Last Updated : 09 Oct, 2014 04:19 PM

 

Published : 09 Oct 2014 04:19 PM
Last Updated : 09 Oct 2014 04:19 PM

அரசு ஊழியர்களை உருவாக்கும் அரசு ஊழியர்கள்: ஏழை பட்டதாரிகளுக்காக கட்டணமின்றி சேவை

அரசு, வங்கிப் பணிக்கான தேர்வுகளை மையப்படுத்தி வணிக ரீதியாகப் புற்றீசல் போல தனியார் பயிற்சி மையங்கள் பெருகி வரும் வேளையில், ஏழை பட்டதாரி மாணவர்களை அடையாளம் கண்டறிந்து எவ்விதக் கட்டணமும் வாங்காமல் அவர்களை அரசு ஊழியர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அகில இந்திய ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள்.

கோவையில் உள்ள திருச்சி சாலையில் எல்.ஜி.தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது சரோஜ்பவன். அகில இந்திய காப்பீட்டு ஊழியர்களுக்கு சொந்தமான அந்த கட்டிடத்தில் டாக்டர் அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் எண்ணற்ற பட்டதாரி மாணவர்கள் புத்தகமும், கையுமாக வந்து செல்கின்றனர்.

வங்கித் தேர்வு, எல்.ஐ.சி., ரயில்வே, டி.என்.பி.எஸ்.சி. போன்ற அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இங்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இங்கு படிக்க வரும் மாணவர்களிடம் கட்டணம் வாங்குவதில்லை என்பதுதான் இந்த பயிற்சி மையத்தின் சிறப்பு.

இங்கு வழங்கப்படும் வினாத்தாள்களுக்குக்கூட மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. படிக்க வரும் பட்டதாரிகள் அனைவரும் அரசு வேலை வாய்ப்பைப் பெற வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இடைவிடாத பயிற்சி வழங்கப்படுகிறது.

பல பயிற்சி மையங்களில் கொள்ளைக் கட்டணம் வசூலித்துவிட்டு வாரத்தின் அனைத்து நாள்களிலும் போட்டியாளர்களுக்கு சொல்லிக் கொடுப்பது இல்லை. ஆனால், அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கட்டணம் வாங்காமல் வாரத்தின் அனைத்து நாள்களிலும் பயிற்சி வழங்கி வருகின்றனர். இதில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர பயிற்சியை வழங்குகின்றனர். சில நேரங்களில் புத்தகம் வாங்க முடியாத ஏழை பட்டதாரிகளுக்கு புத்தகத்தையும் கொடுத்து படிக்க வைக்கின்றனர்.

பயிற்சி மையத்தின் செலவுகளை அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் ஏற்றுக் கொள்கிறது. ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியரான கே.கணேஷ், டாக்டர் அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து ஒரு முழு நேர சேவையாக செய்து வருகிறார்.

வாரத்தில் ஒருநாள், துறை சார்ந்த திறமையாளர்களை அழைத்து வந்து பயிற்சி பெறும் மாணவர்களிடம் பேச வைத்து உத்வேகத்தை அளிக்கின்றனர். இவ்வளவும் செய்து கொடுக்கும் அவர்கள், மாணவ, மாணவிகளிடம் வைக்கும் கோரிக்கை ஒன்று மட்டும்தான். விரைந்து படித்து அரசு வேலையை வாங்குங்கள். அரசு வேலையை பெறாமல் ஓயாதீர்கள் என்பதுதான்.

இது குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கே.கணேஷ் கூறியது:

கடந்த காலங்களில் கிராமப்புற ஏழை மாணவர்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அரசு பணிகளில் வேலை வாய்ப்பு பெறுவது குறைந்து இருந்தது. தற்போது சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்தாலும் அடுத்த கட்டமாக ஏதாவது ஒரு தனியார் வேலைக்குச் சென்று குடும்பத்தை ஓட்டும் அளவுக்கு மாத வருமானம் ஈட்ட வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதில் குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு அரசு ஊழியராக வேண்டும் என நினைக்கின்றனர்.

