Last Updated : 11 Oct, 2013 04:39 PM

 

Published : 11 Oct 2013 04:39 PM
Last Updated : 11 Oct 2013 04:39 PM

சிகரம் நோக்கிய பயணத்தில் இந்திரா கொய்தாரா!

வனத்தில் பிறந்து.. வனத்தில் வளர்ந்து. இயற்கையை சுவாசித்துக் கொண்டி ருக்கும் பழங்குடியின மக்களுக்கு அண்மைக்காலமாக ஏகப்பட்ட நெருக்கடிகள். வனச் சரணாலயங்களை உருவாக்குவதாக சொல்லி, அந்த மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, அவர்களை வனங்களைவிட்டே துரத்துகிறது அரசாங்கம். இப்படித் துரத்தப்படும் மக்கள் எங்கு போய் யாரிடம் கையேந்தி நிற்பார்கள் என்று இந்திரா கொய்தாரா முன்கூட்டியே தீர்க்கதரிசனமாய் யோசித்திருப்பார் போலிருக்கிறது. அதனால்தான், பழங்குடியின பெண்களை தேடித் தேடிக் கண்டுபிடித்து, கல்வியும் தொழில் பயிற்சியும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

"பத்து வருஷத்துக்கு முந்தி, எனது ஒரே பிள்ளை நிகில் கொய்தாராவை விபத்துல பறிகொடுத்துட்டோம். அவன் போன பின்னாடி, எங்களுக்கு வாழணும்கிற ஆசையே விட்டுப்போச்சு. மனதளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டுக் கிடந்த எனக்கு வாழணும்கிற எண்ணத்தை மறுபடி கொடுத்ததே பழங்குடியின மக்கள்தான். பலநேரங்கள்ல இந்த மக்களின் வாழ்க்கைச் சூழலை நான் பார்த்திருக்கின்றேன். அவங்களோட அறியாமையை கண்டு பரிதாபப்பட்ட துண்டு. இவங்களுக்காக ஏதாச்சும் செய்யணும்னு தோணுச்சு. எனக்கும் ஒரு மாற்றம் தேவைப்பட்டுச்சு. அதுக்காகவே, எனது மகன் நிகில் நினைவாக 'யுவ பரிவர்த்தன்' என்ற அமைப்பை நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2002-ல் தொடங்கினோம்" பழைய நினைவுகளில் கண்கலங்கிப் போனார் இந்திரா கொய்தாரா. தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார்

ஒரு வீட்டில் ஒரு பெண்ணுக்கு கல்வி அறிவோ தொழில் பயிற்சியோ கொடுத்துட்டா அவளால் அந்தக் குடும்பமே வளம் பெறும்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அதனால் தான் பழங்குடியினத்து பெண் குழந்தைகள் மீது நாங்கள் அதிக நாட்டம் செலுத்தினோம்.

''எங்களது யுவ பரிவர்த்தன் நிறுவனத்தின் கீழ், நீலகிரியில் 26 கிராமங்களில் 32 மையங்கள் செயல்படுது. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய பழங்குடியினத்து பெண் குழந்தைகளை தேடிப்பிடித்து அழைத்து வந்து இந்த மையங்களில் தங்க வைக்கிறோம். அவங்களுக்கு உணவு , உடை இலவசமாக கொடுத்து மீண்டும் பள்ளியில் சேர்க்கிறோம். இந்தக் குழந்தைகளை எங்களது பராமரிப்பிலேயே வைத்திருந்து அவர்கள் பள்ளிப்படிப்பை தொடர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பழங்குடியின மக்களின் சுகாதாரமும் கேள்விக்குறியாய் தான் இருக்கின்றது. உறவுகளுக்குள் திருமணங்களை நிச்சயித்துக் கொள்வதால் பல்வேறு சிரமங்களை அவர்கள் எதிர் கொள்கிறார்கள். இதெல்லாம் கூடாது என அந்த மக்களிடம் நாங்கள் தொடர்ந்து விழிப்புணர்வுவை ஏற்படுத்தி வருகிறோம்.

எங்களது 'யுவ பரிவர்த்தன்' அமைப்பின் கீழ் 350 மகளிர் சுய உதவிக்குழுக்கள் இருக்காங்க. இதன் உறுப்பினர்கள் ஐயாயிரம் பேருக்கு தையல், மெழுவர்த்தி தயாரிப்பு, கண்ணாடி ஓவியங்கள் தீட்டுவது, ஒப்பனைக் கலை, மலர் சாகுபடி, இயற்கை வேளாண்மை உள்ளிட்ட பயிற்சிகளை இலவசமாவே குடுத்துட்டு வர்றோம். இவர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்த இந்திய அளவில் ஆண்டுக்கு நான்குமுறை பொருட்காட்சிகளை நடத்துகிறோம். அதில் கிடைக்கும் லாபத்தை அவர்களே பிரித்துக்கொள்கிறார்கள்.

நீலகிரியில் எங்களது பணியை வெற்றிகரமாக செய்யமுடிந்ததால் உத்தரப் பிரதேசம், ஒரிசா, நாக்பூர், கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களிலும் கிளைகளை உருவாக்கி அங்கேயும் சேவைகளை தொடங்கினோம். இப்போது, அந்த கிளைகளை அந்தப் பகுதி மக்களே செம்மையாக செயல்படுத்தி வருகிறார்கள். இதுதானே நாங்கள் எதிர்பார்த்த மாற்றம்" வெற்றிப் புன்னகையுடன் நமக்கு விடை கொடுத்தார் இந்திரா கொய்தாரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x