Published : 03 Aug 2016 11:05 AM
Last Updated : 03 Aug 2016 11:05 AM

சிலை சிலையாம் காரணமாம் - 20: லண்டனில் பிரம்மா, பிரம்மி சிலை!

குஜராத் மாநிலத்தின் வாத்நகர் - பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊர். இதன் அருகே உள்ள நகரம் பட்டன். இங்கே ‘சகசரலிங்க தலவ்’ என்ற இடத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் திறந்தவெளி மியூசியம் ஒன்று உள்ளது. இந்த மியூசியத்தில் பழமையான சிலைகளை சேக ரித்து வைத்து பாதுகாத்து வருகிறது இந்தியத் தொல்லியல் துறை. 2006-ல் இங்கிருந்த பிரம்மா - பிரம்மி கற்சிலை திருடு போனது.

இந்தச் சிலையை லண்டனில் உள்ள ஜெர்மி நோவல்ஸ் என்பவர் தனது ‘ஆர்ட் கேலரி’யில் விற்பனைக்கு வைத்திருந்ததைத் தன்னார்வலர்கள்தான் கண்டு பிடித்தார்கள். இதுகுறித்து அவர் கள் இந்தியத் தொல்லியல் துறைக்கு தொடர் அழுத்தங்கள் கொடுத்து வந்தனர்.

தாமாகவே முன்வந்து..

இதையடுத்து, இந்திய தொல் லியல் பரப்பாய்வுத் துறையின் வதோதரா சர்க்கிள் கண்காணிப் பாளர் ஜீதேந்திரநாத் தலைமை யில் ஒரு குழுவினர் 6.11.2015-ல் லண்டன் சென்றனர். ஆனால், அதற்கு முன்பாகவே விஷயம் தெரிந்து ஜெர்மி தாமாகவே முன்வந்து அந்தச் சிலையை லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைத்துவிட்டார்.

இந்தியத் தூதரகத் தில் இருந்த பிரம்மா - பிரம்மி சிலையை ஆய்வு செய்த நமது தொல்லி யல் துறை அதிகாரிகள், ‘சகசரலிங்க தலவ்-வில் இருந்த சிலை 72 செ.மீ. உயரம் கொண்டது. ஆனால், இந்தச் சிலை 42 செ.மீ. உயரம்தான் உள்ளது. மேலும், மண் ஒட்டிய அழுக்கு இல்லாமல் சுத்தமாகவும், புதிது போன்றும் உள்ளது இந்தச் சிலை. எனவே இது சகசரலிங்க தலவ்-வில் திருடுபோன சிலையாகத் தெரிய வில்லை’ என்று சொல்லி பிரம்மா - பிரம்மி சிலையை அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டார்கள்.

பொதுவாக நம்மவர்கள், சிலை களின் அளவீடுகளை அளக்கும் போது தோராயமாகத்தான் குறிப் பிடுவார்கள். ஒருவேளை, மிகச் சரியாக குறிப்பிட்டிருந்தாலும், கடத்தல் புள்ளிகள் கடத்தப்பட்ட சிலைகளின் அடிப்பகுதி உள் ளிட்டவைகளை செதுக்கி அதன் உயரத்தைக் குறைத்துவிட முடி யும். இதையெல்லாம், கவனத்தில் கொள்ளாத இந்தியத் தொல்லி யல் துறையினர், லண்டனில் இருந்த பிரம்மா - பிரம்மி சிலை 30 செ.மீ. உயரம் குறைவாக உள்ளதைப் பெரிய கண்டு பிடிப்பாகச் சொன்னார்கள்.

அத்துடன், அந்தச் சிலை மிக நேர்த்தியாகவும் ‘ஷார்ப்’பாக இருந்ததாகவும்; அது பழமையான சிலை என்பதற்கு அதன் மீது மண் படிந்த அடையாளங்கள் எதுவும் இல்லை என்பதும் அந்தச் சிலையை நிராகரிக்க அதிகாரிகள் சொன்ன காரணங்களாகும். சிலை களுக்கு மதிப்புக் கூட்ட எத் தனையோ பம்மாத்து வேலை களைச் செய்யும் கடத்தல் புள்ளி களுக்கு சிலையில் படிந்திருக்கும் மண்ணை சுத்தம் செய்வதும், சிலைகளை மீண்டும் மெருகூட்டி ‘ஷார்ப்’ ஆக்குவதும் இயலாத காரியம் என்று தொல்லியல் வல்லுநர்கள் எப்படி முடிவுக்கு வந்தார்கள்?

