Published : 21 Nov 2013 03:56 PM
Last Updated : 21 Nov 2013 03:56 PM

ஈரோடு : அதிரடி நடவடிக்கைகளால் மக்களை கவரும் சார் ஆட்சியர்

சாலை ஆக்கிரமிப்பா... கலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறதா... போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துகிறார்களா... சமூக விரோத செயல்கள் நடக்கிறதா... உடனே, ‘அவருக்கு’ தகவல் சொல்லுங்கப்பா... என்ற பொதுமக்களின் குரல் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் ஆங்காங்கே எதிரொலிக்கிறது.

ஆக்கிரமிப்பாளர்கள், சட்ட விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் எல்லாம், ‘அவரு’ வந்தா, தப்பிக்க முடியாது என மிரண்டு போய், சுய கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இப்படி பொதுமக்களின் கொண்டாட்டத்துக்கும், தவறு செய்பவர்களின் மிரட்சிக்கும் காரணமான, ‘அவர்’ கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியாளர் சந்திரசேகர் சாகமுரி. இங்கு பதவியேற்று, 50 நாட்கள்தான் ஆகிறது என்றாலும், அவரின் நடவடிக்கைகள் அனைத்தும், அதிரடி ரகம்.

அப்படி என்ன செய்கிறார்?

இவர் கோபி சார் ஆட்சியாளராக பதவியேற்றதும், சாதாரண பொதுமக்களில் ஒருவராக, பிரபல டிபார்மெண்டல் ஸ்டோருக்கு சென்றார். அங்குள்ள பொருட்களில், காலாவதியான பொருட்களும் கலந்திருக்க, உடனே அதிரடியைத் துவக்கினார். கலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து, சீல் வைத்தது அவரது முதல் நடவடிக்கை.

அடுத்ததாய், ஆக்கிரமிப்புகளால் குறுகிப்போன சாலைகள் சார் ஆட்சியரின் கண்ணில் பட, அனைத்தையும் அகற்ற கால அவகாசம் கொடுத்தார். அதிரடியாய் அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கோபி கடைவீதி, தேர் முட்டி, வாய்க்கால் ரோடு, மார்க்கெட் பகுதி என நகரின் முக்கிய பகுதிகளில், கடைகளுக்கு முன் பந்தல் அமைப்பதில் துவங்கி, கட்டடம் கட்டப்படுவது வரை, பலவிதமான ஆக்கிரமிப்புகள் அடுத்தடுத்த நாட்களில் அதிரடியாக அகற்றப்பட்டன. அரசு மருத்துவமனை முன், பல ஆண்டுகளாக, விதிமுறைகளை மீறி இயங்கி வந்த கடைகளும் அகற்றப்பட்டன.

கோபி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, பல அடி தூரத்துக்கு வியாபாரிகள் ஆக்கிரமித்து இருந்தனர். இதனால், பயணிகள் நடந்து செல்லக்கூட இடமில்லாத நிலை இருந்தது. சார் ஆட்சியரின் கவனத்திற்கு இந்த விஷயம் போக, அதிரடியாக இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கையை கண்டித்து, பேருந்து நிலைய வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோபி பேருந்து நிலையத்தில், பேருந்துகள் வெளியில் வரும் இடத்தில், அரசு போக்குவரத்துக் கழக பூத், ஆவின் பாலகம் மட்டுமல்லாது, அம்மா குடிநீர் விற்பனை மையத்தையும், நகராட்சி அதிகாரிகள் மூலம் அகற்றி, அவற்றை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார் சார் ஆட்சியர் . இதோடு, தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யப்படுவது குறித்து இவருக்கு தகவல் கிடைக்க, அங்கு அதிரடி ஆய்வு நடத்தி, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளார்.

மக்களின் விருப்பம் என்ன?

சார் ஆட்சியரின் நடவடிக்கைகள் குறித்து, கோபி சி.டி.டி. வாட்சன் தொண்டு நிறுவன செயலாளர் அன்புச்செல்வி கூறுகையில், “சார் ஆட்சியரின் நடவடிக்கைகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், இப்போது பயணிகள் சிரமமின்றி சென்று வருகின்றனர். பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடியவராக இருப்பதாலும், புகார்களைச் சொன்னால் நடவடிக்கை உறுதி என்ற நம்பிக்கை பொது மக்களிடம் இருப்பதாலும், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பல குறைகள் தற்போது நிவர்த்தியாகி வருகின்றன. அவர் நீண்ட காலம் கோபியில் பணியாற்ற வேண்டும் என்பது எங்கள் விருப்பம்” என்றார்.

கோபி நகர அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் வேலுமணியிடம் பேசியபோது, “ அவரது நடவடிக்கைகள் வரவேற்கிறோம். ஆனால், வியாபாரிகளுக்கு உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் புரிந்து கொண்டு, உரிய கால அவகாசம் கொடுத்திருக்கலாம் என்பது எங்கள் கருத்து” என்றார்.

இ-மெயிலில் புகார் செய்யுங்க

இவரது வேகமான நடவடிக்கைகளால், கோபி சார் ஆட்சியர் அலுவலகத்தில், கடந்த சில வாரங்களாகவே, திங்கள் கிழமை தோறும் நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் நூற்றுக்கணக்கான மனுக்களை பொதுமக்கள் அளித்து வருகின்றனர். பெரும்பாலான மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதால், திருவிழா கூட்டம் கூடி வருகிறது.

இதுகுறித்து சார் ஆட்சியர் கூறுகையில்,”பொதுமக்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை நேரில் கூற முடியாதவர்கள், சார் ஆட்சியர் அலுவலக இ-மெயிலுக்கு (subcollectorgobi@gmail.com) உரிய ஆதாரங்களுடன் புகார்களை அனுப்பலாம். புகாரின் உண்மை தன்மையை பொறுத்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக பொய்யான புகார்கள் அனுப்பினால் புகார் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார் கொடுத்தவரின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கோபி சுற்றுவட்டார பகுதியில், அறக்கட்டளை என்ற பெயரில் பல லட்ச ரூபாய் மோசடி நடந்தது குறித்து, சார் ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால்தான், தற்போது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்கின்றனர் கோபி பகுதி மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x