Published : 23 Aug 2016 09:49 AM
Last Updated : 23 Aug 2016 09:49 AM

சிலை சிலையாம் காரணமாம் - 34: தீனதயாள் பின்னணி!

அமெரிக்காவில் இருந்து மே 28-ல் இந்தியா திரும்பிய பிரதீப் வி.பிலிப், ரூ.11.75 கோடி மதிப் புடைய ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிறிய சக்கரத்தாழ் வார், பூதேவி சிலைகளைக் கையோடு எடுத்துவந்தார். அதற்கு முன்பாகவே தீனதயாள், லட்சுமிநரசிம்மன் உள்ளிட்டோ ருக்கு எதிரான நடவடிக்கைகளை அவசரகதியில் தொடங்கிவிட்டது தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு (சி.ஐ.டி) போலீஸ். இதனி டையே, ஜூன் 7-ல் அமெரிக்கா சென்றிருந்த மோடியிடம் தமிழகத் துக்கு சொந்தமான ஏழு சிலை களை ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸார் ஒப்படைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலம் சிவன் கோயிலில் திருடுபோன விநாயகர், சம்பந்தர், பைரவர் சிலைகளின் படங்களை அண் மையில் பிரெஞ்சு ஆய்வு நிறு வனத்துக்கு அனுப்பி ஒப் பீடு கேட்டிருக்கிறது தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு (சி.ஐ.டி போலீஸ். அவை சேந்தமங்கலம் கோயிலுக் குச் சொந்தமானவைதான் என் பதை உறுதிப்படுத்தியிருக்கிறது பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்.

84 வயதான தீனதயாள் ஆந்திர மாநிலம் கடப்பாவை பூர்வீகமா கக் கொண்டவர். சென்னை லயோலா வில் கல்லூரிப் படிப்பை முடித்த இவர், 1965-க்கு முன்பு வரை சென்னையில் தனது அண்ணன் நடத்தி வந்த ‘ஆர்ட் கேலரி’யில் பணிபுரிந்தார். 1965-ல் அங்கிருந்து வெளியேறி தனது மகள் அபர்னா வின் பெயரில் தனியாக ‘ஆர்ட் கேலரி’ தொடங்கினார்.

தீனதயாளும் மைசூரைச் சேர்ந்த சிலைக் கடத்தல் புள்ளி யான சீதாராமய்யரும் மிக நெருங் கிய கூட்டாளிகள். மைசூர் ராஜாக் களின் ஆஸ்தான ஜோதிடர்கள் பரம்பரையைச் சேர்ந்த சீதாராமய் யர் தஞ்சைக்கு இடம்பெயர்ந்தவர். தனக்கு வாரிசு இல்லை என்பதால் தனது மனைவியின் அண்ணன் மகன் லட்சுமிநரசிம்மனை தத்தெடுத்திருக்கிறார். இந்த லட்சுமிநரசிம்மனும் தீனதயாளும் சிலைக் கடத்தல் வியாபாரத்தில் கூட்டாளிகள்.

தீனதயாளைத் தொடர்ந்து லட்சுமிநரசிம்மனுக்குச் சொந்த மான, மகாபலிபுரம் ‘ஆர்ட் கேலரி’ யில் இருந்தும் ஒன்பது ஐம்பொன் சிலைகளைக் கைப்பற்றிய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு, லட்சுமி நர சிம்மனையும் கைது செய்திருக் கிறது. கபூருடன் சஞ்சீவி அசோகன் மூலமாக தீனதயாள் தொடர்பு ஏற் படுத்திக் கொண்டு, அவருக்காக கோயில் சிலைகளைக் கடத்தி யிருக்கிறார். அதற்கான ஆவணங் களும் இப்போது கிடைத் திருக்கின்றன.

பழமை அல்லாத, தற்காலத் தில் செய்யப்படும் கலைப் பொருட் கள், கைவினைப் பொருட்கள், ஐம் பொன் சிலைகள், கல் சிற்பங் கள், மர சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து இப்போதும் அனுமதி பெற்று வெளிநாடுகளுக்கு அனுப் பப்படுகின்றன. இந்தியத் தொல் லியல் துறையிடம் முறையாக உரிமம் பெற்றவர்கள் மட்டுமே இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியும்.

