Last Updated : 02 Jan, 2014 07:09 PM

 

Published : 02 Jan 2014 07:09 PM
Last Updated : 02 Jan 2014 07:09 PM

மதுரை: ஏழைக் குழந்தைகளின் கல்விக்கண் திறக்கும் லாரி ஓட்டுநர்

கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இல்லையே என வருத்தப்பட்டேன். ஆனால், எனது பள்ளியில் படிக்கும் 80 குழந்தைகள், தாத்தா.. தாத்தா.. என அழைக்கும்போது நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது எனக் கூறுகிறார் கல்வி மையம் நடத்தி வரும் லாரி ஓட்டுநர்.

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே உள்ள சேங்கிலிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.பி. செல்வராஜ் (54). முன்னாள் லாரி ஓட்டுநரான இவர், தற்போது கரடிப்பட்டி கிராமத்தில் நேதாஜி கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் சிறப்பு பயிற்சி மையத்தின் நிர்வாகி.

10 மையங்கள்

தமிழகத்தில் 2002-ம் ஆண்டு முதல் அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், பள்ளியில் இருந்து இடைநின்ற 14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் 8 ஆம் வகுப்பு வரை படிக்கிறார்கள். இந்த இயக்கத்தின்கீழ், மதுரையில் 10 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், கரடிப்பட்டியில் இயங்கிவரும் நேதாஜி கல்வி அறக்கட்டளை உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையமும் ஒன்றாகும்.

நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரிக்கு எதிரே உள்ள சாலையில் 3 கி.மீ. சென்றால் கரடிப்பட்டி என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில்தான் நேதாஜி கல்வி அறக்கட்டளை உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

அந்த மையத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வியுடன் சேர்த்து பண்பும் கற்றுத் தரப்படுகிறது என்பதை பள்ளிக்குச் சென்றதும் உணரலாம். அங்கே மதிய வேளையில், சமையல் வேலை செய்து கொண்டிருந்த எஸ்.பி. செல்வராஜ் என்பவரை தாத்தா என்றும், அவரது மனைவி மயிலை பாட்டி என்றும் குழந்தைகள் பாசமாக அழைத்துக் கொண்டிருந்தனர்.

வெளி நபர்கள் சென்றால் வரவேற்று வணக்கம் செலுத்துகின்றனர். இவர்களுக்கு சிலம்பாட்டமும் சிறப்பாக கற்றுத் தரப்படுகிறது. அந்தப் பள்ளியின் நிர்வாகியான செல்வராஜிடம் பேசினோம்.

80 பேர் படிக்கின்றனர்

நான் லாரி ஓட்டுநராக இருந்தேன். எனது மனைவி தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்தார். எங்களுக்கு குழந்தை கிடையாது. அந்த வருத்தம் எனக்கு இருந்தது. இதனால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அந்த சமயத்தில்தான் சமுதாயத்தில் தாய், தந்தை இல்லாமல் சிரமப்படும் ஏழைக் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். அதன்படியே, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்கத்தின் மூலம், குழந்தைகளுக்காக இங்கே ஒரு மையத்தைத் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் இந்த மையத்தில் 17 குழந்தைகள் மட்டுமே இருந்தனர். தற்போது 80 பேர் படிக்கிறார்கள். இதில், 51 பேர் 8 ஆம் வகுப்பு வரை படிக்கிறார்கள். 29 பேர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார்கள். இந்த மையத்தில் 8 ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காக அரசு சார்பில் நிதி தருகிறார்கள். ஆனாலும், குழந்தைகளின் பிற தேவைகளுக்காக வெளியில் நன்கொடை பெற்றுத்தான் இந்த மையத்தை நடத்தி வருகிறேன். சில நாள்களுக்கு முன் இந்த பள்ளிக் கட்டிடத்தை எழுப்பினேன்.

8 ஆம் வகுப்புக்கு மேல் வெளியில் வேறு பள்ளிகளில் படிக்கும் 29 மாணவர்களுக்கும் வெளியில் சிரமப்பட்டு நிதி திரட்டியே செலவழித்து வருகிறேன். இந்த அறக்கட்டளையில் இன்னும் 2 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூலித் தொழிலாளிகள் தான்.

ஒரு குழந்தை இல்லை என்று வருத்தப்பட்ட காலங்கள் உண்டு. ஆனால், இப்போது எங்களுக்கு 80 குழந்தைகள் இருக்கிறார்கள். அனைவரும் தாத்தா, பாட்டி என அழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என் மனைவி அனைத்து வேலைகளையும் மிகுந்த ஈடுபாட்டோடு செய்கிறார். இந்தக் குழந்தைகளின் ஆடைகளை நாங்கள்தான் தினமும் துவைப்போம். நானும், எனது மனைவியும் படிக்காதவர்கள்தான். ஆனால் பலரது கல்விக் கனவை நிறைவேற்றி வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் செல்வராஜ்.

சிறப்பாக செயல்படுகிறது

அந்த மையத்தில் 1 முதல் 4-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறையும், 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி முறையும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறையும் கற்றுத் தரப்படுகிறது. சேவை நோக்கோடு குறைந்த ஊதியத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்த கற்பகதேவி என்பவரும், முதுகலை பட்டப்படிப்பு முடித்த சிவபாலன் என்பவரும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறார்கள்.

மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலர் பார்வதி கூறியதாவது: 14 வயது வரையுள்ள அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில், மதுரையில் 10 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கரடிப்பட்டி நேதாஜி அறக்கட்டளையின் மூலம் பயிலும் மாணவர்கள், வெள்ளை பாறைப்பட்டி பள்ளியில் பதிவு பெற்றுள்ளார்கள். கரடிப்பட்டி பள்ளியை சிறப்பாக நடத்தி வருகிறார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x