Published : 16 Jun 2014 10:00 AM
Last Updated : 16 Jun 2014 10:00 AM

ரத்த தானத்தில் சதமடித்த சீனிவாச தாதம்- 65 வயதில் 146 முறை தானம்

ஜூன் 14-ம் தேதி உலக ரத்த தான தினம். இந்த தினத்தைக் கொண்டாடியவர்கள் இனி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பிரமுகர் திருச்சியில் இருக்கிறார்.

ரத்த தானம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை இவர் மனதில் உருவாக்கியவர் ஒரு சிறுமி. திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த சீனிவாச தாதத்துக்கு 25 வயது இருக்கும்போது அவர் வீட்டின் அருகே வசிக்கும் ஒரு சிறுமி கீழே விழுந்து படுகாயம் அடைந்து அதிக ரத்த இழப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்தக் குழந்தையைக் காப்பாற்ற ரத்தம் தேவை, உடனே ஏ ஒன் பாசிட்டிவ் குரூப் ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார் மருத்துவர். அந்தக் குழந்தையின் நெருங்கிய உறவினர்கள்கூட ரத்த தானம் என்கிற வார்த்தையைக் கேட்டதும் தெறித்து ஓடினர்.

ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற நாம் ஏன் ரத்தம் வழங்கக் கூடாது என யோசித்தார் தாதம். உடனே முடிவெடுத்து ரத்தம் வழங்கி அந்த குழந்தையைக் காப்பாற்ற உதவினார். இது நடந்தது 1975-ம் ஆண்டில்.

பிறகு 3 மாதங்களுக்கு ஒரு முறை (ரத்த தானம் வழங்க மருத்துவ உலகம் சொல்லும் இடைவெளி விட்டு) தொடர்ந்து ரத்த தானம் வழங்கி பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார். இப்போது தாதத்துக்கு வயது 65. மருத்துவ உலகம் 65 வயதுக்கு மேல் ரத்ததானம் செய்வது உகந்தது அல்ல என தெரிவித்துள்ளதால் கடந்த 6 மாதத்துக்கு முன்பு கடைசியாக 146-வது முறை ரத்த தானத்துடன் தனது ரத்த தான பயணத்தை நிறைவு செய்தார்.

தற்போது திருச்சி சங்கம் ஹோட்டலில் நிர்வாகப் பிரிவு அலுவலராக இருக்கும் தாதம் வாய்ப்பு கிடைக்கும்போது சந்திக்கிற நபர்களிடம் ரத்த தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்த மறப்பதே இல்லை.

“என்னால் செய்ய இயலா ததை என்னைப் போன்றவர்களைக் கொண்டு செய்ய வைப்பேன்” என்பதை லட்சியமாகக் கொண்டு இயங்கி வருகிறார் தாதம். கல்லூரிகள், தொண்டு நிறுவனங் கள், சமூக நல அமைப்புகள், ரசிகர் மன்றத்தினரைச் சந்தித்து ரத்த தானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இவரால் திருச்சியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தோற்று விக்கப்பட்ட தன்னார்வ ரத்த தானம் வழங்குவோர் சங்கம் பல ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றி யிருக்கிறது. பல நூறு தன்னார்வ ரத்த தான வழங்குநர்களை உருவாக்கியுள்ளது. தொடரட்டும் இந்த அரிய பணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x