரு மரம் என்றிருந்த கருவேல மரம் தற்போது 4 ச.மீ.க்கு ஒரு மரமாக அதிகரித்துவிட்டதால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் விவசாய சாகுபடி பரப்பு குறைந்துவருவதாக வேளாண்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் தூத்துக்குடி, ராம நாதபுரம், விருதுநகர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக ளவிலும், திண்டுக்கல், தஞ்சாவூர், தருமபுரி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் அதிகளவிலும் கருவேல மரங்கள் உள்ளன. பொதுவாக கருவேல மரம் அதிகமாகவும், நெருக்கமாகவும் டெல்டா மாவட்டங்களில் உள்ளன. இந்த மாவட்டங்களில் 10 ச.மீ.க்கு ஒரு மரம் என்றிருந்த கருவேல மரங்களின் எண்ணிக்கை தற்போது 4 ச.மீ.க்கு ஒரு மரம் என்ற விகிதத்துக்கு அதிகரித்துவிட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 336 பஞ்சாயத்துகள் உள்ளன. ஒரு பஞ்சாயத்துக்கு 10 ஏக்கர் நிலத்தை இந்த மரங்கள் ஆக்கிரமித்துள்ள தாகவும், அதனால் 3,360 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நீர்வடிப் பகுதி வேளாண்மை பொறியாளர் எக்ஸ்.பிரிட்டோராஜ், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இந்த மரங்கள் டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதிகளில் காவிரி நீர் சேராத பகுதிகள், மற்ற மாவட்டங்களில் நீர் வசதியில்லாத பகுதிகள், மாற்று விவசாயம் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளை சென்றடையாத பகுதிகளில் புற்றீசல் போல் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. சிறியதாக இருக்கும் இந்த மரங் களின் செடிகளை அலட்சியப் படுத்துவதால் மரமாக வளர்ந்தபின் அவற்றை எடுப்பதற்கான நிதி ஆதாரமில்லாமல் விவசாயிகள் விட்டுவிடுகின்றனர்.

வண்டல், களிமண்ணில் உள்ள கால்சியம் மற்றும் நீர் ஆதாரத்தை நிலைத்து வைத்திருக்கும் தன்மை இந்த மரங்களுடைய விதை பெருக்கத்துக்கு ஏதுவாக அமைந்துவிடுகிறது. டெல்டா அல்லாத பிற மாவட்டங்களில் இந்த மரங்கள் வேலி பயிராக மட்டுமே விவசாயிகளால் ஆரம்பத் தில் வளர்க்கப்பட்டன.

கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழையில்லாத காரணத்தால் தற் போது இந்த மரங்கள் வேலிகளைத் தாண்டி வயல்வெளிகளிலும் பரவிவிட்டன. தமிழகத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தபட்சம் 10 ஏக்கர் பரப்பு நிலத்தையாவது இந்த மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் 50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 250 முதல் 400 பஞ்சாயத்துகள் உள்ளன.

மொத்தமாக கணக்கிடும்போது, தமிழகத்தில் 10 ச.மீ.க்கு ஒரு மரம் என இருந்த கருவேல மரம் தற்போது 4 ச.மீ.க்கு ஒரு மரமாக அதிகரித்துவிட்டதால், டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 1.75 முதல் 2.5 சதவீதம் சாகுபடி பரப்பு குறைகிறது. மற்ற மாவட்டங்களில் 0.9 முதல் 1.2 சதவீதம் சாகுபடி பரப்பு குறைகிறது.

இந்த கருவேல மரம் ஆணி வேர் கொண்டவை. 2 வயதுடைய இந்த மரத்தில் அதனுடைய வேர் நீளம் அதிகபட்சம் 2 1/4 கி.மீ. நீளத்துக்கு செல்லக்கூடியவை. இதன் வேர்களுடைய உள் அமைப்பு பல அடுக்குகளை கொண்டது. வறட்சியை தாங்கி வளர்ந்து, வேர்கள் உயிருடன் நிலைத்து இருக்கும் தன்மை கொண்டவை. பிற தாவரங்களுக்கு வேலி பயிராக இந்த மரங்களை வைத்திருந்தால், அந்த செடிகளுக்கு அளிக்கக்கூடிய தண்ணீரை 35 முதல் 45 சதவீதம் உறிஞ்சிக்கொள்கின்றன. அதனால், வேலி பயிராகக்கூட இந்த மரங்களை வைத்துக் கொள்ளக்கூடாது.

இயந்திரங்கள் மூலம் இந்த மரங்களின் பக்கவாட்டு வேர், தூர் வேர்களை பறித்து எறிய வேண்டும். வேரின் தூரில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துவிட வேண்டும். மற்ற மரங்களில் தீவைத்து எரித்தால் வளராது. இந்த மரங்களை அதிக கவனத்துடன் அழிக்க வேண்டும். கொஞ்சம் விட்டாலும் சிறிதளவு மழை பெய்தாலும் இந்த மரங்களின் வேர் துளிர்த்து வந்துவிடும்.

வேளாண்மையைக் காப்பதற்கும், விவசாயிகளின் உடல்நலத்தைக் காக்கவும் வரும் ஆடிப்பட்டத்தில் பெய்யக்கூடிய மழை, செப். 15-ம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை காலத்திலும் இந்த கருவேல மரங்கள் அழிப்பு தொடர்பான இயக்கம் வீறுகொண்டு எழுந்தால் மட்டுமே குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான இந்த மரங்களை எடுக்க முடியும். புதிய மரங்களை நடாவிட்டாலும் பரவாயில்லை.

காலிமனை, விவசாய நிலங்களில் உள்ள கருவேல மரங்களை பொதுமக்களே பறித்தெறிய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x