Published : 29 Dec 2015 10:09 AM
Last Updated : 29 Dec 2015 10:09 AM

தற்காலிக துப்புரவு தொழிலாளர் ஊதியத்தை உயர்த்த கோரிக்கை - உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்

தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:

தற்காலிக துப்புரவு தொழிலாளர் ஊதியத்தை உயர்த்த கோரிக்கை

சென்னை

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தற்காலிக துப்புரவு தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.500 ஊதியம் வழங்க வேண்டும் என்று வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சி.டோமினிக் சேவியர், ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ சேவையில் கூறியதாவது:

சென்னையில் வெள்ளத்துக்கு பிறகு, குப்பை களை அகற்றுவதற்காக மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஆற்றிய பணி மகத்தானது. மற்ற வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்யமுடியும். துர்நாற்றம் வீசும் குப்பைகளை அகற்ற சகிப்புத்தன்மை, மனப்பக்குவம், அர்ப்பணிப்பு உணர்வு தேவை. அத்தகைய பணியை மேற்கொள்ளும் மாநகராட்சி தற்காலிக துப்புரவு தொழிலாளர்களுக்கு தினமும் ரூ.300 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. இது அவர்களுக்கு போதுமானதாக இருக்காது. மாநகரையே சுத்தப்படுத்தும் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ள இத்தொழிலாளர்களுக்கு மனமுவந்து தினமும் ரூ.500 ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னை மாநகராட்சியில் 5 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர் களுக்கு தினமும் ரூ.295 வழங்கப்படுகிறது. மழை பாதிப்பின்போது, அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களது நாள் ஊதியத்தை உயர்த்தும் அதி காரம் அரசுக்கு மட்டுமே உள்ளது’’ என்றனர்.

***

மேற்கு மாம்பலத்தில் ஏடிஎம்கள் இயங்காததால் மக்கள் அவதி

சென்னை

மேற்கு மாம்பலத்தில் வங்கி ஏடிஎம் மையங் கள் இயங்கவில்லை என ‘உங்கள் குரல்’ சேவை மூலம் ஒரு வாசகர் புகார் தெரிவித்துள்ளார்.

மேற்கு மாம்பலத்தை சேர்ந்த வாசகர் எஸ்.கணேஷ், ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ தொலைபேசி சேவையை தொடர்பு கொண்டு கூறியதாவது:

சமீபத்தில் கனமழை பெய்தபோது, எங்கள் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. வங்கிகள், ஏடிஎம் மையங்களில் மழைநீர் புகுந்தது. இதனால், நெட்ஒர்க் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, எங்கள் பகுதியில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களும் செயல்படவில்லை. தற்போது வெள்ளம் வடிந்து 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. எனினும், எங்கள் பகுதியில் பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் இன்னும் செயல்படாமலேயே உள்ளன. இதனால், அவசரத்துக்கு பணம் எடுக்க முடியவில்லை. இதுகுறித்து வங்கிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவ்வாறு கணேஷ் கூறினார்.

இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக் கப்பட்ட இடங்களில் மேற்கு மாம்பலமும் ஒன்று. இங்கு தொலைபேசி கேபிள்கள் சேதம் அடைந்துள்ளதால் வங்கியின் நெட்ஒர்க் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. அனைத்து ஏடிஎம் மையங்களும் விரைவில் செயல்படத் தொடங்கும்’’ என்றனர்.

***

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவை உடனே வெளியிட வேண்டும்

சென்னை

ஏழு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் எழுத்து தேர்வு முடிவை உடனே வெளியிட வேண்டும் என்று ‘உங்கள் குரல்’ சேவையில் பல வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்களை நேரடியாக நியமிக்க அரசு தேர்வுத் துறை சார்பில் கடந்த மே 31-ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.

எழுத்துத் தேர்வுக்கு 150 மதிப்பெண். இதி்ல் தேர்ச்சி பெறுபவர்கள், ஒரு காலி இடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சாரத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்ய அரசு முடிவு செய்திருந்தது. நேர்காணலில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண், கூடுதல் கல்வித் தகுதிக்கு 5 மதிப்பெண், முன்அனுபவத்துக்கு 2 மதிப்பெண், நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு 8 மதிப்பெண் என 25 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டது. எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண் இறுதி பணி நியமனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது.

இந்நிலையில், இந்த நியமன முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அரசின் பணி நியமன முறைக்கு தடை விதித்த நீதிமன்றம், எழுத்து தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண் இரண்டின் அடிப்படையிலும் பணி நியமனம் செய்ய உத்தரவிட்டது.

தேர்வு முடிந்து 7 மாதங்கள் ஆகியும், நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை என்று ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ சேவையில் ஏராளமான வாசகர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நேரடி ஆய்வக உதவியாளர் நியமனம் தொடர் பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தேர்வு முடிவுகள் குறித்து எதுவும் சொல்ல இயலாது’’ என்றனர்.





அன்புள்ள வாசகர்களே...

'தி இந்து' தமிழ் நாளிதழ் உங்களோடு இன்னும் நெருக்கமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு இந்தப் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. வழக்கமாக நீங்கள் எழுதும் கடிதங்கள், மின்னஞ்சல்கள், 'தி இந்து' அலுவலகத்துடனான தொலைபேசி தொடர்புகள் இவற்றையும் தாண்டி, இந்தத் தொழில் நுட்பம் நமக்குள்ளே கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் நீங்கள் தரும் தகவல்களை செய்தியாளர்கள் மூலம் சரி பார்த்து செய்தியாக்க காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறுமுனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் எண்ணங்களையோ... அளிக்க நினைக்கும் புதிய தகவலையோ பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் பதிவில் உள்ள தகவல்கள் போதாதபட்சத்தில், நாங்களே உங்களைத் தொடர்புகொள்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x