Last Updated : 17 Dec, 2015 10:45 AM

 

Published : 17 Dec 2015 10:45 AM
Last Updated : 17 Dec 2015 10:45 AM

தொடர் மழையால் வேலையிழப்பு எதிரொலி : டெல்டா மாவட்டங்களில் இருந்து வேலைதேடி கேரளா செல்லும் தொழிலாளர்கள்

தொடர்ந்து பெய்த கனமழையால் கட்டுமானப் பணி உள்ளிட்ட தொழில் கள் முடங்கியதால், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்காக கேரள மாநிலத்துக்குச் சென்ற வண்ணம் உள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நாள் முதல் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட் டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மேலும், சம்பா சாகுபடிக்கான பணி களை விவசாயிகள் கடந்த செப்டம் பர் மாதமே முடித்துவிட்டனர். நடவுப் பணி முடிந்த பிறகு விவசாயத் தொழிலாளர்களுக்கு வயல் வேலைகள் கிடைப்பது குறைவு. அறுவடை காலம் தொடங்கும் வரை கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட வேலைகளில் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபடுவர். இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு வேலைகளும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலைக்காக தினமும் கேரள மாநிலம் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் மூலம் சென்றவண்ணம் உள்ளனர். கேரளாவில் ரப்பர், மிளகு தோட்டங்களிலும், அன்னாசிப் பழத் தோட்டங்களிலும் தினமும் வேலை கிடைப்பதாலும், கட்டுமானப் பணி கிடைப்பதாலும் இங் கிருந்து ஏராளமானோர் செல்கின்றனர்.

காரைக்காலில் இருந்து எர்ணா குளம் செல்லும் டீ கார்டன் எக்ஸ் பிரஸ் ரயிலில் நாள்தோறும் 50-க் கும் குறையாமல் தொழிலாளர்கள் கேரளாவுக்குச் செல்கின்றனர்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ராஜவேல் கூறியபோது, “தீபாவளி முடிந்துவிட்டால் இங்கு வேலை குறைவு, வயலில் நடவு நட்ட பிறகு அறுவடை ஜனவரி மாதம் தான் நடைபெறும். இந்த இடைப்பட்ட 2 மாதம் வேலை இருக்காது. அப்போது கட்டுமானம் உள்ளிட்ட வேறு தொழில் களுக்கு சென்று வேலை செய்வோம்.

இங்கு மழை பெய்துவரும் நிலை யில், கேரளாவில் தற்போது மழை இல்லை. அங்கு தினமும் வேலை கிடைக்கிறது. இப்போது இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் நாங்கள் பொங்கல் பண்டிகைக்கு ஊர் திரும்பிவிடுவோம். பண்டிகை முடிந்ததும் சம்பா நெல் அறுவடை பணிகள் தொடங்கிவிடும். எனவே, அறுவடைக் காலம் வரும் வரை குடும்பத்தைக் காப்பாற்ற கேரளா வுக்குச் செல்கிறோம்.

அங்குள்ள தோட்டங்களில் தமிழர்கள் தான் அதிகம் வேலை செய்கின்றனர். நான்கைந்து பேராக சேர்ந்து சிறிய அறையை வாடகைக்கு எடுத்து தங்கி வேலை செய்வோம். மதியம் வேலை பார்க்கும் இடத்திலேயே சாப்பாடு போடுகிறார்கள். இரவு மட்டும் சமைத்துக் கொள்வோம். 8 மணி நேரம் வேலை செய்தால் ரூ.600 சம்பளம் கிடைக்கும். செலவு போக நாளொன்றுக்கு ரூ.500 மிச்சமாகும்” என்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மருதாநல்லூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு கூறியபோது, “மழைக்காலம் தொடங்கிவிட்டால் வேலைதேடி கேரளாவுக்குச் சென்றுவிடு வோம். நான்கைந்து ஆண்டுகளாக நான் சென்று வருகிறேன்.

கட்டுமான வேலை செய்து வருகிறேன். நாளொன்றுக்கு ரூ.700 சம்பளம் தருகிறார்கள். சொந்த ஊரில் வேலை பார்த்தால் ரூ.500 வரை கிடைக்கும். ஆனால், அந்தப் பணம் வீடு போய்ச் சேராது.

வேலை அதிகமாக இருப்பதால், பாதி சம்பளத்தை மது அருந்தி செலவழித்துவிடுவோம். ஆனால், கேரளாவில் மதுக்கடைகள் அதிகம் இல்லை. வேலை முடிந்து ஓய்வு எடுக்கத் தான் நேரம் இருக்கும். மது அருந்த நேரமிருக்காது. எனவே, கிடைக்கும் பணத்தை மிச்சப்படுத்தி, மாதம் ஒருமுறை ஊருக்கு வந்து வீட்டில் கொடுத்துவிட்டுச் செல்வோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x