Published : 15 Jul 2016 10:58 AM
Last Updated : 15 Jul 2016 10:58 AM

சிலை சிலையாம் காரணமாம் - 8: ’க்ரீன் தாரா’ சிலை

வாமன் கியாவிடம் நடத் தப்பட்ட தொடர் விசாரணையில் டெல்லி, ஜெய்பூர், மதுரா உள்ளிட்ட இடங்களில் வாமன் கியாவுக்கு சொந்தமான 6 கிடங்குகள் தோண்டித் துருவப் பட்டன. அங்கெல்லாம் இருந்து ஐம்பொன் சிலைகள், பழமை யான கலைப் பொருட்கள் உள் ளிட்ட சுமார் 900 பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 400 பொருட்களைப் பழமையான கலைப் பொருட்கள் என உறுதிப் படுத்தியது இந்திய தொல்லியல் துறை.

சுவிட்ஸர்லாந்தின் தனியார் மியூசிய உரிமையாளரான டாக்டர் ரஸாக் என்பவர், தன்னிடம் உள்ள இந்தியாவின் பழமையான 500 கலைப் பொருட்களில் 50 சதவீதத்துக்கும் மேலானதை வாமன் கியாவிடம் இருந்தே வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்தார்.

வாமனுக்கு ஆயுள் தண்டனை

1980-ல் இருந்து 20 ஆண்டு களில் லண்டனில் உள்ள ‘சத்தபிஸ்’ ஆக்‌ஷன் ஹவுஸுக்கு ஐரோப்பா வழியாக 20 ஆயிரம் சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை விற்றிருப்பதாக கியா வாக்கு மூலம் கொடுத்திருப்பதாக நீதி மன்றத்தில் வாமன் சொன்னது போலீஸ்.

இதையடுத்து, 2008-ல் வாமனுக்கு ஜெய்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் வாமன்.

இந்தச் சூழலில் ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட, வாமன் வழக்கை நடத்திய கண் காணிப்பாளர் ஆனந்த் வத் சவாவும் ராம்சிங்கும் சொல்லி வைத்தாற்போல் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.

விசாரணையில் மந்த நிலை

அடுத்த நான்கு ஆண்டுகள் வாமன் வழக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் இழுபட்டது. இறுதியாக, ‘பொறுப்பற்ற தன்மையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது. அத னால்தான் விசாரணையில் மந்த நிலை ஏற்பட்டிருக்கிறது’ என்று காவல்துறையை சாடிய நீதிமன்றம், ‘20 ஆயிரம் கலைப் பொருட்களை வாமன் கியா வெளிநாடுகளுக்குக் கடத்தி விற்றதாகச் சொல் கிறீர்கள், இதுவரை அதில் ஒன்றைக்கூட அங்கிருந்து மீட்டு வராதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியது. வாமன் விடுதலையே அந்தக் கேள் விக்கான பதிலாகவும் அமைந்து போனது.

கடத்தலும் அன்பளிப்பும்

2003-ல் வாமன் கியா கைது செய்யப்பட்டபோது, ‘சத்தபிஸ்’ உள்ளிட்ட வெளிநாட்டு கலைப் பொருள் வியாபாரிகளுக்கு லேசான நடுக்கம் வந்தது. ‘இது திருட்டு சிலைதான்’ என்று தெரிந்தே வாங்கியவர்கள், அதை அரசு மியூசியங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து, தங்களை ‘தானப் பிரபு’க்களாக்கிக் கொண்டார்கள். ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடு களில் மியூசியங்களுக்கு அரிய பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்தால் அவற்றின் விலை மதிப்பில் 40 சதவீதம் வரை வருமான வரிவிலக்குப் பெற முடியும்.

