Last Updated : 17 Jan, 2014 06:06 PM

 

Published : 17 Jan 2014 06:06 PM
Last Updated : 17 Jan 2014 06:06 PM

கோவை: மனித நேயத்தில் 21 குடும்பங்கள்!

ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் வசிக்கும் இல்லங்களுக்குச் சென்று உணவு வழங்கி அவர்களை மகிழ்வித்து மகிழ்ச்சியடைவது சில குடும்பங்களின் வழக்கம். ஆதரவற்றவர்களை மகிழ்வித்து மகிழ்ச்சி காண்பதை ஒரு குழுவாக இணைந்து மேற்கொண்டு வருகின்றனர் 21 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

குடும்ப விசேஷ தினங்களை கொண்டாடுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு உணவு தயாரித்து தெருவோரம் வசிக்கும் ஆதரவற்ற முதியோர், மனநலம் பாதிக் கப்பட்டவர் களுக்கு வழங்கி உதவிக்கரம் நீட்டி வருகின்றனர் ஒரு அறக்கட்டளையாக இணைந்து. மாநகரம் முழுவதும் எங்கெல்லாம் ஆதரவு இல்லாத முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித் திரிகிறார்களோ, அங்கெல்லாம் இவர்களது உணவு அளிக்கும் சேவை இருக்கும்.

ஆசிரியர், தொழில் செய்வோர், என சாதாரண நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் இந்த 21 பேரும். கோவை அறம் அறக்கட்டளை என்ற பெயரில் இணைந்து தங்களால் ஆன உதவியைச் செய்து மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருந்து வருகின்றனர். இந்த புது முயற்சிக்கு காரணமாக கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த பி.ரகுராமன் உள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு இந்த அறக்கட்டளையைத் தொடங்கினார்.

தெருவோரங்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற முதியோர்களைத் தேடிச் சென்று உணவு அளிப்பது, தேவையான உதவிகளைச் செய்வது போன்றவற்றை தனி நபராக மேற்கொண்டு வந்துள்ளார். இவரது செயல்பாடுகள் குறித்து அறிந்த மனிதநேயமிக்க 20 பேர் தங்களையும், அந்த அறக்கட்டளையும் இணைத்துக் கொண்டனர். மொத்தம் 21 பேர் உறுப்பினர்களாக உள்ள இந்த அறக்கட்டளையில் மூலம் வெளி நபர்களிடம் நிதியோ, பொருளோ வசூலிக்கப்படுவதில்லை.

தங்களுக்குள் நிதி வசூலித்து எல்லா நலத்திட்ட உதவிகளையும் செய்து வருவதாகத் தெரிவிக்கிறார் அறக்கட்டளையின் நிர்வாகி பி.ரகுராமன். பிறந்தநாள், முதியோர்களின் நினைவுநாள், திருமணநாள் ஆகிய தினங்களின்போது உணவு தயாரித்து தெருவோரம் சுற்றித் திரியும் ஆதரவற்றவர்களைத் தேடிச் சென்று வழங்கினேன். இதைக் கண்ட மற்றவர்களும் உறுப்பினர்களாக இணைந்து சேவைக்கு உறுதுணை அளித்து வருகின்றனர்.

21 பேரும் தங்களால் ஆன நிதியை சந்தாவாக கொடுப்பார்கள். அதனைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச மாதிரி வினா வங்கி புத்தகம், ஜனவரி மாதத்தின் போது தொடர்ச்சியாக வழங்கி வருகிறோம். எங்களது 21 பேரின் குடும்பங்களின் வீட்டு நிகழ்ச்சிகளின் போது உணவு தயாரித்து ஆதரவற்றவர்களுக்கு அளிக்கிறோம். இவ்வாறு மாதம், குறைந்தபட்சம் இரு முறையாவது சுமார் 400 ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கிறோம் என்றார் ரகுராமன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x