Published : 07 Jul 2017 11:32 AM
Last Updated : 07 Jul 2017 11:32 AM

போதை மருந்து கடத்தல் கேந்திரமாகும் சென்னை

அதிகாலை நேரம். சென்னையை அடுத்த செங்குன்றத்தில் இருந்து காரில் பயணம். கண்ணை மறைத்துத்தான் அழைத்துச் சென்றார்கள். சுமார் முக்கால் மணி நேரம் கழித்து கார் ஓரிடத்தில் நின்றது. அது ஒரு அரிசிக் கிடங்கு. அழைத்துச் சென்ற நண்பர் அங்கிருந்த பெரியவரிடம் நம்மைப் பத்திரிகையாளர் என்றே அறிமுகப்படுத்தினார். உடன் நைஜீரிய நாட்டுக்காரர் ஒருவரும் இருந்தார்.

“நண்பர் உங்களைப் பற்றி நிறையச் சொன்னார். போதை மருந்து தொடர்பாக என்ன தகவல் வேண்டுமானாலும் கேளுங்கள்.’’ என்று ஆரம்பித்த அந்தப் பெரியவர், “அதற்கு முன்பாக நான் கொஞ்சம் ‘சில்வர்’ எடுத்துகொள்ள வேண்டும்’’ என்றபடியே தனது பர்ஸிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தார். மின்விசிறியை அணைத்துவிட்டு மிக ஜாக்கிரதையாக டேபிளின் மீது வைத்து பொட்டலத்தைப் பிரித்தார்.

உள்ளே பனித் தூள் போல பளீர் வெண்ணிற பவுடர் மினுமினுத்தது. தனது சுண்டு விரலின் நீண்ட நகத்தில் கால் பகுதி அளவுக்கு அதை எடுத்து நுனி நாக்கில் சுவைத்தார். கண்ணை மூடியவர் சில நிமிடங்கள் கழித்து உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். நைஜீரிய நபரும் அவ்வப்போது உடைந்த தமிழில் பேசினார். இருவரும் நிறைய பேசினார்கள். அவர்கள் சொன்ன தகவல்கள் அடிப்படையிலும் போதை மருந்துக் கடத்தல் தடுப்புத் துறை அதிகாரிகள் அளித்த தகவல்கள், பல்வேறு தேடல்கள், தரவுகள் அடிப்படையிலும் உருவானதுதான் இந்தக் கட்டுரை.

மும்பைக்கு அடுத்து சென்னை

சமீபத்தில் சென்னை அடுத்த செங்குன்றத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சுமார் 71 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் உள்ளிட்ட போதை மருந்துகளை கைப்பற்றினார்கள். சென்னையில் மிக அரிதாகவே இப்படி பெரிய அளவிலான போதை மருந்துகள் பிடிபடுகின்றன. கேட்டமைன் போதை மருந்து கடத்தலில் நாட்டிலேயே மும்பைக்கு அடுத்த முக்கிய மையமாக இருக்கிறது சென்னை. போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை (ஜூன் 26) சமீபத்தில் கடந்தி ருக்கும் நிலையில், சென்னையின் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வலைப்பின்னல் தொடர்பாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

தங்கப் பிறையும் தங்க முக்கோணமும்

சர்வதேச போதை மருந்து கடத்தல் உலகில் இரு பெயர்கள் மிகவும் பிரபலம். ஒன்று, ‘தங்கப் பிறை’. மற்றொன்று ‘தங்க முக்கோணம்.’ தென் மேற்கு ஆசியாவின் கிர்கிஸ்தான், தஜகிஸ்தான், ஆப்கானிஸ் தான், பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிறை வடிவ பிராந்தியமே தங்கப் பிறை. இதற்கு மறுகோடியான தென்கிழக்கில் லாவோஸ், தாய்லாந்து, மியான்மர், வியட்நாம், கம்போடியா, ஹாங்காங், தாய்வான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியமே தங்க முக்கோணம்.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளின் போதை மருந்துக் கடத்தல் கும்பல்களுக்கு தங்கப் பிறையும் தங்க முக்கோணமுமே படியளக்கும் பகவான்கள். தங்கப் பிறை, தங்க முக்கோண பிராந்தி யங்களை இணைக்கும் முக்கிய கேந்திரமாக சென்னையை வைத்திருக்கிறார்கள்.

