Published : 01 Dec 2014 01:22 PM
Last Updated : 01 Dec 2014 01:22 PM

நாளிதழ்கள் மத்தியில் புரட்சி

வாசகர் திருவிழா வேலூர் வேலூரில் நேற்று நடந்த 'தி இந்து' தமிழ் வாசகர் திருவிழாவில் எழுத்தாளர் இமையம் 'தி இந்து' தமிழ் நாளிதழில் ஓராண்டாக வெளிவந்த கட்டுரை தொகுப்புகளை ஆய்வறிக்கையாக, வாசகர்களிடம் சமர்ப்பித்து ஒவ்வொன்றாக விமர்சித்தார்.

அப்போது அவர் கூறியது: "காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் தொடங்கிய பிறகும்கூட நாளிதழ்களுக்கு வாழ்க்கை இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. அந்த கேள்வியை தகர்த்தெறிந்து இலக்கியம், சமூகம், அரசியல், வரலாறு என்று பல பகுதிகளைக் கொண்டு வெளிவந்துள்ள இந்து தமிழ் நாளிதழை படிக்க தோன்றுகிறது. நீதிமானே இது நியாயமா? என்ற கட்டுரையில் நாம் அறியப்படாத பல தகவல்கள் திரட்டி வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு தோற்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கட்டுரை உளவியல் ரீதியாகவும், சமூக சிந்தனையுடனும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக கல்வியின் நிலை, குஜராத் கலவரம், இந்திய ராணுவ பலம் - பலவீனம் போன்ற கட்டுரைகள் சிறப்பானவை. நெல்சன் மண்டேலா, நேரு, இரட்டை மலை சீனிவாசன், அண்ணா போன்ற தலைவர்களின் கட்டுரைகள் குறிப்பிட வேண்டியவை. தீண்டாமையை எதிர்த்து குரல்கொடுத்த அயோத்திதாசன் பெயரை துணிச்சலாகப் பயன்படுத்தி புரட்சியை ஏற்படுத்தியது இந்து தமிழ். வாக்கியத்தில் பிழை இருக்கலாம். ஆனால், கருத்துகளில் பிழை இல்லை. முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கை, நாம் மறந்துவிட்டோம். அவரைப் பற்றிய கட்டுரையை வெளியிட்டுள்ளது இந்து. பிராமணர்களாகவும், தலித்களாகவும் யாரும் பிறப்பது இல்லை என்ற செய்தியை வெளியிட்டுள்ளது காலத்துக்கு கிடைத்த வெற்றி.

இயற்கை சார்ந்த விஷயங்களுக்கு, நிலவியல் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து எழுதுகிறார்கள். இஸ்ரோவுக்கு சவால் என்றும் எழுதுகிறார்கள். ராக்கெட்டால் என்ன பயன் என்றும் எழுதுகிறார்கள். செய்யூர் அனல்மின் திட்டத்தால் சுற்றுச்சுழல் பாதிப்பு குறித்து கட்டுரை எழுதியுள்ளனர். அவர்கள் கொடுக்கின்ற தகவல் தவறு என்று யாரும் விமர்சனம் செய்யவில்லை. நம்பகத்தன்மையை உருவாக்கி உள்ளனர். மோடியை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளனர். மோடிக்கு திறந்த மடல் என்ற கட்டுரையை வெளியிட மன வலிமை அதிகம் வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x