Last Updated : 11 Nov, 2013 12:00 AM

 

Published : 11 Nov 2013 12:00 AM
Last Updated : 11 Nov 2013 12:00 AM

அகரம் இப்போ சிகரம் ஆச்சு: அசத்தும் பெரம்பலூர் ஆட்சியர்

கல்வி அதிகாரிகளின் வருகை என்றாலே அரசுப்பள்ளிகள் வயிறு கலங்கியதெல்லாம் ஒரு காலம். பெரம்பலூரில் ஆட்சியர் தரேஷ் அகமதுவின் வாகனம் நம் பள்ளிக்கு எப்போது வரும் என்று மாணவர்களும் ஆசிரியர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆட்சியர் வந்தால் எந்த மிரட்சியும் இன்றி குதூகலமாகிறது பள்ளி வளாகம். அரசுப் பள்ளி குழந்தைகளின் ஒவ்வொரு பிரச்னையையும் அதன் வேர் வரை யோசித்து, அதற்கான தீர்வுகளைத் தன் மட்டத்திலேயே தீர்க்க முனைந்த வகையில் தரேஷ்அகமதுவின் பாணி அலாதியானது.

‘அ’கரத்தில் ஆரம்பித்தார் தரேஷ்அகமது தனது கனவுத் திட்டத்தை ‘அ’கர சுழி போட்டு ஆரம்பித்தது ஆரம்பப் பள்ளிகளில்தான். “அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஆசிரியர் பயிற்றுநர்களைக் களமிறக்கி, அனைத்து ஆரம்பப்பள்ளியிலும் ஒரு ஆய்வை மேற்கொண்டார் ஆட்சியர். மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த, கல்லூரி மாணவர்களைக் கொண்டு மாலைதோறும் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார்” என்கிறார் சிகரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.ஜெயராமன்.

எண்ணம் மாறச்செய்த வண்ணம்

பெரம்பலூர் மாவட்டத்தில் எங்கே சென்றாலும் ஒரு பள்ளியின் ஒட்டு மொத்தச் செயல்பாட்டைக் குறிப்பிட்ட வண்ணம் மூலம் தெரியப்படுத்த அந்த வண்ணத்தைப் பள்ளி வாயிலில் ஒட்டியிருப்பதைப் பார்க்கலாம். பச்சை, மஞ்சள், சிவப்பு மற்றும் அவற்றின் அடர்நிறங்கள் என மொத்தம் ஆறு நிறங்களில் ஒன்று பள்ளியின் செயல்பாட்டை உணர்த்துகிறது. மேலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை இந்த வண்ணங்கள் தலைமை ஆசிரியர்களிடம் ஏற்படுத்துகின்றன.

மதிப்பூதிய ஆசிரியர்கள்

அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற விஜயகுமார் பொள்ளாச்சியில் ஒரு புதுமையான திட்டத்தைச் செயல்படுத்தி வந்தார். இதையறிந்த ஆட்சியர் பெரம்பலூரில் இருந்து கல்வியாளர் படையை விஜய்குமாரிடம் அனுப்பினார். அப்படிப் பெரம்பலூர் மாவட்டத்தில் உருவானதுதான் சிகரம் அமைப்பு. ஓய்வு பெற்ற கல்வி அலுவலர்கள் நால்வர் ஒருங்கிணைப்பாளர்களாகப் பொறுப்பேற்றுள்ள இந்த அமைப்பின்கீழ், அரசுப்பள்ளியில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளை ஆசிரியப் பட்டதாரிகள் கவனித்துக்கொண்டனர். இவர்களுக்கு நான்காயிரம் ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்பட்டது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் அரசின் கவனத்தை ஈர்க்கவே, நடப்பாண்டில் மாநிலம் முழுமைக்கும் இதை அரசு அமல்படுத்தியிருக்கிறது.

சூப்பர் 30 திட்டம்

அரசுப் பள்ளி மாணவர்கள் உச்ச மதிப்பெண்களையும் அள்ள, அவர்களுக்குக் கைகொடுக்க ஆட்சியர் முன்வைத்ததுதான் சூப்பர் 30 திட்டம். “தேர்ச்சியை உயர்த்த வந்த சிகரம் அமைப்பு பல மாணவர்களை 95 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் வாங்க வைத்தது. தனியார் பள்ளிகளுக்குச் செல்லாமல் பெற்றோர்களைத் தடுத்தது இந்தத் திட்டம். மாவட்டம் முழுக்கப் பள்ளி தோறும் ஆர்வமும் திறமையும் உள்ள மாணவர்களுக்கு ஒரு தேர்வு வைத்தோம். இதில் சமூகப் பொருளாதாரக் குடும்பப் பின்னணியையும் கணக்கில் கொண்டு சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அருகிலுள்ள அரசு விடுதியில் மாணவர்கள் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்கிறார் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சி.ஜெயராமன்.

அடுத்த இலக்கை நோக்கி...

இந்தச் சாதனைகள் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளவில்லை ஆட்சியர். அடுத்த இலக்கு நோக்கி நகரத் தயாராகிக்கொண்டிருக்கிறார் அவர். “என்னுடைய இலக்கு ஒரு மதிக்கத்தக்க மாணவச் சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான். அடுத்த கல்வியாண்டில் அதற்கான பணிகளில் இறங்க இருக்கிறோம்” என்று உறுதியுடன் சொல்கிறார் தரேஷ்அகமது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x