இருமுனைகளை இணைக்கும் சென்னை

தங்கப் பிறை எனப்படும் தென்மேற்கில் பெரும்பாலும் சப்ளையாவது ஹெராயின் மற்றும் ஓப்பியம் என்கிற அபின். கசாகசா செடியில் உற்பத்தியாகும் அபினை சுண்ணாம்பு சேர்த்து சுத்திகரிக்கும்போது வெண்ணிறத்தில் ஹெராயின் தயாராகிறது. வெண்மையின் தரத்தைப் பொறுத்து சர்வதேச அளவில் இதன் விலையும் மதிப்பும் அதிகரிக்கும். ஹெராயினும், அபினும் தங்கப் பிறை நாடுகளிலும் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் சில வடகிழக்கு மாநிலங் களிலும் மட்டுமே உற்பத்தி யாகிறது. ஓப்பியம் சாகுபடியில் முதலிடத்தில் இருக்கிறது ஆப்கானிஸ்தான். உலகில் புழங்கும் ஓப்பியத்தில் 90 சதவீதம் ஆப்கானிஸ்தானில் இருந்து தருவிக்கப்பட்டு டெல்லியின் பஹார்கஞ்ச் பகுதியில் பதுக்கி வைக்கப் படுகிறது. அங்கிருந்து தரை வழியாகவும் வான் வழியாகவும் போதை மருந்துகள் நேரடியாகவே சென்னைக்கு கடத்தப்படுகின்றன.

இவை தவிர, மும்பையில் போதை மருந்துகளை தயாரிக்கும் பார்மசுட்டிக்கல் தொழிற்சாலைகள் சுமார் 4000-க்கும் அதிகமாக உள்ளன. இங்கிருந்து தயாராகும் கேட்டமைன், ஹெராயின், சீட்டிராப்டிரைன், எஹெட்டிரைன் உள்ளிட்ட சிந்தட்டிக் போதை மருந்துகளும் அங்கிருந்து சென்னையை வந்தடை கின்றன. சென்னையின் செங்குன்றம், பாடியநல்லூர், சோழவரம், காரனோடை, ஜெகநாதபுரம், பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார ஊர்கள்தான் மேற்கண்ட போதைப் பொருட்களின் மொத்த வியாபாரப் பதுக்கல் வட்டாரங்கள். இங்கிருந்து இலங்கை, மாலத்தீவு, மலேசியா, இந்தோனேஷியா வழியாக தங்க முக்கோண நாடுகளுக்கு போதை மருந்துகள் கடத்தப்படுகின்றன. உள்நாட்டு விற்பனை தனி. கொல்கத்தா, பங்களாதேசம் வழியாக துணை மற்றும் அவசர கால வழிகள் இருந்தாலும் பிரதான கடத்தல் பாதை இதுதான்.

கடத்தல் உலகின் டெலிவரி புறாக்கள்

ஒருகாலத்தில் போதைக் கடத்தல் ‘டான்’களாக கரீம் லாலா, ஹாஜி மஸ்தான், யூசுப் பட்டேல், டைகர் மேமன், சோட்டா ராஜன் ஆகியோர் இருந்தார்கள். ஆனால், உலகமயமாக்கல் மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு நிலைமை மாறிவிட்டது. இப்பொதெல்லாம் ‘டான்’ என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. இது ஒரு சூதாட்டம். வாய்ப்பு, திறமை, பணம் இம்மூன்றும் இருப்பவர்கள் இதில் கோலோச்சலாம்.

