Last Updated : 08 Mar, 2014 12:00 AM

 

Published : 08 Mar 2014 12:00 AM
Last Updated : 08 Mar 2014 12:00 AM

புகைபிடிக்காதீங்க ப்ளீஸ்- கவுன்சலிங் கொடுக்கும் எஸ்.ஐ

பொதுஇடங்களில் புகைபிடிப் பவர்களை பிடித்து, அவர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சென்னை மாம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ்.ராஜா.

சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் எஸ்.ராஜா. கடந்த 29 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வரும் இவர், சிறு வயதில் இருந்தே புகை பிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இப்பழக்கத்துக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து விழிப்புணர்வு பணிகளை செய்து வருகிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, “புகைபிடிக்கும் ஒவ்வொரு மனிதரும் தன்னையும் எரித்துக் கொண்டு, அருகில் இருக்கும் மற்றவர் களையும் அழிக்கிறார்். ஒவ்வொரு முறையும் புகையை உள்ளே இழுக்கும்போது சுவாச உறுப்புகள் மட்டுமல்லாது அனைத்து உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில் 'போலியோ' என்ற நோய் இப்போது கிடையாது. கடந்த 20 வருட கடுமையான முயற்சிக்கு கிடைத்த பலன் இது. போலியோ குறித்து மக்களிடம் ஏற்பட்ட விழிப் புணர்ச்சி மட்டுமே இந்த நோய் ஒழிக்கப்பட்டதற்கு முதன்மையான காரணம். அதே போன்ற ஒரு விழிப் புணர்ச்சியை புகைபிடிக்கும் பழக்கம் உள்ள வர்களிடமும் உருவாக்க வேண்டும். இந்த விழிப்புணர்வை கொண்டுவந்தால் போதும், எல்லாம் சரியாகிவிடும்.

என்னுடன் பணிபுரியும் சக காவலர்களிடம் புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதலில் கவுன்சலிங் கொடுத்தேன். அதனால் சிலர் திருந்தினார்கள். இதைத் தொடர்ந்து நான் காவல் பணிக்கு செல்லும் இடங்களில் என் கண்ணில் படும் புகைபிடிக்கும் அனைவரையும் பிடித்து கவுன்சலிங் கொடுத்து வரு கிறேன். நான் போலீஸ் உடையில் இருப்பதால் என்னை எதிர்த்து பேச முடியாமல், நான் சொல்வதை கேட்டே தீரவேண்டும் என்கிற ஒரு கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. அவர்களின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு சில நாட்களுக்கு பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு மீண்டும் பேசுவேன். இப்படி தொடர்ச்சியாக செய்ய ஆரம்பித்ததில் பலர் திருந்தியிருக்கிறார்கள். இப்படி திருந்தியவர்கள் மூலம் மேலும் பலரும் என்னிடம் கவுன்சலிங்கிற்காக வந்தனர்.

பின்னர் புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒரு துண்டுப் பிரசுரம் தயார் செய்தேன். அதை நான் செல்லும் இடங்களிலெல்லாம் விநியோகம் செய்ய ஆரம்பித்தேன். எனது செயலை பாராட்டி சில சமூக நிறுவனங்கள் விருதுகளை வழங்கின.

இந்திய மக்கள் தொகையில் 12 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இதனால் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் இந்தியாவில் மட்டும் மரணம் அடைகின்றனர். விழிப்புணர்வு இல்லாதது மட்டுமே இதற்கு காரணம். அந்த விழிப்புணர்வை கொடுக்க நினைக்கும் நபர்களும் மிகக்குறைவு. மற்றவர்களை குறைகூறுவதைவிட நானே களத்தில் இறங்கி விட்டேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x