Last Updated : 02 May, 2014 04:56 PM

 

Published : 02 May 2014 04:56 PM
Last Updated : 02 May 2014 04:56 PM

வேகத்தடையை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி!

நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் செய்தி சேகரிப்புக்காக சென்றுகொண்டிருந்தேன். தகிக்கும் கோடை வெயிலை சமாளிக்க சாலையோரத்தில் ஆங்காங்கே கரும்புச்சாறு கடை, பழரசக் கடை, தர்பூசணி, வெள்ளரிப் பிஞ்சு விற்பனை மற்றும் மோர், கம்பங் கூல் என குறிப்பிட்ட இடைவெளியில் சாலையோரத்தில் உள்ள புளியன் மரத்தடியில் (பெரும்பாலான இடங்களில் சாலை அகலப்படுத்தும் நோக்கில் மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. யார் செய்த புண்ணியமோ இன்றளவும் நாமக்கல் - திருச்செங்கோடு மாநில நெடுஞ்சாலையில் சாலையோர மரங்கள் உள்ளன.) சிலர் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தபோதும் அவற்றை சாப்பிட மனதில் விருப்பமில்லை. பயணம் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் எனும் இடத்தில் புளியன் மரத்தடியில் இளைஞர் ஒருவர் தள்ளுவண்டியில் முலாம்பழம் பழச்சாறு போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். முந்தைய பத்தியில் குறிப்பிட்டிருந்த கடைகள் அனைத்தும் குடியிருப்புகள் அருகிலும் ஜனநடமாட்டம் உள்ள பகுதியிலும் இருந்தது. ஆனால், இளவயது நபர் வைத்திருந்த தள்ளுவண்டி கடை அருகே குடியிருப்புகள் உள்ளிட்ட எதுவும் இல்லை.

இதை யோசனை செய்தபடியே கடை அருகே எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, முலாம்பழச்சாறு சாப்பிடும் நோக்கில், அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். "குடியிருப்புகள் இல்லை கண்ணுக்கு எட்டின தூரம் வரை வணிக கடைகளும் இல்லை. அப்படியிருக்க, இங்கு பழச்சாறு கடை வைத்திருக்கிறீர்கள். வியாபாரம் நடக்கிறதா?" என்றேன். அதற்கு, "நன்றாக நடக்கிறது" என பேசியபடியே அவர் கூறியது:

"ராசிபுரம் அருகே வையப்பமலை எனது சொந்த ஊர். எனது பெயர் ராஜகோபால். 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். விவசாயம் செய்கிறேன். பகல் வேளையில் கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக்க முடிவு செய்து, பழச்சாறு கடை வைத்துள்ளேன். தள்ளுவண்டி கடை வைத்துள்ள இடத்தில் இருந்து சில அடி துாரத்தில் சாலையின் நடுவே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் வருவோர் வேகத்தடையை கடக்க வாகனங்களை மெதுவாக ஓட்டுவர். அப்போது எனது கடை கண்ணில் படும். கோடை வெயிலும் அதிகமாக இருப்பதால் வாகனங்களை நிறுத்தி பழரசம் சாப்பிடுகின்றனர்.

நாளொன்றுக்கு ஆயிரம் முலாம்பழ பழரசம் விற்பனை செய்கிறேன். கடைகளில் விற்பனை செய்யும் அதே நேரத்தில், ரூ.15 என்ற மலிவு விலையில் விற்பனை செய்கிறேன். முலாம்பழ பழரசம் மிக்ஸி மூலம் தயார் செய்யப்படுகிறது. அதற்கான மின்சாரத்திற்கு பேட்டரி பயன்படுத்தவில்லை. காரணம், அதிக செலவு பிடிக்கும். அதேவேளையில் விவசாய நிலத்திற்கு மருந்து அடிக்க பயன்படும் இயந்திரத்தின் மோட்டாரை எடுத்து கிரைண்டர் பெட்டியில் பொருத்தியுள்ளேன். இவற்றை இயக்க பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. ரூ. 150-க்கு பெட்ரோல் நிரப்பினால் ஆயிரம் பழரசம் தயார் செய்ய முடியும்" என்று அவர் கூறியதை கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்.

படித்து பட்டம் பெற்ற பலர் சரியான வேலை கிடைக்கவில்லை. சுய தொழில் ஆரம்பித்து நஷ்டம் என புலம்புவோர் மத்தியில் தனது சமயோகித அறிவால், ஆள் அரவமற்ற இடத்தில் பழச்சாறு கடை அமைத்து லாபம் ஈட்டும் ராஜகோபால் பாராட்டுகுரியவர் என்றால் மாற்றுக் கருத்தில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x