டார்லிங்டன் சிமென்ஜி, இஸ்ரேல் எச்சீம் இவர்கள் இருவரும் நைஜீரியர்கள். சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அபு ஆஸ்மி, தாபீர், பர்வஜ் கான், ஆண்டனி உமேஷ், ஹெராயின் யாதவ் இப்போதைக்கு இவர்கள் தான் டெல்லியிலிருந்து சென்னைக்கு போதைச் சரக்கைக் கடத்தும் முக்கிய புள்ளிகள். பிரவிண் திலீப் வகாலா, பண்டுதாஸ், ராஃபு லூலானியா, பப்பு சவுத்ரி, மனிஷ் சேஷாரியா, சசிகலா ரமேஷ் பட்நான்கர் இவர்கள் மும்பையிலிருந்து சென்னைக்குக் கடத்தும் முக்கியப் புள்ளிகள்.

சென்னையில் 92 பேர்

‘நார்க்கோட்டிக்ஸ் இன்டெலிஜென்ஸ் பீரோ’ அளிக்கும் கணக்குப்படி சென்னை நகரில் 92 போதை மருந்து கடத்தல் மற்றும் விற்பனை யாளர்கள் இருக்கின்றனர். இதில் ஆக்ட்டிவ் நபர்கள் 39 பேர். புளியந்தோப்பில் 17 பேர் (8 பெண்கள் உட்பட), அண்ணா நகரில் 5 பேர் (2 பெண்கள்) பரங்கிமலையில் 12 பேர் (5 பெண் கள்), மாதவரத்தில் 10 பேர் (4 பெண்கள்), அம்பத்தூரில் 9 பேர் (4 பெண்கள்), அடையாரில் 9 பேர் (2 பெண்கள்) இருக்கிறார்கள்.

இளையான்குடி முகமது நாசர், ஸ்டீபன் மாசிலாமணி, அருள்ராஜ் ஆகியோர் தென் கடலோர மாவட்டங்கள் வழியாக மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்துவதாக வழக்குகள் இருக்கின்றன. இவர்கள் தவிர, பாங்காக் தொடர்பில் கல்யாண சுந்தரம், இந்தோனேஷியா தொடர்பில் ரங்கசாமி, ஜகர்தா தொடர்பில் இருக்கும் நாராயணசாமி பாஸ்கரன், சென்னை குமார், செளகார்பேட்டை கணேஷ் சுக்லா ஆகியோர் மீதும் வழக்குகள் இருக்கின்றன. முன்னாள் சுங்கத் துறை அதிகாரி ஒருவரும், முன்னாள் விமானப் படை கமாண்டர் ஒருவரும்கூட போதை மருந்து விவகாரத்தில் சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வெளியில் தெரிந்த குறிப்பிடத்தக்க நபர்கள் இவர்கள்தான். சொல்லப்போனால் இவர்கள் டெலிவரி புறாக்கள் மட்டுமே. தாங்கள் யாருக்காக வேலை செய்கிறோம் என்பதே இவர்களுக்குத் தெரியாது. அதிகபட்சம் தனக்கு மேலும் கீழும் இரண்டு தொடர்புகள் வரை மட்டுமே அறிவார்கள். பிரதான ஆட்கள் இவர்களுக்கு ஐம்பது தொடர்புகளுக்கு அப்பால் பாதுகாப்புடன் இருப்பார்கள். வெளி உலகத் தில் அவர்கள், கறைபடியாத அரசியல்வாதி, சமூகப் போராளி, நேர்மையாக வரி செலுத்தும் தொழிலதிபர் இப்படி ஏதாவதொரு முகத்துடன் உலவிக் கொண்டிருப்பார்கள்.

எப்படிக் கடத்துகிறார்கள்?

கடத்தல் நடப்பது பெரும்பாலும் கூரியர் சர்வீஸில் தான். கவரில் தொடங்கி கண்டெய்னர் வரை அனுப்புகிறார்கள். இன்ன வடிவில்தான் போதை மருந்து வருகிறது என்பதை யூகிக்க இயலாது. மைதா மாவு பாக்கெட்டுகள், ஹேர் டை பாக்கெட்டுகள், மிக்ஸி, கிரைண்டர் உட் பகுதிகள், வெங்காய மூட்டைகள் காய்கனிகள், விளையாட்டுப் பொம்மைகள், டெக்ஸ்டைல்ஸ், கடல் உணவுகள் என்று அனைத்திலும் கடத்து கிறார்கள்.

