Published : 05 Nov 2013 03:10 PM
Last Updated : 05 Nov 2013 03:10 PM

மீனாட்சிப்பட்டியை ஒளிர வைத்த இருளன்

இருளன்…

பெயரில்தான் இருள் இருக்கிறதே தவிர, இவர் ஊருக்கு வெளிச்சம் கொடுத்த விளக்கு. இருண்டு கிடந்த மீனாட்சிப்பட்டி இன்று பிரகாசிக்க காரணமாக இருக்கும் இளைஞன்.

மதுரைக்கு 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மீனாட்சிப்பட்டி. ஊருக்கு வெளிச்சம் கொடுத்த கதையை விவரிக்கிறார்…

எனக்கு அஞ்சு வயசா இருக்கிறப்பவே எங்கப்பா இறந்துட்டார். அப்புறம் மாமாவோட நிழல்ல ஒதுங்க வேண்டியதாப்போச்சு.

ப்ளஸ் டூ தேர்வுல 681 மார்க் எடுத்தேன். எங்க ஊருக்காரரு ஒருத்தரு டிகிரி முடிச்சுட்டு, பேங்கில் வேலை செய்யுறாரு. அவரு, ‘இந்த மார்க்கை வைச்சுக்கிட்டு மாடு மேய்க்கக்கூட போக முடியாது’ன்னாரு. அவர் அப்போ சொன்னது இன்னிக்கு வரைக்கும் என் நெஞ்சுல முள்ளா குத்திக்கிட்டு இருக்கு. இதை பொய்யாக்கணும்னு அப்பவே உறுதி எடுத்தேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.எஸ்சி. படிச்சேன். காலேஜ் லைப்ரரியில் வேலை செஞ்சு, அதுல கெடைச்ச சம்பளத்தைக் குடுத்து அப்பவே சிலம்பம் கத்துக்கிட்டேன். 2004ல் சென்னையில் நடந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள்ல முதல் ஆளா வந்தப்பதான் ஊரே என்னை திரும்பிப் பாத்துச்சு.

ஊரு சனங்களுக்கு ஏதாவது செய்யலாம்னு நெனச்சப்ப, கிராமத்தைச் சேர்ந்த 15 இளைஞர்கள் எனக்கு தோள் கொடுக்க முன்வந்தாங்க. முதல்ல கிராமத்துப் பெரியவங்ககிட்ட பேசினோம். “படிப்புத்தான் இன்னிக்கு பிரதானம். புள்ளைங்கள கட்டாயம் படிக்க அனுப்புங்க”ன்னு நாங்க சொன்னத சில பேரு ஏத்துக்கிட்டாங்க; சில பேரு யோசிச்சாங்க.

படிப்பு மட்டுமில்லாம சிலம்பம், ஒயிலாட்டம், பரதம், கரகாட்டம், யோகா என கிராமத்துப் பிள்ளைங்களுக்கு அத்தனையும் கத்துக் குடுத்தோம். இப்ப, 200 பிள்ளைங்களுக்கு இதில் பெருவாரியான கலைகள் அத்துப்படி. பல இடங்கள்ல போட்டிகளுக்கு போய் பரிசுகளையும் அள்ளிக்கிட்டு வந்திருக்காங்க.

இப்ப எங்க கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் கலைக் கல்லூரியிலும், 15 பேர் பொறியியல் கல்லூரியிலும் படிக்கிறாங்க. முன்ன, ஊர்ல பத்துப் பேருக்குத்தான் கையெழுத்துப் போடத் தெரியும். இப்ப எல்லாரையுமே கையெழுத்துப் போட வைச்சிருக்கோம். பருவம் வந்த பிள்ளைகள் வழி தவறிப் போயிடாம கண்காணிப்பது குறித்தும் பெற்றோருக்கு கவுன்சலிங் கொடுக்கிறோம். பெற்றோரை இழந்த ஒரு பெண்ணை சில நல்ல இதயங்களின் உதவியோடு படிக்க வைச்சிட்டு இருக்கோம். நாங்க நடத்துற இந்த மரத்தடி சங்கமம், எதிர்காலத்துல ஒரு பல்கலைக்கழகமா மாறணும். இதுதான் நோக்கம்… நம்பிக்கை ஒளிர பேசினார் இருளன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x