நீடிக்கும் சிக்கல்கள்

கடத்தப்பட்ட சிலைகளை மீட்டுக் கொண்டு வருவதில் இந்தியத் தொல்லியல் துறை மெத்தனம் காட்டுவதாக பரவலான குற்றச்சாட்டு தொடக்கத்தில் இருந்தே உண்டு. ஆனால், அப்படி மீட்டு வருவதிலும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அமெரிக்காவின் சில மாகா ணங்களில் ‘Statute of Limitations’ என்ற சட்ட நடைமுறையை வழக் கத்தில் வைத்திருக்கிறார்கள். இதன்படி, இன்னொரு நாட்டுக்குச் சொந்தமான பழமையான கலைப் பொருட்களைப் பொதுமக்கள் பார்வையில் படும்படியாக மியூசியம் போன்ற இடங்களில் வைத்திருக்கலாம். அது, தங்கள் நாட்டுக்குச் சொந்தமானதாக கருதும் நாடுகள், மியூசியத்தில் வைக்கப்பட்டு ஐந்து ஆண்டு களுக்குள் உரிய ஆவணங்களை தந்து அதை மீட்டுச் செல்ல வேண்டும். ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டால் அந்தப் பொருளை சம்பந்தப்பட்ட நாடு உரிமை கொண்டாட முடியாது.

இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களாலும் இந்தியச் சிலை களும் கலைப் பொருட்களும் நாடு திரும்புவதில் சிக்கல் நீடிக்கிறது. அதே நேரத்தில், வெளிநாடுகளில் உரிய ஆவணங்களைக் கொடுத்து மீட்கப்படும் நமது பழமையான கலைச் செல்வங்களை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், அதை குறிப் பிட்ட தொகைக்கு காப்பீடு செய்யவேண்டும். அத்துடன் அவற்றை கப்பல் அல்லது விமானம் மூலமாக இந்தியா கொண்டு வருவதற்கு ‘கார்கோ’ கட்டணம் செலுத்த வேண் டும். இந்தச் செலவுகளுக்கு எல்லாம் யார் நிதி ஒதுக்கு வது என்பதில் நீயா, நானா போட்டி நீடிக்கிறது. இதனா லேயே, சிலைகளை இந்தியா வுக்கு மீட்டுவரும் விஷயத் தில் அதிகாரிகள் மெத் தனப் போக்குடன் செயல்படு வதாகச் சொல்லப்படுகிறது.

25 ஆண்டுகளில் 19 சிலைகள்

இந்தியாவில் இருந்து பழமை யான சிலைகள், மற்றும் கலைப் பொருட்கள் ஆயிரக் கணக்கில் வெளி நாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ள நிலையில், 1976-ல் இருந்து 2001 வரையிலான 25 ஆண்டுகளில் 19 சிலைகள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து மீட்டு வரப்பட்டதாக 2013-ல் வெளியிடப்பட்ட இந்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கை யாளரின் அறிக்கை சொல்கிறது. 2001 முதல் 2013 வரை யிலான 12 ஆண்டுகளில் ஒரு சிலைகூட மீட்டு வரப்படவில்லை என்பதும் கவலைப்பட வேண்டிய விஷயம்.

இப்போதிருக்கும் அதிகாரி கள்தான் சிலைகளை மீட்கும் விவகாரத்தில் மெத்தனப்போக் குடன் செயல்படுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில், வெளி நாடுகளுக்குக் கடத்தப்பட்ட நமது சிலைகளை மீட்க ஒரு சிறு துரும்பை ஆதாரமாகப் பிடித்துக் கொண்டு லண்டன் வரைக்கும் போய் போராடிய அதிகாரிகளும் இருந்தார்கள். அடுத்துச் சொல்லப்போகும் சம்பவம் அதற்கு உதாரணம்.

- சிலைகள் பேசும்… | ‘The India Pride Project’ உதவியுடன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x