ஒரே பார்சலில் மொத்தமாகவும் அனுப்ப மாட்டார்கள். ஒரே வியாபாரத்தை பல்வேறு நிறுவன கூரியர்களில் பல்வேறு வகை பார்சல் களாக அனுப்புவார்கள். மிக அவசரம் எனில் வயிற்றுக்குள் போதை மருந்துகளைக் கடத்து பவர்களும் உண்டு. மனித வெடி குண்டுகளைப் போல இவர்களை ‘மருந்து வெடிகுண்டுகள்’ என்றே அழைக்கிறார்கள். பலூன், காண்டம் போன்றவற்றில் போதை மருந்தைப் பதுக்கி அதை விழுங்கி விடுவார்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் பாதுகாப்பான இடத்துக்கு இவர்கள் சென்றடையாவிட்டால் பாக்கெட் உப்பி வெடித்துவிடும். நேரம் தப்பினால் மரணம் நிச்சயம். சமீப காலமாக, மார்பக உள்வைப்பு அறுவைச் சிகிச்சை (Breast Implant) மூலமும் பெண்கள் போதை மருந்தை கடத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

எங்கெல்லாம் பயன்படுகிறது?

சர்வதேச நகரமான சென்னையில் போதையும் பாலியல் தொழிலும் பிரிக்க முடியாத இரு அங்கங்கள். சொல்ல வருவது ஆயிரம் ரெண்டாயிரம் சமாச்சாரங்கள் அல்ல. இவர்கள் வேறு வர்க்கம்; வேறு ரகம். சர்வசாதாரணமாக லட்சங்களையும் கோடிகளையும் வாரி இறைக் கும் மேல்தட்டு வர்க்கம். ஒரு மணி நேரத்துக்கான போதை, அரை நாளுக்கான போதை - இப்படி மணிக்கணக்கில் ஆரம்பித்து நான்கு நாட்கள் தாங்கும்படியான போதை வரை மருந்து எடுத்துக் கொள்கிறார்கள். இதை அளவு தப்பாமல் செலுத்த பிரத்யேக ஆட்களும் இருக்கிறார்கள். இதற்கென மருத்துவர்களை வைத்துக்கொள்பவர்களும் உண்டு.

உதாரணத்துக்கு கேட்டமைன். சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சில ‘பப்’ களில் கேட்டமைன் தாராளப் புழக்கத்தில் இருக்கிறது. அரை ஸ்பூன் அளவு கேட்டமைனின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய். இதனை ஐந்து டோஸ் என்கிறார்கள். ஐந்து பேர் கூட்டணி போட்டு வாங்கிக்கொள்ளலாம். சுமார் ஆறு மணி நேர போதைக்காக இவ்வளவு பெரிய தொகை. இதை மதுவுடன் கலந்து அருந்துபவர்களும் உண்டு. தவிர, மூக்கில் நுகர்வது, நாக்கில் உணர்வது, ஊசியாக செலுத்தி கொள்வது என போதை மருந்து நுகர்வில் பல ரகங்கள் இருக்கின்றன. பொதுநலன் கருதி அவற்றையெல்லாம் விரிவாக இங்கே விவரிக்க முடியவில்லை.

எப்படித் தப்பிக்கிறார்கள்?

