Published : 31 Jan 2014 12:00 AM
Last Updated : 31 Jan 2014 12:00 AM

சென்னை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைக்கு நூறு வயது- விழாவில் 100 ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகின்றன

சென்னை பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தொடங்கப்பட்டு இந்த ஆண்டு நூறாண்டு ஆகிறது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூரும் வகையில் 100 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட உள்ளன.

தாய் பல்கலைக்கழகம்

தென்னிந்தியாவில் உள்ள பழமை யான பல்கலைக்கழகங்களுக்கு தாய் பல்கலைக்கழகமாக விளங்குவது சென்னை பல்கலைக்கழகம் தான். 1857-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக் கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டன.

156 ஆண்டு பழமைவாய்ந்த சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையானது இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறை என்ற பெயரில் 1914-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. துறையின் தலைவராக எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் நியமிக்கப்பட்டார்.

4 துணைவேந்தர்கள்

அவருக்குப் பின்னர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதர், கே.கே.பிள்ளை என அடுத்தடுத்து துறைத் தலைவர்களாக பணியாற்றினர். ஆரம்பத்தில் பி.எச்டி., எம்.லிட். ஆகிய படிப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுவந்தன. 1976-ம் ஆண்டிலிருந்துதான் எம்.ஏ., எம்.பில். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சர் வில்லியம் மேயர், கே.ஏ.நீல கண்ட சாஸ்திரி, நீதிபதி பி.ராஜ கோபாலன் உள்பட 8 புகழ்பெற்ற நினைவு அறக்கட்டளைகள் ஏற்படுத் தப்பட்டு ஆண்டுதோறும் சொற் பொழிவுகள் நடத்தப்படுகின்றன. 4 பல்கலைக்கழகத் துணைவேந்தர் களை உருவாக்கிய பெருமையையும் பெற்றிருக்கிறது வரலாற்றுத்துறை. தற்போதைய துணைவேந்தர் பி.தாண்டவன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஜி.விஸ்வநாதன், கொடைக் கானல் அன்னை தெரசா மகளிர் பல் கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.ஜானகி, திருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.ஜெகதீசன் ஆகியோர் வரலாற்றுத் துறையின் முன்னாள் மாணவர்களே.

100 ஆய்வுக்கட்டுரைகள்

மேலும், தற்போது இங்கிலாந்தில் ஐ.எப்.எஸ். அதிகாரியாக பணியாற்றும் மெகபூப் பாட்சா, குஜராத் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரியும் நெடுஞ்செழியன் ஆகியோர் சென்னை பல்கலைக்கழக வரலாற்றுத்துறை வழங்கிய முத்துக்கள்.

நூற்றாண்டு கொண்டாட்டத்துக் கான நிகழ்ச்சிகளைப்பற்றி வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் ஜி.வெங்கட்ராமன் கூறியதாவது:

நூறாண்டு விழாவை முன்னிட்டு 100 ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஒரு தொகுப்பை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் உதவியுடன் 3 நாள் தேசிய மாநாடும் நடத்தப்பட இருக் கிறது. அதுமட்டுமின்றி, வரலாற்றுத் துறையில் பணியாற்றும் பேராசிரியர் கள், ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.

வினாடி-வினா

மேலும், சென்னை கல்லூரிகளுக்கு இடையே வரலாறு தொடர்பான வினாடி-வினா போட்டி ஒன்றை நடத்த இருக்கிறோம். ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இதுவரை வர லாற்றுத்துறையில் சமர்ப்பிக்கப்பட்ட எம்.பில்., பி.எச்டி. ஆய்வுக்கட்டுரை விவரங்களை மாணவர் பெயர், ஆய்வு தலைப்பு, வெளியான ஆண்டு ஆகியவற்றுடன் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x