அவ்வாறு, குறிக்கோளுடன் வரும் மாணவர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடைக்கல்லாக இருக்கிறது. வணிக ரீதியில் செயல்பட்டு வரும் மையங்களில் சென்று முழுமையாக பயிற்சி பெற முடியாமல் பாதியிலேயே விட்டுவிடுகின்றனர். அந்த மாணவர்களை கருத்தில் கொண்டுதான் எங்களது பயிற்சி மையத்தை கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆரம்பித்தோம்.

அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம், பயிற்சி மையம் இயங்குவதற்கு தேவையான இடவசதி, பொருள் உதவிகளை அளித்து வருகிறது. தற்போது, சுமார் 70-க்கும் மேற்பட்டோரை அரசு பணியாளர்களாக உருவாக்கி உள்ளோம். கோவையில் மட்டும் இல்லாமல் திருப்பூர், உதகை, மதுரை, திருச்செங்கோடு, தருமபுரி, சேலம் ஆகிய இடங்களிலும் மையத்தை அமைத்து பயிற்சி வழங்கி வருகிறோம்.

எங்களது நோக்கம் எல்லாம் பின்தங்கிய ஏழை மாணவர்கள், அரசு வேலை பெற வேண்டும். சமூகத்தில் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். வேலை பெற்று செல்பவர்களிடம் உங்களால் முடிந்தால் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் என்று கேட்கி றோம். தற்போது, வங்கித் தேர்வு, காப்பீட்டுத் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என்பதோடு மட்டும் இல்லாமல் ஐ.ஏ.எஸ். பயிற்சியையும் தொடங்கி உள்ளோம் என்றார்.

இலவச பயிற்சிக்கு வித்திட்டு வரும் அகில இந்திய காப்பீட்டு சங்கத்தின் கோட்ட பொதுச் செயலாளர் வி.சுரேஷ் கூறியதாவது:

தகுதி வாய்ந்த ஏழை மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான் எங்களது ஒரே நோக்கம். அதற்காகத்தான் இந்த சேவையை வழங்கி வருகிறோம். மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்ட மாணவர் ஒருவரை வரவழைத்து அரசுப் பணிக்கான தேர்வுகளுக்குப் பயிற்சி வழங்கி வந்தோம்.

அவரது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். திடீரென ஏற்பட்ட விபத்தில் தந்தையால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை. இதனால் பயிற்சிக்கு செல்ல வேண்டாம். ஏதாவது ஒரு வேலைக்கு உடனே சென்று குடும்பத்தை காப்பாற்றச் சொல்லுங்கள் என அந்த பட்டதாரி மாணவனின் தாயார் எங்களிடம் வந்து முறையிட்டார்.

நாங்கள் சொன்னது எல்லாம், அம்மா நீங்கள் 2 மாதம் காத்திருங்கள் வங்கித் தேர்வு முடிந்து விடும். அதுவரை அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம். அதற்குள் நிச்சயம் நல்லது நடக்கும் என்றோம். நாங்கள் கூறியது போலவே அந்த மாணவருக்கு கனரா வங்கியில் வேலை கிடைத்தது.

குடும்பச் சூழ்நிலையால் தேர்வுக்கு முன்னதாக ஏதோ ஒரு தனியார் வேலைக்கு அனுப்பி இருந்தால் நிச்சயம் அவரால் வெற்றி பெற்றிருக்க முடியாது. தற்போது அவரது குடும்பச் சூழ்நிலையே மாறிவிட்டது. இந்த மகிழ்ச்சியே எங்களுக்குப் போதும். இதுபோன்று பின்தங்கிய பொருளாதார மாணவர்களை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் அவர்களுக்கு அரசு வேலையை உறுதிப்படுத்திக் கொடுக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x