போதைப் பொருள் நடமாட்டத்தை கண் காணித்துத் தடுக்க ‘நார்க்கோட்டிக்ஸ் கண்ட்ரோல் பீரோ’, ‘நார்க்கோட்டிக்ஸ் இன்டெலிஜென்ஸ் பீரோ,’ வருவாய் புலனாய்வு இயக்குநரகம், மத்திய சுங்கம் மற்றும் கலால் துறை, ‘சென்ட்ரல் பீரோ ஆஃப் நார்க்கோட்டிக்ஸ்,’ காவல் துறை ஆகிய அமைப்புகள் இருக்கின்றன. போதைப் பொருள் குற்றங்களுக்கு இந்திய போதைப் பொருள் தடுப்புச் சட்டம் 1985-ன் கீழ் மரண தண்டனையே அளிக்கலாம். ஆனால், இந்தியா வில் இதுவரை அப்படி யாரும் தண்டிக்கப் பட்டதில்லை. ஆறேழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அரிதான சில வழக்குகளில் ஆயுள் தண்டனையும் மட்டுமே அளிக்கிறார்கள்.

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க, சென்னை உள்ளிட்ட 15 இடங்களில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுகள் இருக்கின்றன. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒரு கிலோவுக்கும் குறைவாக கடத்துவதை குறைந்தளவு என்றும், 19 கிலோ வரை நடுத்தர அளவு என்றும், 20 கிலோவுக்கு மேல் வணிக ரீதியிலான கடத்தல் என்றும் குறிப்பிடுகிறார்கள். 19 கிலோ வரை போதைப் பொருள் கடத்தினால் சட்டம் ஒழுங்கு போலீஸார் வழக்கு பதிவு செய்கின்றனர். 20 கிலோவுக்கு மேல் கடத்தப்பட்டால் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. எனினும், இவை அனைத்துமே கண் துடைப்புக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.

சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை தொடர்பான வழக்குகளை விசாரிக்க மூன்று சிறப்பு நீதிமன்றங்கள் இருக்கின்றன. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 300 வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. இதில், பெரும்பகுதி வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தப்பி விடுகிறார்கள். கண் துடைப்புக்காக காவல் துறையினர் இலக்கு நிர்ணயித்து வழக்குகளைப் பதிவு செய்வதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

ஐந்து கிராமுக்கு குறைவாக ஹெராயின், ஒரு கிலோவுக்கு குறைவாக கஞ்சா பறிமுதல் செய்யும் வழக்குகளுக்கு அதிகபட்சம் ஆறு மாதம் மட்டுமே சிறை தண்டனை. எனவே, எவ்வளவு பிடித்தாலும் குறைந்த அளவுக்கு மட்டுமே முதல் தகவல் அறிக்கைகள் பதியப்படுகின்றன. போதைப் பொருட்களை மூன்று முறை கடத்திப் பிடிபட்டவர்கள் மற்றும் 20 கிலோ அளவுக்கு கடத்தி சிக்கும் நபர்களை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து மாதந்தோறும் அவர்களைப் பற்றி அறிக்கை அளிக்க வேண்டும். இதுவும் முறையாக பின்பற்றப்படுவது இல்லை.

அரசு நினைத்தால் கட்டுப்படுத்த முடியாதா?

‘போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப் படுத்தவே முடியாதா?’ கலால் துறை உயரதிகாரி ஒருவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, “சென்னை போன்ற சர்வதேசத் தொடர்புகள் நிறைந்த நகரத்தில் உயர் ரக போதையையும் மேல்தட்டு பாலியல் வியாபாரத்தையும் முற்றிலுமாக ஒடுக்க முடியாது. ரஷ்யாவி லிருந்து மட்டும் சென்னைக்கு மாதா மாதம் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் வந்து இறங்குகிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே சென்னையைச் சுற்றிப்பார்க்கவா வருகிறார்கள்? இவர்களை சுற்றிப் பார்க்க உள்ளூரிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான மேல்தட்டு வர்க்கத்தினர் வருவார்கள்.