இத்தகைய பொருட்களை அனுப்புவதற்கு அவை பழமை யான கலைப் பொருட்கள் இல்லை என்ற சான்றிதழை (Non-Antiquity Certificate) இந்திய தொல்லியல் துறையிடம் பெறவேண்டும். இதற் கென உள்ள படிவத்தில், வெளி நாட்டுக்கு அனுப்பவிருக்கும் கலைப் பொருள் பற்றிய விவரங் களைத் தெளிவாகக் குறிப்பிடுவ துடன், அவற்றின் புகைப்படத்தை யும் இணைக்க வேண்டும்.

உலோகச் சிலைகளாக இருந் தால் அவற்றின் பின்பக்கத் தோற் றம் குறித்த புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். போட் டோக்களின் பின்புறத்தில், அந்தப் பொருளின் நீளம், அகலம், உயரம், எடை, அது எதனால் செய்யப்பட் டது என்ற விவரங்களுடன் பொருளை அனுப்புபவரின் விவர மும் (கையெழுத்துடன்) கட்டாயம் இடம்பெறவேண்டும்.

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி யாகும் பொருளாக இருந்தால் இந்த விவரங்களை சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத் தில் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு, தொல்லியல் துறை அதிகாரிகள் குறிப்பிடும் நாளில் அந்தப் பொருட் களை கொண்டுவந்து காட்சிப் படுத்த வேண்டும். இதற்காக இந்திய தொல்லியல் துறை அலு வலகத்தில் மாதத்தில் இரண்டு நாட்கள் கலைப் பொருட்களுக்கு சான்றளிக்கும் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நடக்கும்.

தங்கள் முன்னிலையில் காட்சிப் படுத்தப்படும் கலைப் பொருட் களை இக்குழுவினர் பரிசீலனை செய்து, அவை பழமையான கலைப் பொருட்கள் இல்லை என்று தெரியவரும்பட்சத்தில் நான்கு நாட்களில் தடையின்மைச் சான் றிதழ் அளிப்பார்கள். இந்தச் சான் றிதழ் 180 நாட்கள் வரை செல்லுபடி யாகும். இப்படிச் சான்றளிக்கப் படும் பொருட்கள் முறையாக ‘பேக் கிங்’ செய்யப்பட்டு விமான நிலை யம் அல்லது துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்படும். அங்கே சுங்கத்துறை அதிகாரிகள் முன் னிலையில் மீண்டும் ‘பேக்கிங்’ பிரிக்கப்பட்டு, சான்றிதழில் குறிப் பிடப்பட்டுள்ள பொருள்தான் பார் சலில் உள்ளதா என சரிபார்க்கப் படும். இதன்பிறகு மீண்டும் ‘பேக் கிங்’ செய்யப்பட்டு ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும்.

சிலைகளைக் கடத்துபவர்கள் ஒரிஜினல் சிலையைப் போல போலி சிலையைத் தயாரித்து அந்த சிலையை வெளிநாட்டுக்கு அனுப்பப் போவதாகச் சொல்லி தொல்லியல் துறையில் சான்றிதழ் பெற்றுவிடுவர். அதையே ஆவண மாக்கி நிஜமான சிலையைப் பெட்டிக்குள் வைத்து ‘பேக்கிங்’ செய்து ஏற்றுமதி தளத்துக்குக் கொண்டுவந்துவிடுவார்கள்.

பொதுவாக, சுங்கத்துறை அதிகாரிகள், குறிப்பிடும்படியான புகார்கள் வந்தால் தவிர மற்ற நேரங்களில் இதுபோன்ற பார்சல் களை சந்தேகிப்பதில்லை. சான்றித ழில் உள்ளது போன்ற சிலை அந்தப் பார்சலில் இருக்கிறதா என்று மட்டும் பார்ப்பார்கள். அது இருந்தால் பார்சலை அனுமதித்து விடுவார்கள். அது பழமையான சிலையா, புதிதாக செய்யப்பட்ட சிலையா என்பதைப் பற்றி எல் லாம் அவர்களுக்கு எதுவுமே தெரியாது. ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் மட்டும் அந்த பார்சலை நிறுத்தி வைப்பார்கள்.

- சிலைகள் பேசும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x