இப்படி குறுக்கு வழியில் பலரும் வரிவிலக்கு பெறும் அதேநேரம், போலியான கலைப் பொருட்களுக்கு போலி ஆவணங் களைத் தயாரித்து அவற்றை மியூசியங்களுக்கு அன்பளிப் பாகக் கொடுத்து வரி ஏய்ப்பிலும் ஈடுபடுகிறார்கள். விலை கொடுத்து வாங்கப்படும் கலைப் பொருட் களுக்குத்தான் அது எங்கிருந்து, யாரால், எப்போது, எப்படி வாங் கப்பட்டது என்பதற்கான மூலா தாரத்தை வைத்திருக்க வேண்டும். அரசு மியூசியங்களுக்கு அன் பளிப்பாகக் கொடுக்கும் பொருட் களுக்கு அதுபோன்ற மூலாதாரம் காட்டத் தேவையில்லை. இதை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் பெரும்பாலான ஆர்ட் கேலரிகள், தங்களிடம் இருக்கும் கடத்தல் சிலைகள் உள்ளிட்ட பொருட்களை அவ்வப் போது அரசு மியூசியங்களுக்கு அருட்கொடை தந்தும் தப்பித்து வருகின்றன.

சுபாஷ் சந்திர கபூர்… இனி, இந்தத் தொடரின் பெரும் பகுதி இவரைச் சுற்றித்தான் சுழலப் போகிறது. பிரிக்கப்படாத இந்தியாவின் லாகூர் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் புருஷோத்தம் ராம் கபூர். 1949-ல் லாகூரில் இருந்து பஞ்சாப் மாநிலம் ஜலந்தருக்கு நகர்கிறது புருஷோத்தம் குடும்பம். 1962-ல் பிழைப்புக்காக டெல்லிக்கு ஜாகை மாறிய புருஷோத்தம் ராம், டெல்லியின் சவுத் எக்ஸ்டென்ஷன் மார்க்கெட்டில் ‘காங்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ்’ (Kangra Arts And Grafts) என்ற கலைப் பொருள் வர்த்தக நிறுவனத்தைத் தொடங்குகிறார்.

கிழிந்தது கபூரின் காது

இங்கே கலைப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் வியாபாரத்தில் இருக்கும் போதே சிலைக் கடத்தல் கும்பல்களோடு இவருக்கு சகவாசம் ஏற்படு கிறது. அந்த சகவாசம் அவரது குடும்பத்துக்கு பல சங்கடங்களையும் கொண்டுவந்து சேர்த்தது. ஒரு சமயம், சிலைக் கடத்தல் புள்ளிகள் புருஷோத்த மின் மூத்த மகன் சிறுவன் சுபாஷ் சந்திர கபூரை ஹரியாணா - ராஜஸ்தான் எல்லையில் வைத் துக் கடத்திக் கொண்டு போனார் கள்.

அப்போது நடந்த மோதலில் சுபாஷின் வலது காதை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடித்ததால் காது கிழிந்து போனது. இதைத்தான் இன்றளவும் கபூரின் முக்கிய அங்க அடை யாளமாக வைத்திருக்கிறது போலீஸ்.

விஷ்ணு சிலை மாயம்

இமாச்சலப் பிரதேசத்தில் சம்பா (Chamba) என்ற இடத்தில் கோயில் ஒன்றிலிருந்து 1971 மே மாதம் 6-ம் தேதி விஷ்ணு சிலை ஒன்று கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் புருஷோத்தம் ராம் கபூருக்கும் தொடர்பு இருப் பதை உறுதி செய்தது போலீஸ். அந்தச் சிலையை அதே ஆண்டு ஜூலை 23-ல் மும்பை துறைமுகத்தில் கைப்பற்றிய போலீஸார், புருஷோத்தம் ராமையும் கைது செய்தனர். இதுதான் கபூர் குடும்பத்தின் மீது பாய்ந்த முதலாவது சிலைத் திருட்டு வழக்கு.

- சிலைகள் பேசும்…

முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 7: விருஷ்னான யோகினி சிலை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x