தொழிலதிபர்கள் தமிழகத்தில், சென்னையில் ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடு செய்திருப்பார்கள். ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுத்திருப்பார்கள். போதையும் பாலியல் தொழிலும் அந்நிய முதலீட்டுடனும் சுற்றுலா தொழிலுடனும் நெருக் கமான தொடர்புடையவை. எனவே, போதை மருந்துக் கடத்தலை இறுக்கிப் பிடித்தால் அந்நிய முதலீடுகளும் சுற்றுலா வர்த்தகமும் பாதிக்கப்படும். அதனால் தான், ஆயிரம் விதிகள் இருந்தாலும் வாய்மொழி உத்தரவுகளே போதை மருந்துகளை கண்டும் காணாமல் இருக்கச் செய்கின்றன. இதுதான் எதார்த்தமும்கூட’’ என்றார் அந்த அதிகாரி.

உடல், மன பாதிப்புகள் என்ன?

போதை மருந்துகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மனநலம் மற்றும் போதை மீட்பு மருத்துவரான மோகன வெங்கடாஜலபதியிடம் பேசினோம். “மது பாதிப்பு குடிநோயாளிகளின் மீட்பு சதவீதம் 40 %. ஆனால், ‘ஒப்பியாய்டு’ (போதை மருந்துகள்) மருந்து நோயாளிகள் எனப்படும் இவர்களை 2 - 3 % வரை மட்டுமே மீட்க முடியும். ஒருமுறை விழுந்து விட்டால் மீள்வது மிகச் சிரமம்.

வாடை வராது என்பதால் போதை மருந்து உபயோகிப்பவர்களை ஆரம்பத்தில் கண்டு பிடிப்பது சிரமம். பெரும்பாலும், நோய் முற்றிய நிலையிலேயே தெரியவருவதால் குணப்படுத்துவது சிரமமாகி விடுகிறது. போதை மருந்து தொடர்ந்து பயன்படுத்தினால் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் மரணம் நிச்சயம். முதலில் நரம்பு மண்டலம் பாதிக்கப் பட்டு, பின்பு சிறுநீரகம், ஈரல், நுரையீரல் இவையும் படிப்படியாகப் பாதிக்கப்படும். ஆரம்பக் கட்டத்தில் மனரீதியாக மனப் பதற்ற நோயில் தொடங்கி மனப்பிறழ்வு, மாயக்குரல் கேட்பது, மாய பிம்பங்கள் தோன்றுவது போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டு இறுதியில் மரணமும் நிகழ்ந்துவிடும்’’ என்றார்.

இந்தியாவில் 8,71,000 பேர் ஹெராயின் பயன்படுத்துகிறார்கள்

’உலகிலுள்ள 15 - 64 வயதுக்குட்பட்ட போதைப் பொருள் நுகர்வோரில் 18 சதவீதம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். சர்வதேச போதைப் பொருள் சந்தையின் முக்கிய இலக்காகி இருக்கிறது இந்தியா’ என்கிறது போதை மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா. அமைப்பு. ’இந்தியாவில் 1.07 கோடி பேர் மது அல்லாத மிகவும் ஆபத்தான போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள்’ என்கிறது சமூக நலன் மேம்பாட்டு அமைச்சகத்தின் புள்ளிவிவரம். இந்தி யாவில் 8,71,000 பேர் ஹெராயினும், 6,74,000 பேர் ஓப்பியமும் பயன்படுத்துகிறார்கள் என்கிறது உலக டிரக் அறிக்கை.

சென்னை - 4 சதவீதம் பேர் கேட்டமைன் கடத்துகிறார்கள்

சுங்கத் துறை மற்றும் ’டிரக் கமிஷன் ஆஃப் இந்தியா’ ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ‘சென்னை விமான நிலையத்துக்கு சராசரியாக ஓர் ஆண்டுக்கு 12 மில்லியன் பேர் வந்து செல்கிறார்கள். இவர்களில் 4 சதவீதம் பேர் கேட்டமைன் கடத்துவதாகச் சொல்லப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னை விமான நிலையத்தில் சுமார் இரண்டரை லட்சம் டன் அளவுக்கு கேட்டமைன் பிடிபட்டிருக்கிறது. ஒரு கிலோ கேட்டமைனின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 லட்சம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x