Published : 14 Dec 2014 03:42 PM
Last Updated : 14 Dec 2014 03:42 PM

கூட்டுக் குடும்பமாய் வாழும் மூத்த குடிமக்கள்: நிழல் தரும் நானா நானி இல்லம்

என்னதான் காசு பணம் இருந்தாலும் வயதான காலத்தில் மூத்த குடிமக்கள் பலர் கவனிப்பாரற்றுப் போய் விடுகிறார்கள். இதனால், அவர்களில் அநேகம் பேர் தனிமையின் கொடுமையில் விரக்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காக அமைக் கப்பட்டதுதான் கோவையிலுள்ள ‘அனன்யா நானா நானி ஹோம்ஸ்’

வசதி இருந்தும் ஆதரவற்று இருக்கும் மூத்த குடிமக்களுக்காக 2011-ல் தொடங்கப்பட்ட இந்த இல்லம் குறித்து அதை நிர்வகித்து வரும் உமாமகேஸ்வரி கூறியதாவது:

“பல்வேறு காரணங்களுக்காக பிள்ளைகள் தங்களைப் பிரிந்து போய்விடுவதால், மூத்த குடிமக்கள் மனதில் ஒரு ஏக்கம் ஏற்படுகிறது. வயதான காலத்தில் அதுபோன்ற பெரியவர்களை ஒரு கூட்டுக் குடும்பமாக வாழ வைத்தால் என்ன? என்று நானும் எனது கணவர் யுவராஜும் யோசித்தோம். அப்படி உருவானதுதான் இந்த ‘அனன்யா நானா நானி ஹோம்ஸ்’.

தொண்டாமுத்தூரில் அனன்யா ஹோம்ஸுக்காக ஒரே இடத்தில் 137 இல்லங்களை கட்டி முடித்து 2011-ல் திறந்தோம். எதிர்பார்த்ததை விட வேகமாக இங்குள்ள இல்லங்கள் புக் ஆகிவிட்டன. கருணை இல்லத்தில் வசிக்கவில்லை; நாம் நமது வீட்டில் வசிக்கிறோம் என்ற எண்ணத்தை மூத்த குடிமக்கள் மனதில் உருவாக்குவதற்காக அவரவர் வசிக்கும் இல்லங்களை அவரவர் பெயரிலேயே பதிவு செய்து கொடுத்து விடுகிறோம். அந்த வீடுகளை எங்களது பணியாளர்கள் தினமும் பராமரிப்பார்கள்.

24 மணி நேரம் மருத்துவ சேவை

இல்லத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவான டைனிங் ஹால் உண்டு. காலை ஐந்தரை மணிக்கெல்லாம் இங்கு டீ, காபி, பால் தயாராய் இருக்கும். மூன்று வேளை உணவுக்காக ஒரு நபருக்கு தினமும் 125 ரூபாய் வாங்குகிறோம். இவர்களின் அவசர மருத்துவ உதவிக்காக இங்கேயே டாக்டர், நர்ஸ்கள் ஆகியோரை 24 மணி நேரமும் பணியில் வைத்திருக்கிறோம். தியானம், யோகா வகுப்புகளும் இங்கு உண்டு. இதில்லாமல் அவ்வப்போது வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வந்து சொற்பொழிவுகள், கச்சேரிகளையும் நடத்துவோம். இவை எல்லாவற்றுக்குமாக சேர்த்து ஒரு இல்லத்துக்கு மூவாயிரம் ரூபாய் பராமரிப்புக் கட்டணம் வசூலிக் கிறோம்.

புதிய கருணை இல்லம்

இங்கு வசிக்கும் அத்தனை பேரும் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். அடுத்ததாக வடவள்ளியில் ஆரம்பித்த இரண்டாவது இல்லத்தில் 134 வீடுகளும் நிரம்பிப் போனதால் மூன்றாவதாக தாலியூரில் இன்னொரு இல்லத்தை கட்டிக் கொண்டிருக்கிறோம். இதைப் போலவே, ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கும் கட்டணமில்லாத ஒரு கருணை இல்லத்தை விரைவில் தொடங்க வேண்டும். இதுதான் எங்கள் அடுத்த திட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x