Last Updated : 28 Aug, 2014 10:00 AM

 

Published : 28 Aug 2014 10:00 AM
Last Updated : 28 Aug 2014 10:00 AM

வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்: பக்தர்கள் குவிகின்றனர்; செப். 7-ம் தேதி பெரிய தேர் பவனி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழா நாளை (ஆக.29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் கிறிஸ்தவர்களின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது. ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்துகொண்டே இருக்கும் இந்தப் புகழ்பெற்ற பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா, வெள்ளிக் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா செப்.8-ம் தேதி வரையிலும் நடைபெறும்.

திருவிழாவின் முதல் நாளான வெள்ளி மாலை 6 மணிக்கு கொடி யேற்றப்படுகிறது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் திருக்கொடியை புனிதம் செய்து வைக்கிறார். புனிதம் செய்யப்பட்ட கொடி வேளாங்கண்ணி கடைத்தெரு, ஆரிய நாட்டுத் தெரு, கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு லட்சக்கணக்கான மக்களின் வாழ்த்துகளுடன் கொடிக் கம்பத்தில் ஏற்றப்படும்.

நற்கருணை ஆசீர், திருப்பலி

அதன் பின்னர் பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு ஆராதனை நடைபெறவுள்ளது. தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம், தமிழில் திருப்பலி ஆகியவை நிறைவேற்றப்படும். இவற்றில் பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அடிகளார், உதவி பங்குத் தந்தைகள், அருட்சகோதரிகள் கலந்துகொள்வார்கள்.

மறுநாள் முதல் ஒவ்வொரு நாளும் பேராலயத்தில் காலை 5 மணிக்கு தமிழில் திருப்பலி நடை பெறும். பின்னர் அன்னையின் திருச்சொருப ஆசீரும், நோயாளிகளை மந்திரித்தலும் நடைபெறும். விண்மீன் ஆலயத்தில் தினந்தோறும் தமிழ், மராத்தி, மலையாளம், கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலிகளும், தமிழில் அருங்கொடை, ஜெபத் திருப்பலியும் நடைபெறும். மாதாகுளம், பேராலய கீழ்கோயில், பேராலய மேற்கோயில், சிலுவைப்பாதை ஆகியவற்றிலும் தினமும் திருப்பலிகள் நடைபெறும்.

செப்.7-ம் தேதி பெரிய தேர் பவனி

செப்டம்பர் 7-ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு மாலை 5.15 மணிக்கு பேராலய கலையரங்கில் தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் ஆகியவை நடைபெறும். பின்னர் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்படும். இதையடுத்து அன்று மாலை 7 மணிக்கு பெரிய தேர்பவனி நடைபெறும். மின் அலங்கார பெரிய தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

8-ம் தேதி மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு ஆண்டுத் திருவிழா நிறைவடைகிறது. பின்னர் மாலை 6.15 மணிக்கு பேராலய கீழ்கோயிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படும்.

குவியும் பக்தர்கள் கூட்டம்

இத்திருவிழா தொடங்குவதையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பாதயாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக மும்பை, திருவனந்த புரம், திருநெல்வேலி, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்களும், மாநிலத்தின் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப் படுகின்றன. பக்தர்களுக்குத் தேவையான மருத்துவ முகாம்கள், கழிவறை, குளியலறை, குடிநீர், ஆகிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமரா

வேளாங்கண்ணி விழாவையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தனியார் வாகனங்கள் அனைத்தும் நகருக்கு வெளியே நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலில் இறங்கி பக்தர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரையில் கூட்டத்தை கட்டுப்

படுத்த கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் பேராலய நிர்வாகம் ஆகியவை இணைந்து திருவிழாவை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x